உடனடிச்செய்திகள்

Friday, September 20, 2013

சென்னை திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா? தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும் - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்


சென்னை திரைப்பட விழாவில்
தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா?
தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்.

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவை சென்னையில் 21.09.2013 முதல் 24.09.2013 வரை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் சேர்ந்து நடத்துவது பாராட்டிற்குரியது. 21.09.2013 மாலை விழாவைத் தொடக்கிவைத்து தமிழக முதலமைச்சர் அவர்கள் பேருரை ஆற்ற உள்ளதும் வரவேற்கத்தக்கது. அவ்விழாவில் கன்னடத் திரைப்பட விழா, (22.09.2013 - முற்பகல்), தெலுங்குத் திரைப்பட விழா (22.09.2013 - பிற்பகல்), மலையாளத் திரைப்பட விழா (23.09.2013 – முற்பகல்) ஆகியவை நடக்க உள்ளதாகவும், அந்தந்த விழாவிலும் அந்தந்த மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் தமிழக அரசு விளம்பரத்தில் (தினத்தந்தி : 20.09.2013) குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் (24.09.2013) குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் தென் மாநிலங்கள் நான்கின் முதலமைச்சர்கள் உரையாற்றுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரலில்தமிழ்த் திரைப்பட விழாபற்றி குறிப்பேதும் இல்லை. கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்பட விழா போல் அவ்விழாவில் தமிழ்த்திரைப்பட விழா நடைபெறுகிறதா இல்லையா? ஏன் தமிழ்த் திரைப்பட விழா விடுபட்டுள்ளது? மற்ற மாநிலங்களின் அமைச்சர்கள் அவரவர் மொழித் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் போது, தொடர்புடைய தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வதாக தமிழகஅரசு விளம்பரத்தில் அறிவிக்கப் படவில்லையே ஏன்?
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்த் திரைப்பட விழாவும் இடம்பெற வேண்டும். அதில் மற்ற மாநில அமைச்சர்களைப் போல தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : சென்னை

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT