தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார்.
கவிவீச்சு
சிதம்பரத்தில் நேற்று(16.07.2010) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் "தமிழர் தொழில், வணிக, கல்வி பாதுகாப்பு மாநாடு" நடந்தது. சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்த இம்மாநாட்டிற்கு, தோழர் பெ.சவுந்திரராசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர்கள் கவிபாஸ்கர், இராசா இரகுநாதன், கோ.கவித்துவன், புலவர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கவிவீச்சு நிகழ்த்தினர்.
மலர் அரங்கம்
தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொழில், வணிகத்தை ஆக்கிரமித்துள்ள அயல் இனத்தார் குறித்த தகவல்கள் அடங்கிய மாநாட்டு மலரை குடந்தைத் தமிழ்க் கழகத்தின் செயலர் திரு. சா.பேகன் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.பு.நடராசன், பொருளியல் துறை பேராசிரியர் ஜி.இரவி, சிதம்பரம் சிறுதொழில் முனைவர் அமைப்பின் திரு. செல்வ.கதிரவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மலர் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினர்.
பாராட்டு அரங்கம்
கடந்த 09.03.2011 அன்று தஞ்சையில் மலையாள ஆலுக்காஸ் நகைக்கடை மறியல் போராட்டத்தில் சிறை சென்ற 120 த.தே.பொ.க. தோழர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, மக்கள் உரிமைப் பேரவையின் அமைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில ஐந்தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கோ.சேகர் பாராட்டுரை நிகழ்த்தினார்.
தீர்மானங்கள்
மாநாட்டுத் தீர்மானங்களை குடந்தை த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.விடுதலைச்சுடர் முன்மொழிந்தார். காசுமீர், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் வெளி மாநிலத்தவர்கள் வீடு, நிலம், மனை வாங்கத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ வழங்கப்படக் கூடாது, 51 விழுக்காட்டுப் பங்குதாரராக தமிழர்களை சேர்த்துக் கொள்ளாத வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்க்க் கூடாது, தமிழக கல்வி நிறுவனங்களில் 85 விழுக்காட்டு இடங்களை தமிழக மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 85 விழுக்காட்டுப் பணி வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவித்து வெளிமாநில அரிசி மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கு வரம்பு விதிக்க வேண்டும் என ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்பரங்கம்
மாநாட்டின் சிறப்பரங்கத்திற்கு த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் தே.அரவிந்தன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு. வெ.சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
திரைப்பட இயக்குநர் திரு வெ.சேகர் பேசும் போது, தமிழ்த் திரைப்பட உலகில் இன்று ஆதிக்கம் செலுத்தும் அயல் இனத்தாரின் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். "ஈழத்தில் நம் இனம் செத்துக் கொண்டிருந்த போது திரை உலகின் சார்பில் இராமேசுவரத்தில் நாங்கள் கண்டனக் கூட்டம் நடத்த்த் திட்டமிட்டோம். அதற்கு, இயக்குநர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், நடிகர் சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். பின்னர் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும், அதனால் வர முடியாது என்று சொல்லி விட்டனர். பின்னர் தான் தெரிந்தது, அயல் இனத்தைச் சேர்ந்த நடிகர்கள் நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்காகப் பேராட வேண்டும் என்று சொல்லிவிட்டு வர மறுத்தனர். இந்தளவிற்கு நடிகர்கள் சங்கத்தில் அயல் இனத்தார் ஆக்கிரமிப்பு உள்ளது" என்று அவர் பேசினார்.
மாநாட்டை நிறைவு செய்து பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், "தமிழ் இனம் அறிவுச் சமூகமாக திகழ்ந்து வந்த ஓர் இனம். அலெக்சாண்டருக்கு சேலத்திலிருந்து செய்யப்பட்ட வாள் தான் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் ஆய்வாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட ஓர் அறிவுச் சமூகத்தில் பிறந்த தமிழ் பொற்கொல்லர்கள் இன்று அயல் இனத்தாரின் ஆதிக்கத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நீடித்து வருகின்றது. இந்நிலையை மாற்ற, தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழிப்பணர்வுடன் அயல் இனத்தாருக்கு எதிராக அணி திரள வேண்டும்" என்று பேசினார்.
கடலூர் மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி, தஞ்சை, ஓசூர், கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க தோழர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் இந்நிகழ்வில் திரளாகப் பங்கேற்றனர். நிறைவில், தோழர் பா.பிரபாகரன் நன்றி நவின்றார்.
Post a Comment