உடனடிச்செய்திகள்

Friday, September 4, 2015

இந்தியாவின் தமிழினப்பகையே தமிழீழம் அமையவிடாமல் தடுக்கிறது! “ஈழம் அமையும்” நூல் வெளியீட்டு விழாவில் தோழர் பெ. மணியரசன் பேச்சி

“தமிழீழச் சிக்கலில் புவிசார் அரசியல் என்பதெல்லாம் வெறும் சமாதானம்! 
இந்தியாவின் தமிழினப்பகையே தமிழீழம் அமையவிடாமல் தடுக்கிறது!”

“ஈழம் அமையும்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேச்சு!

“தமிழீழச் சிக்கலில் புவிசார் அரசியல் என்பதெல்லாம் வெறும் சமாதானம். இந்தியாவின் தமிழினப்பகையே தமிழீழம் அமையவிடாமல் தடுக்கிறது!” என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.

ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் எழுதிய “ஈழம் எழும்” நூல் வெளியீட்டு விழா, நேற்று (02.10.2015), சென்னையில் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி கவிக்கோ அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை முதல் மாலை வரை கருத்தரங்குகள் நடைபெற்றன.

காலை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ நூலை வெளியிட, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன் பெற்றுக் கொண்டார்.

“ஈழம் அமைவதன்றி வேறு எது தீர்வு?” என்ற தலைப்பில் மாலையில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், தமிழ்த் தேசம் ஆசிரியர் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசியதன் எழுத்து வடிவம்:

“ஈழம் அமையும்” என்ற இந்த இந்நூலினை சிறப்பாக எழுதியுள்ள ஊடகவியலாளர் அய்யநாதன் அவர்களே, நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள கிழக்குப் பதிப்பகத்தினரே, சிறப்புரையாற்ற வருகை தந்துள்ள சான்றோர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

தோழர் அய்யநாதன், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவதைப் போல், மிகச் சரளமான நடையிலேயே, அனைவருக்கும் புரியும்படி எளிமையான வடிவில் இந்த நூலினை எழுதியுள்ளார். நுட்பமான பல செய்திகளையும், தமிழீழப் போராட்டத்திற்கு எதிரான சூழ்ச்சிகளையும் பதிவு செய்துள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்!

“ஈழம் அமைவதன்றி வேறு எது தீர்வு?” என இந்த அரங்கிற்குத் தலைப்பிட்டிருக்கிறார்கள். தமிழீழம் அன்றி, தமிழீழச் சிக்கலுக்கு வேறு எதுவும் தீர்வில்லை. ஆனால், அதை அடைவது எப்படி என்பதில்தான் பல கருத்துகள் இருக்கின்றன.

அமெரிக்கா போன்ற பல வல்லரசு நாடுகளும், இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து தமிழீழத்திற்கு எதிராக நிற்கிறார்கள். அப்படி எதிர்க்கும் அளவிற்கு, தமிழீழம் உலகத்திற்கே எதிரானதல்ல. பின்னர், ஏன் அவ்வாறு அவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்? உலகளவில் நாட்டாண்மை செய்து கொண்டிருக்கும் அமெரிக்கா, அதற்கு இணைக்கமான வகையில் தெற்காசியாவில் இந்தியா நாட்டாண்மை செய்து கொள்ளட்டும் என விரும்புகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியாவைப் பயன்படுத்துகிறது அமெரிக்கா.

தமிழீழம் அமையக்கூடாது என உலகில் விரும்புகின்ற முதல் நாடு இந்தியா தான்! பிறகுதான், சிங்கள அரசு. மற்ற நாடுகள், தமிழீழம் குறித்து அவரவர் சூழலில் முடிவெடுத்துக் கொள்வார்கள்.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் இருக்கிறதெனில், அதைத் தடுத்து இந்தியா ஓரளவு செல்வாக்குப் பெற்றுக் கொள்ளட்டும் என்ற நிலையில் அமெரிக்கா இருக்கிறது. அதனால், அமெரிக்கர்கள் தமிழீழம் குறித்தெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய பிராந்தியக் கூட்டாளியான இந்தியாவுக்கு, எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதுவேளை, ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றியும் கொள்ளாது.

