உடனடிச்செய்திகள்

Wednesday, October 8, 2014

நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை



நோக்கியாவில் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு
இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

நோக்கியா நிறுவனத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தம் நவம்பர் 1, 2014 உடன் முடிவடைவதால் திருபெரும்புத்தூரில் உள்ள அந்த ஆலை முற்றிலும் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் வீசப்படும் ஆபத்து சூழ்ந்துள்ளது.


பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா கைபேசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2006 முதல் திருப்பெரும்புத்தூர் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் கைப்பேசித் தொழிற்சாலையை நடத்திவந்தது.

இந்நிறுவனத்திற்கு இந்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கின.

620 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய் இலாபத்தொகையாக பின்லாந்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூபாய் பத்தாயிரத்தினை தாண்டி மாத ஊதியம் கிடையாது. இந்த மண்ணைச் சுரண்டி இந்த மண்ணின் உழைப்பாளர்களைச் சுரண்டி கொழுத்தது போதாதென்று 25,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து சிக்கியுள்ளது.

நோக்கியா நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வரி ஏய்ப்பு வழக்கு காரணமாகவே திருப்பெரும்பந்தூர் தொழிலகத்தை கையகப்படுத்தாமல் விட்டு விட்டது. ஒப்பந்தத்திற்கு கைபேசி தயாரிக்கும் தொழிலகமாக நோக்கியாவை வைத்திருந்தது. அந்த ஒப்பந்தமும் நவம்பர் 1ஆம் தேதியுடன் முடிவடைவதால். நோக்கியா ஆலை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே 5,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். மீதி உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவென்பது மிகப்பெரியக் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

“இந்தியாவில் தயாரியுங்கள் (Make In India)” என்று கூவிக்கூவி அழைக்கும் நரேந்திர மோடி அரசு கண்முன்னால் நடக்கும் இந்த ஆலை மூடலை கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழக அரசும் கவலைக் கொள்ளாமல் இருக்கிறது.

இந்த அலட்சியப் போக்கு இனியும் தொடரக்கூடாது. நோக்கியா ஆலையில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கு இந்திய, தமிழக அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

நவம்பர் 1, 2014இலிருந்து குறைந்தது ஓராண்டிற்கு அத்தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கி மாற்று வேலைக்கு அவர்களை அமர்த்தும் பொறுப்பை இந்திய அரசு ஏற்கவேண்டும். அதற்கான தொகை முழுவதையும் நோக்கியா நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான ஆணையை இந்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு நோக்கியா நிறுவனம் பொறுப்பேற்று நிதி தர தவறினால் நோக்கியா நிறுவனத்தின் முதன்மை உரிமையாளர்களை தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவித்து இந்திய அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT