மொழிப்போர் ஈகியருக்கு த.தே.பொ.க. வீரவணக்கம்!
1938 – 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற இந்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி மடிந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 25 அன்று 'மொழிப்போர் ஈகியர்' நினைவுநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் மொழிப்போர் ஈகியரின் நினைவிடங்களில் வீரவணக்கம் செலுத்தி, தமிழ்மொழி காக்க சூளுரை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாண்டும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
சென்னை
சென்னை வள்ளலார் நகர் மணிக்கூண்டு அருகிலிருந்து 25.01.2012 அன்று காலை 10 மணியளவில் த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட தோழர்கள் மொழிப் போர் ஈகியருக்கு வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியவாறு மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைந்தனர். பின்னர் அங்குள்ள ஈகியர் நடராசன், தாளமுத்து மற்றும் முனைவர் எஸ்.ஜெகதாம்பாள் ஆகியோரது நினைவிடங்களில் த.தே.பொ.க. சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தோழர்களிடம் மொழிப்போர் குறித்த உரையாற்றினார். இதில், செங்குன்றம் ஆ.திருநாவுக்கரசு, கிண்டி இராஜன், வெற்றித்தமிழன், நாத்திகன்கேசவன், முனைவர் வே.பாண்டியன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி
திருச்சி கீழப்பழூரில் த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் தலைமையில், 25.01.2012 அன்று காலை 10 மணியளவில் புத்தூர் உழவர் சந்தை முன்பு பேரணியாக புறப்பட்ட த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் உணர்வாளர்கள் ஈகி சின்னச்சாமி மற்றும் விராலிமலை சண்முகம் ஆகியோரது நினைவிடங்களில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இதில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு, புலவர் வீ.ந.சோமசுந்தரம், புலவர் இரத்தினவேலவர், திருக்குறள் முருகானந்தம், புதுக்குடி த.இ.மு. கிளைச் செயலாளர் காமராசு, தோழர் நிலவழகன்(த.ஓ.விஇ.), தோழர்கள் தி.மா.சரவணன், குடந்தை ஈகவரசன், இனியன், செங்கொடி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம்
இந்தி எதிர்ப்புப் போரின் போது இந்திய இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளை மார்பில் ஏந்திய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஈகி இராசேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஈகி இராசேந்திரன் சிலைக்கு தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா மாலை அணிவித்தார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், த.இ.மு. நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் மற்றும் தோழர்கள் ம.கோ.தேவராசன், கோபிநாத் உள்ளிட்ட திரளான தோழர்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இதில் பங்கேற்றனர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு
Post a Comment