தமிழீழம் 35 இலட்சம் – 45 இலட்சம் மக்களைக் கொண்ட தாயகம். இந்தியா, ஏன் அதை ஆபத்தாகக் கருத வேண்டும்?

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், தமது மாவீரர் நாள் உரை ஒவ்வொன்றிலும் மறக்காமல் சொல்கிறார். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் மேலாதிக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், வேறெந்த நாட்டின் தலையீடும் இந்தியப் பெருங்கடலில் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்களும், அதைப் பல முறை சொல்லியிருக்கிறார். இந்திய அதிகாரிகளிடம் நேரடியாகவே பேசியிருக்கிறார். தமிழீழம் இந்தியாவின் காவல் அரணாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார். ஆனால், இந்திய அரசு இதனை ஏற்கவில்லை. ஏன்?

ஏழு கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், 8 கோடி பேர் இந்தயாவில் இருப்போம். பக்கத்தில் தமிழ் இனத்துக்கு ஒரு நாடு அமைந்தால், அது தமிழ்தட்டுத் தமிழர்களுக்கு அரசியல் பலமாக அமையும், அது ஆபத்து என்று பார்க்கிறது இந்தியா.

நம்மைவிட மக்கள் தொகையில் சிறியதாய் உள்ள பிரிட்டன் தனிநாடு. பிரான்சு தனிநாடு. இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் நம்மைவிட மக்கள் தொகையில் சிறியவை.

தமிழீழத்தில் விடுதலைப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே, தனிநாடு கேட்ட மண், தமிழ்நாடு. தனிநாடு கேட்டுக் கொண்டே, 1962ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க.வுக்கு 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் மக்களிடையே ஆதரவு இருந்தது.

ஒவ்வொரு நாட்டிற்கும், ஒரு இனத் தத்துவம் இருக்கும். சோவியத் ஒன்றியத்தில், இரசிய இனத் தத்துவம் மேலாதிக்கம் செய்தது. இரசிய இனத்தத்துவமும் பெருமிதங்களும் மேலோங்கி இருந்தன. இரசிய மொழி மேலாதிக்கம் செலுத்தியது. இவற்றின் விளைவாகவே, அது 15 நாடுகளாக பிரிந்து போனது.

அதுபோல, இந்தியாவுக்கென்று ஒரு தத்துவம் இருக்கிறது. அது ஆரிய இனத் தத்துவம். ஆரிய மொழியான சமற்கிருதமும், அதன் கிளையாய் உருவான இந்தியும் இந்தியாவின் மொழியாகப் போற்றப்படுகிறது. புதிதாக ராக்கெட் விட்டால், ஆரியபட்டா எனப் பெயர் வைக்கிறார்கள். அக்னி எனப் பெயர் வைக்கிறார்கள். திரிசூலம் என்று ஏவுகணைகுப் பெயர் வைக்கிறார்கள். ஆரிய வேதகாலப் பழம்பெருமைகளே இந்தியாவின் பெருமைகளாகப் போற்றப்படுகின்றன. இந்து மதம் அவர்களுக்கு உதவியாய் இருக்கிறது.

காசுமீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில், ஆரிய எதிர்ப்பு இருக்கிறது. அவர்கள் இந்தி சமற்கிருதத்தை எதிர்க்கிறார்கள். போராடுகிறார்கள். அவர்களையும், நம்மையும் தவிர்த்து பெரும்பாலானவர்கள் ஆரியத்துடன் சமரசம் செய்து கொண்டவர்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள், தமிழில் சமற்கிருதம் கலந்து உருவானவை. தமிழ் இல்லையென்றால் அம்மொழிகள் இல்லை. சமற்கிருதம் இல்லையென்றாலும் அம்மொழிகள் இல்லை. எனவே, சமற்கிருதத்துடன், ஆரியத்துடன் இவை சமரசம் செய்து கொண்டுவிட்டன!

தமிழ்நாடு, தனித்த இனமாக சங்க காலத்திலிருந்து ஆரிய எதிர்ப்புடன் போராடுகிறது. எனவேதான், நாம் இந்திய அரசினால் எப்பொழுதும் சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம். கருணாநிதியும் செயலலிதாவும் எவ்வளவுதான் கங்காணி வேலை பார்த்து, இனத்துரோகம் செய்தாலும், அவர்களையும் மீறி உண்மையான விடுதலைப் போராளிகள் – புதிய பிரபாகரன்கள் தமிழ்நாட்டில் தோன்றி விடுவார்கள் என்று இந்தியா அஞ்சுகிறது. வைத்துள்ளது, இந்தியா.

தோழர் அய்யநாதன் இந்நூலில், தமிழீழத்திற்கெதிரான மலையாளிகளின் சதிச் செயல்களை தனித் தலைப்பில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். “தரமற்ற மலையாளிகள்” என அவர்களை மிக நாகரிகமாக அழைத்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட், மலையாளக் குற்றக்கும்பல் (Keralite mafia) எனச் சொன்னார். அந்தளவிற்குக் கூட, சொல்லாமல் மிக நாகரிகமாக அய்யநாதன் அவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழத்திற்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரிகளின் பட்டியலையும் அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

2009ஆம் ஆண்டு தமிழீழ அழிப்புப் போரின் போது, ஒரு கட்டத்தில் இறப்புகள் அதிகமாவதை வைத்து, போரை நிறுத்திவிடலாமா என சிங்களத் தரப்பிலே, யோசிக்கிறார்கள். அப்போது, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்த மலையாளி சிவசங்கர மேனன், “போரையெல்லாம் இந்த கட்டத்திலே நிறுத்த முடியாது” எனக்கூறி அவர்களை சமாதானப்படுத்தி, போரைத் தொடர வைக்கிறார். இந்த செய்திகளையெல்லாம், இந்நூலில் அய்யநாதன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மலையாளிகளுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம்?

மலையாளிகளிடம், தமிழர் எதிர்ப்பு இயல்பிலேயே இருக்கிறது. 2012ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு சிக்கல் வந்த போது, கேரளாவிற்கு சாமி கும்பிடப் போன தமிழ்நாட்டு அய்யப்ப பக்தர்களைத் தாக்கினார்கள். தமிழக அரசு வாகனங்களைத் தாக்கினார்கள்.

மலையாளிகளை விடுங்கள். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது, தமிழீழத்தில் நடைபெற்ற துயரம் குறித்து பேசினார்களா? உத்திரப்பிரதேசத்தில், பீகாரில், பிற்படுத்தப்பட்டத் தலைவர்கள் இருக்கிறார்களே, முலாயம் சிங், லல்லு பிரசாத், அவர்கள் பேசினார்களா? மாயாவதி பேசினாரா? யாரும் அக்கறைப்படவில்லை. கவலைப்படவில்லை. பாஸ்வான் மட்டுமே இதில் விதிவிலக்கு. அவர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் நம்மோடு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

கனடா பேசியது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிஸ் எனப் பல நாடுகள் பேசின. ஆனால், இந்தியாவில் பிற மாநிலத்தவர், தென் மாநிலங்கள் உட்பட யாரும் தமிழீழப் படுகொலை தவறு என சொல்லவில்லை. அது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. அருந்ததி ராய் ஒரு கட்டுரை எழுதினார். மேதா பட்கர் ஒரு கூட்டத்தில் பேசினார். அவ்வளவுதான்.

இதுவே, பக்கத்தில் கேரளாவிலோ, ஆந்திராவிலோ அவர்களுக்கு சிக்கல் என்றால் இவர்கள் பேசுவார்கள். ஆனால், தமிழர்களுக்காகப் பேச மாட்டார்கள்.
இவர்களுக்கு நாம் என்ன தீங்கு செய்தோம்? இதுதான், இந்தியாவில் தமிழர்களின் நிலைமை!

ஒருநாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் வெளிநாட்டுக் கொள்கை. ஆரியச் சார்பு கொண்ட இந்தியாவின் உள்நாட்டுக் கொள்கை என்பது, தமிழர் எதிர்ப்பு. அதுதான், வெளிநாட்டுக் கொள்கையிலும் எதிரொலிக்கிறது. தமிழீழத்தை அது எதிர்க்கிறது.

இந்தியாவின் ஆரியச்சார்பை பலரும் சொல்லிவிட்டார்கள். இந்தியாவுக்கான சிங்களத் தூதர் கரியவாசம், “இலங்கையில் தமிழர் தவிர்த்து – இந்தியாவில் தமிழர் தவிர்த்து நாமெல்லாம் ஒரே இனம் – ஆரிய இனம்” என்று வெளிப்படையாக சொன்னார். எந்த வடநாட்டுத் தலைவரும், அது தவறு எனக் கண்டிக்கவில்லை. ஞாயமாக, அத்வானி இதனை கண்டித்திருக்க வேண்டும். மோடி கண்டித்திருக்க வேண்டும். சோனியா கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கண்டிக்கவில்லை.

இலங்கையில், தமிழர் மீதான வெறுப்பைத் தூண்டிவிட்ட சிங்கள புத்தப்பிக்கு அனகாரிக தர்மபாலாவுக்கு, இந்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அஞ்சல்தலை வெளியிட்டது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டிலே கட்டுரைகள் எழுதும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்பன்தாஸ் என்பவர், “நாங்கள் வங்காளிகள் என்பதால் எங்களை கொழும்பிலே சிறப்புடன் வரவேற்பார்கள். ஏனெனில், சிங்களர்களின் முதல் மன்னன் விஜயன், வங்கத்திலிருந்து கப்பலில் சென்றவன்” என எழுதுகிறார். (காண்க: டைம்ஸ் ஆப் இந்தியா, 25.03.2012).

எனவே, ஆரியச்சார்பு நாடான இந்தியா, தமிழினத்தை பகையாகக் கருதுகிறது. சங்க காலத்திலிருந்து, அதற்கு முந்திய காலத்திலிருந்து தொடரும் பகையை, அவர்கள் இன்னும் மறக்கவில்லை. தமிழர்கள் மறந்து விட்டார்கள். அதுதான் கோளாறு!

காவிரிச் சிக்கலை எடுத்துக் கொள்ளுங்கள். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கடுமையாக்க் கட்டளைளயிட்டு கெடு விதித்த பிறகு, பிப்ரவரியிலே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட்டார்கள். ஆனால், இன்றுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. தீர்ப்பை செயல்படுத்த மறுக்கிறார்கள். சூழ்ச்சியாக – தீர்ப்பை மட்டும் வெளியிட்டு, அதைச் செயல்படுத்தும் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

இதே இந்திய அரசு, பக்ராநங்கல் நதிச்சிக்கலில், மேலாண்மை வாரியம் அமைத்து சட்டத்தை செயல்படுத்துகிறது. நர்மதை ஆற்றுச் சிக்கலில், கிருஷ்ணா ஆற்றுச் சிக்கல்களில் தீர்ப்பாயத் தீர்ப்புகளை செயல்படுத்துகிறது.

ஆனால், காவிரிச் சிக்கலில் தீர்ப்பாயத் தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கிறது. காரணம், இங்கே தமிழினத்தை வஞ்சிக்க வேண்டுமென அது கருதுகிறது. தமிழினத்தை யார் யார் எதிர்க்கிறார்களோ, அவர்கள் பக்கம் நிற்கிறது இந்தியா. இதில், பா.ச.க, காங்கிரசு என்ற வேறுபாடில்லை. நாளை, கம்யூனிஸ்ட்டுகள் இந்திய அரசில் ஆட்சிக்கு வந்தாலும், நமக்கு இதுதான் நடக்கும்.

கேரளாவில் முல்லைப் பெரியாறு சிக்கலின் போது, சி.பி.ஐ. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிஜ்ஜூ மோல் என்ற பெண், அணைக்குள் புகுந்து அணையைக் குத்துகிறார். உச்ச நீதிமன்றம் அணை வலுவாக இருக்கிறது எனத் தீர்ப்புச் சொன்ன பிறகும், அதனை ஏற்காமல் அணையை உடைக்க வேண்டுமென மனித சங்கிலி நடத்துகிறார், கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன். நாம் பெரிதும் மதிக்கக்கூடிய, மனித உரிமைகளுக்காகப் போராடிய நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் அச்சுதானந்தனுடன் கைகோத்து நிற்கிறார். ஏனெனில், அவர்கள் ஒரே இனம்.

இதே அணுகுமுறைதான் கச்சத்தீவு சிக்கலிலும் இந்தியாவுக்கு இருக்கிறது. கச்சத்தீவு ஒருபோதும், இந்தியாவில் இருந்ததில்லை என உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கிறது இந்திய அரசு. உண்மைதான், கச்சத்தீவு ஒரு போதும் இந்தியாவில் இல்லை. அது, தமிழ்நாட்டில்தான் இருந்தது (கைதட்டல்).

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டால், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமிழினத்திற்கு எதிராகத்தான் இருப்பார்கள். ஏமாளித் தமிழர்கள் சிலர், இந்த சூழ்ச்சி புரியாமல் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதை, நாம் திருத்த வேண்டும்.

ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மருது சகோதரர்கள், பூலித்தேவன், கட்டபொம்மன் போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்த போது, எட்டப்பன், புதுக்கோட்டை சமஸ்தானம் போன்றவர்கள் காட்டிக் கொடுக்கவில்லையா?

அதுபோல, இங்கே கருணாநிதியும் செயலலிதாவும் இருக்கிறார்கள். தமிழீழச் சிக்கலில் இந்தியா – அமெரிக்கா என்ன செய்யப் போகிறதோ, அதை முன்கூட்டியே சொல்லும் Spokes personஆக, பேச்சாளராக கருணாநிதி இருக்கிறார். செயலலிதா, தமிழின உணர்வாளர்களை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக அவ்வப்போது, தீர்மானங்கள் இயற்றிவிட்டு போய்விடுவார். அ.தி.மு.க. கூட்டங்களிலே என்றைக்காவது, தமிழீழச் சிக்கல் குறித்து பேசப்பட்டிருக்குமா? அப்படி பேசினால், அம்மையார் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவார்.

நான் அடிக்கடி சொல்வதுண்டு. கருணாநிதி, வேட்டி கட்டிய செயலலிதா. செயலலிதா, சேலை கட்டிய கருணாநிதி.

தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாக ஒரு போரை நடத்தி வருகிறது இந்தியா. மீத்தேன் திட்டம் திணிப்படுகிறது. கூடங்குளம் அணுஉலை ஆலைக்குள் மேலும் மேலும் புதிய அணுஉலைகளுக்கு திட்டம் போடுகிறார்கள். தேனியிலே, நியூட்ரினோ ஆய்வகம் என கதிர்வீச்சு அபாயம் கொண்ட ஆய்வகத்தை அமைக்கிறார்கள். தமிழ்நாட்டில், நாம் அகதிகளாகத் திரியும் நிலை வரப் போகிறது.

எனவே, நமக்கு விழிப்புணர்வு வேண்டும். புதிய எழுச்சி வேண்டும்.

