இதரத் தென் மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் மின்சாரம் தர
நெய்வேலியில் புதிய மின் நிலையங்கள் கட்டக்கூடாது
நடுவணரசுக்குத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கண்டனம்
இந்திய அரசு சார்பில் நெய்வேலியில் 5,907 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரு அனல் மின் நிலையங்கள் நிறுவ 19.5.2011 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்விரு அனல் மின் நிலையங்களும் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும். இவ்விரு அனல் மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் தென் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது.
மின் பற்றாக்குறையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு. இந்நிலையில் தமிழகத்தில் தமிழக உழவர்கள் கொடுத்த நிலங்களில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்க வேண்டும்.இப்போது நெய்வேலி மின்சாரம் மற்ற தென் மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது. இனி புதிதாக உற்பத்தியாகும் மின்சாரத்தையும் மற்ற தென் மாநிலங்களுக்கு வழங்குவது அநீதி ஆகும். தமிழகத்தையும் அதில் வாழும் ஏழுகோடி மக்களையும் அவர்களின் மின் தேவையையும் துச்சமாகக் கருதி இந்திய அரசு செயல்படுவது மொழிவாரி மாநில உரிமைகளை சட்டை செய்யாத காலனிய ஆட்சி முறையாகும்.
கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் காவிரித் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தர மறுப்பவை. தமிழகத்தின் தண்ணீர் உரிமையை மேற்கண்ட தென் மாநிலங்களிடமிருந்து மீட்டுத்தர இந்திய அரசு சுட்டு விரலைக் கூட அசைத்ததில்லை. இப்போது மிகத் தாராளமாகத் தமிழகத்தின் கனிம வளத்தை எடுத்து மின் உற்பத்தி செய்து அதைக் கர்நாடகம், கேரளம் , ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்க இந்திய அரசு முனைவது தமிழ்நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.
அது மட்டு மின்றி, இந்திய அரசு இலங்கைக்கு மின்சாரம் தர ஒப்பந்தம் போட்டுள்ளது. புதிதாக உற்பத்தி செய்ய உள்ள நெய்வேலி மின்சாரத்தை, தமிழினத்தை அழித்த இலங்கைக்குத் தர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை நின்றதைப் போலவே இப்போழுது தமிழக மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பத் திட்ட மிட்டுள்ள செயல் தமிழினத்தின் மீது இந்திய அரசுக்குள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது.
புதிதாக உற்பத்தி செய்யும் நெய்வேலி மின்சாரத்தை ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் இந்திய அரசு வழங்கத் திட்ட மிடுவதைத் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, இந்திய அரசு நெய்வேலியில் புதிதாக அணுமின் நிலையங்கள் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி, அங்கு புதிய அனல்மின் நிலையங்களைத் தமிழக அரசின் மின் வாரியப் பொறுப்பில் கட்ட அனுமதி பெற்றுப் பணிகளைத் தொடங்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment