உடனடிச்செய்திகள்

Wednesday, June 22, 2011

PRESS RELEASE[22.06.2011]:“சமச்சீர் கல்விக் குழுவை கலைக்க வேண்டும்” – பெ.மணியரசன் பேச்சு!

"சமச்சீர் கல்விக் குழுவை கலைக்க வேண்டும்" பெ.மணியரசன் பேச்சு!

22.06.2011, சென்னை- 17.

 

"தமிழக அரசு நியமித்துள்ள சமச்சீர் கல்விக் குழுவை கலைத்து விட்டு புதிய குழுவை அமைக்க வேண்டும். சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடந்துள்ள மேல்முறையீட்டு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என சென்னை சைதாப்பேட்டையில் இன்று(22.06.2011) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.

 

சமச்சீர் கல்வியை தடை செய்யாதே! கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று மாலை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓவியர் வீரசந்தானம், பேராசிரியர் யோகீசுவரன், புலவர் அருட்கண்ணனார், திரை இயக்குநர் தங்கர் பச்சான், த.தே.பொ.க. கட்சியின் தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல், பொதுக்குழு உறுப்பினர் க.அருணபாரதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

 

திரளாக திரண்டிருந்த தோழர்களால், "சமச்சீர் கல்வியை தடை செய்யாதே, கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்து, உச்சநீதிமன்ற வழக்கைத் திரும்பப் பெறு" உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

 

ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், "சமச்சீர் கல்வியை தடை செய்வதில் தமிழக முதல்வருக்கு உள்நோக்கம் இருக்கிறது. துக்ளக் சோ அய்யர், 'சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டால் ஒரு சிலர் உயர் கல்வி பெறுவது தடைபடும்' என்று அவரது பத்திரிக்கையில் எழுதுகிறார். அவர் கூறும் 'ஒரு சிலர்' என்பது யார் என்பது அவர் கூறுவதிலிருந்தே தெரிகிறது. இப்படிப்பட்டவர்களுக்காக சமச்சீர் கல்வியை நிறுத்த முயற்சிக்கும் தமிழக அரசு, மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவு அளிப்பது தெளிவாகப் புரிகிறது.

 

சமச்சீர் கல்விக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழக அரசு அமைத்துள்ள குழுவில், சோ இராமசாமியும் இந்து முன்னணி இராமகேபாலனும் தான் சேர்க்கப்படவில்லை. அந்தளவிற்கு அக்குழு கட்டணக் கொள்ளையர்களையும், சமச்சீர் கல்வி அமைவதை விரும்பாத தமிழக அரசின் சொல்படி நடக்கும் அதிகாரிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அரசு ஆசிரியர்களோ, மாநிலக் கல்வி வாரியத்தின் ஒரு பிரதிநிதியோ நியமிக்கப்படாதது கண்டனத்திற்குரியது.

 

எனவே, இக்குழுவை கலைத்துவிட்டு, நடுநிலையாளர்களை உள்ளடக்கிய புதிய குழுவை அமைக்க வேண்டும். சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்" என்று பேசினார்.

 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குடந்தையிலும், நேற்று மதுரையில் த.தே.பொ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இருகூட்டங்களிலும், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.

 

குடந்தையில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு, ஆதி.கலியபெருமாள் (த.தே.பொ.க.) தலைமை தாங்கினார். தோழர்கள் விஷ்ணுபுரம் சரவணன், ஆவூர் கோபால் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தோழர்  விடுதலைச்சுடர் நன்றியுரையாற்றினர்.

 

மதுரை செல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மகளிர் ஆயம் தமிழக அமைப்பாளர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச்சங்கத் தலைவர் பா.இராசேந்திரன், ஹக்கீம்(தமிழக இளைஞர் முன்னணி), தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரைக் கிளை செயலாளர் கதிர்நிலவன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

 

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT