“தமிழின அமைப்புகள் தமிழ்நாடு விடுதலையைத்
தங்கள் கொள்கைப் பட்டயமாக வெளியிட வேண்டும்”
தாமரை அம்மா – இறைக்குருவனார் நினைவேந்தலில்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!
‘தென்மொழி அம்மா’ தாமைரைப்
பெருஞ்சித்தித்திரனார் மற்றும் ‘திருக்குறள் மணி’ புலவர் இறைக்குருவனார் ஆகியோரது நினைவு
மேடைகள் திறப்பு மற்றும் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(22.12.2013) காலை,
சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் நடைபெற்றது.
தென்மொழி அம்மா மேடையை
பேராசிரியர் இரா.இளவரசு அவர்களும், புலவர் இறைக்குருவனார் மேடையை உலகத் தமிழர் பேரமைப்புத்
தலைவர் திரு. பழ.நெடுமாறன் அவர்களும் திறந்து வைத்தனர். பேராசிரியர் ப.அருளியார் தலைமையேற்றார்.
தென்மொழி அவையம் திரு. மா.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினர். புலவர் கி.த.பச்சையப்பன்,
உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், பேராசிரியர் அரசேந்திரன், தந்தைப்
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் உள்ளிட்ட தமிழறிஞர்களும், தலைவர்களும்
உரையாற்றினர். திருவாட்டி இறை.பொற்கொடி, புலவர் கோ.இளவழகன், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட
பல்வேறு தமிழறிஞர்கள், கட்சி – இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது:
“பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களின் துணைவியார் திருவாட்டி தாமரைப் பெருஞ்சித்திரனார் மற்றும் ‘திருக்குறள் மணி’
அய்யா புலவர் இறைக்குருவனார் ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இங்கு நடைபெறுகின்றது.
அய்யா இறைக்குருவனார் அவர்கள், தஞ்சையில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். நான் அவரை சென்று பார்ப்பதற்குள் அவர் முடிவெய்தினார். அடுத்த சில
நாட்களில், தாமரை அம்மா அவர்கள் இறந்தார்கள்.
சாவுக்குப் பின்னும்
சான்றோர்களுக்கு வாழ்வுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களும், அய்யா இறைக்குருவனார் அவர்களும், தாமரை அம்மா அவர்களும் நம்முடன் வாழ்ந்து
கொண்டுள்ளனர். உயிரோடு இருக்கும் போது வாழ்கின்ற வாழ்வைப் பொறுத்தே, இறப்புக்குப் பின்னான
வாழ்வு அமைகிறது. இங்கு அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவிடத்திற்கு அருகில்
எழுப்பப்பட்டுள்ள பாவாணர் மற்றும் பெருஞ்சித்திரனார் ஆகியோரின் சிமெண்ட் சிலைகளை, வெண்கலச்
சிலைகளாக மாற்ற வேண்டும். தமிழுணர்வாளர்கள் அனைவரது பங்களிப்போடு, அதை செய்ய முடியும்.
நாங்களும், அதற்கு எங்களால் இயன்றப் பங்களிப்பைச் செய்கிறோம். தமிழ் இனத்தின் பெருமிதத்திற்குரிய
அடையாளமாகத் திகழுகின்ற அவர்களை நாம் போற்றுகின்ற வகையில் இதைச் செய்ய வேண்டும்.
அய்யா இறைக்குருவனார்
அவர்கள், பாலவரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது தளபதியாக செயல்பட்டவர். பெருஞ்சித்திரனாரின்
தென்மொழிக் குடும்பம், புதிய ஊழிக்குரிய புதிய சிந்தனைப் பள்ளியாக வளர்ந்து வருகின்றது.
அறிவார்ந்த தளத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்தில் மட்டுமின்றி, தமிழர்களின் வாழ்வியல்
தளத்திலும் அவர்கள் செயல்படுகின்றனர். தமிழர் வாழ்வியலின் முன்னெடுத்துக் காட்டாக அவர்களது
குடும்பம் திகழ்கின்றது.
தமிழ்த் தேச விடுதலைக்குப்
பிறகு தான் நான் சாதியை மறுப்பேன் எனச் சொல்லாமல், வாழும் போதே சாதியை மறுத்து வாழ்வது,
தமிழில் பெயரிடுவது, தனித்தமிழில் பேசுவது, தமிழ்வழியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பது
என தமிழ்த் தேசிய ஆக்கத் திட்டங்களை நடைமுறை வாழ்வில் நாம் செயல்படுத்த வேண்டும். அய்யா
பெருஞ்சித்திரனார் அவர்களது நினைவிடம் அமைந்துள்ள இம்மண்ணில் அதற்கான உறுதிமொழி நாம்
எடுக்க வேண்டும்.
தந்தைப் பெரியார் திராவிடர்
கழகத் தலைவர் அய்யா ஆனூர் செகதீசன் அவர்கள் இங்கே பேசினார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக
இருந்து செயல்பட வேண்டுமெனப் பேசினார். நாம் வரவேற்க வேண்டியக் கருத்து அது. ஆனால்
எந்தக் கொள்கையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபடுவது என வரையறுத்துக் கொண்டு செயல்பட
வேண்டும். நம் அனைவருக்கும் பொதுவான ஓர் இலக்கு, பொதுவான ஓர் இலட்சியம் இருக்க வேண்டும்.
அந்த இலட்சியம், தமிழ்நாடு விடுதலையே! இதை ஏற்று ஒவ்வொரு அமைப்பும் தங்களுடைய இலட்சியமாக
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து, தங்களது அமைப்புக் கொள்கைப் பட்டயத்தை வெளியிட வேண்டும்.
அதனடிப்படையில் தமிழின அமைப்புகளிடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
தமிழீழத்தில் சிங்களக்
குடியேற்றங்கள் நடக்கின்றன. அதைக் கண்டிக்கிறோம். கண்டிக்கப்பட வேண்டியது தான். ஆனால்,
அதை மட்டும் தான் நாங்கள் பேசுவோம், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அயலார் குடியேற்றங்களை
நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என சொல்வதுச் சரியல்ல. தமிழ்நாட்டில் குடியேறுகின்ற அயலினத்தார்,
தமிழகத்தை கலப்பினத் தாயகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். அந்த அநீதியை நம்மில் எத்தனைப்
பேர் கண்டிக்கின்றனர்? இன்றுள்ளநிலை தொடர்ந்தால், இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளில்
தமிழ்நாடு கலப்பினங்களின் தாயகமாக மாறிவிடும்.
முதலாளியவாதிகள் ஐரோப்பிய
முதலாளிய வளர்ச்சியை முன்னிறுத்தி ஐரோப்பிய மையவாதம் - Euro Centric வாதம் என்பார்கள்.
கம்யூனிஸ்டுகள், இரசியா, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை மையப்படுத்திப் பேசுவார்கள்.
அதாவது முதலாளியவாதிகள் ஐரோப்பிய மையவாதம் பேசுவார்கள். கம்யூனிஸ்டுகள் இரசிய மையவாதம்,
சீன மைய வாதம் பேசினார்கள். இவர்கள் தமிழக மையவாதம் பேசவில்லை. ஆனால், தமிழகத்தில்
ஈழவிடுதலையை மையப்படுத்தி ஈழ மையவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களும்,
தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒரே இனம்தான். ஆனால், அவர்களுடைய நாடு வேறு நம்முடைய நாடு
வேறு. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, தமிழ்நாடு விடுதலையே தமிழ்த்தேசியம். ஈழத்தமிழர்களுக்கு,
தமிழீழ விடுதலையே தமிழ்த்தேசியம் ஆகும்.
தமிழ்நாடெங்கும் வெளியார்
ஆக்கிரமிக்கப்புகள் நடக்கின்றன. அதைப்பற்றிப் பேசாமல், ஈழத்தில் நடைபெறும் சிங்களக்
குடியேற்றங்களை மட்டும் பேசுவார்கள்.
1956ஆம் ஆண்டு, இலங்கையில்
தனிச்சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வரலாற்றைப் படிக்க வேண்டும். அது தவறில்லை.
ஆனால், அதைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் 1938இல், 1948இல், 1965இல் தமிழ்நாட்டில்
நடைபெற்ற மொழிப் போராட்டங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதில்லை.
சிலர் நின்று கொண்டிருக்கும்
தேரை இழுக்க உழைக்க வேண்டுமெ என்றெண்ணி, ஓடுகின்றத் தேருக்கு வடம் பிடிப்பார்கள். அதைப்
போல, ஈழத்தின் பக்கம் தான் இப்போது ஈர்ப்பு உள்ளது என்பதால், ஈழத்துக்காக மட்டும் பேசுவது,
தமிழ்நாட்டுத் தமிழர் சிக்கல்களுக்குப் பேசுவதில்லை என்று சொன்னால், அது போலித்தனம்
இல்லையா? எனவே, தமிழ்நாடு விடுதலை என்ற இலக்கின் கீழ் நாம் ஒன்றுபடுவோம். தமிழக விடுதலைக்காக
அருந்தொண்டாற்றிய அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டுள்ள இவ்விடத்தில்
அதற்கான உறுதிமொழியை ஏற்போம்!
தனிநாடு கேட்டதற்காக,
ஏழாண்டுகள் சிறையில் போட்டால் இருப்போம். பத்துப்பேர் நாம் சிறைக்குப் போனால் புதிதாக
100 பேர் உருவாவார்கள். அமைப்பைத் தடை செய்தால், புதிய அமைப்புகள் தனிநாடு கோரி உருவாகும்.
கருப்பின மக்களின் விடுதலைக்காகப்
பாடாற்றிய நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகளாகச் சிறையில் வாடினார் எனப் பேசுகிறோம்,
எழுதுகிறோம். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகப்
படைகட்டிப் போராடியது மட்டுமின்றி, தன் குடும்பத்தையே களத்தில் நிறுத்தினார் எனப் பேசுகிறோம்,
எழுதுகிறோம். ஆனால், இவர்களைப் பின்பற்றி தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராட மாட்டோம்,
ஈகம் செய்ய முன்வரமாட்டோம் என்றால் என்ன பொருள்?
அய்யா பெருஞ்சித்திரனார்
அவர்கள் 1965இல் DIR என்ற கொடுஞ்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்,
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபட்டார். பிரிவினைவாதத் தடைச் சட்டத்தில் சிறைபட்டார்.
ஆனால், எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு விடுதலையை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. அது போல்,
அடக்குமுறைகளுக்கும், ஆள்தூக்கிச் சட்டங்களுக்கும் நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஒடுக்கும்
ஆளும் வர்க்கம் விடுதலையை எப்பொழும் தங்கத்தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள். விலை
கொடுத்துத் தான் வாங்கியாக வேண்டும்.
தேர்தல் மேனாமினுக்கி
அரசியலுக்குள் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, தமிழக விடுதலையை நாம் கொண்டு செல்ல
முடியாது. போர்க்குணமிக்கப் போராட்டங்களின் வழியே தமிழக மக்களை நாம் திரட்ட முடியும்.
தமிழக மக்கள் அதை ஆதரிக்கும் மனநிலையில் இருக்கின்றனர். இந்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும்
தமிழ் இனத்தை அந்தளவிற்கு பாதித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு விடுதலைக்கான மாற்று அரசியலை
முன்னெடுப்போம் என நாம் இங்கிருந்து உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்!”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன்
பேசினார். நிறைவில், திரு. அழ.இளமுருகன் நன்றி கூறினார். தென்மொழி குடும்பம் சார்பில்
ஏற்பாடான இந்நிகழ்வில், நூற்றுக்கும் மேற்பட்ட இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)
Post a Comment