ஒருநாட்டின் உள்நாட்டுப் பொருளியல் கொள்கை – அரசியல் கொள்கை என்னவோ, அதுதான் வெளிநாட்டுக் கொள்கையிலும் எதிரொலிக்கும். எனவேதான், இந்திய அரசு தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒடுக்கும் தனது உள்நாட்டுக் கொள்கையை, தமிழீழத்திற்கும் விரிவுபடுத்துகிறது.

புவிசார் அரசியல் – பூகோள அரசியல் என்றெல்லாம் பேசுகிறார்கள். அவையெல்லாம் வெறும் சமாதானம் என்றே நான் கருதுகிறேன். புவிசார் அரசியல்படி, இந்தியாவுக்கு தமிழீழம்தான் பாதுகாப்பானது. வங்கப்போர் நடைபெற்ற போது, இலங்கை மேற்கு பாகிஸ்தானைத்தான் ஆதரித்தது. சீனப்போர் நடைபெற்ற போது, இலங்கை சீனாவைத்தான் ஆதரித்தது. இலங்கை, எப்பொழுதும் இந்தியாவின் பக்கம் இருந்ததில்லை. ஆனால், இந்தியா அவர்களை வலிந்து ஆதரிக்கிறது. காரணம் சிங்களர்கள் ஆரியர்கள். தமிழர்கள் ஆரியத்தை எதிர்ப்போர்!

இந்திராகாந்தி இருந்திருந்தால், ஈழம் கிடைத்திருக்கும் என்பதும் சரியல்ல. இந்திராகாந்தி ஒரு கட்டத்தில், “இலங்கையில் நடப்பது இனப்படுகொலை” எனப் பேசியது, இலங்கையை மிரட்டிப் பணியவைத்து, தமிழர்களை தம் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்றி, ஈழம் அமைப்பதற்காக அல்ல.

இந்திய அரசு, தமிழீழப் போராளிகளுக்குப் பயிற்சி கொடுத்த போது, தமிழீழக் கொள்கையில் உறுதியாக இருந்த புலிகளுக்கு மட்டமான ஆயுதங்களைக் கொடுத்தனர். டெலோ, பிளாட் போன்ற குழுவினருக்கு, நல்ல ஆயுதங்கள் வழங்கினர். இதையெல்லாம் பார்த்துவிட்டு, புலிகளே ஒரு புத்தகம் போட்டனர். “இந்தியா தமிழீழம் வேண்டும் என்பதற்காக எமக்கு ஆயுதம் அளிக்கவில்லை, இலங்கையை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே எமக்கு ஆயுதம் அளிக்கின்றனர். இதை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்” என எழுதினர்.

எனவே, இந்தியா ஒரு போதும் தமிழீழம் அமைவதை விரும்பாது. இந்தியாவுக்கு, இதை புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும்.

2009ஆம் ஆண்டு போர் நிறுத்தப்போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டிலே நாங்கள் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைத்தோம். நாங்கள், தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் “தமிழர் ஒருங்கிணைப்பு” என்றொரு கூட்டமைப்பை உருவாக்கி, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களை முடக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்க முடிவு செய்தோம்.

தஞ்சை விமானப்படைத்தள முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். அதில் 300 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இந்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. ஆனால், அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலே தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை விமானப்படைத் தள முற்றுகைப் போராட்டத்தில், பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்டிருந்தால், அது இந்தியாவுக்கு வலித்திருக்கும். ஆனால், அவ்வளவு பேரை எங்களால் திரட்ட முடியவில்லை. போர் நிறுத்தத்திற்காகப் போராடிய மற்றவர்கள் இதுபோல் நடுவண் அரசு நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. நாங்கள் வைத்தத் திட்டத்தை ஏற்கவில்லை.

அண்மையில் ஆந்திராவில் 20 தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்தோ, ஆந்திர அரசைக் கண்டித்தோ அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்., ஆளுங்கட்சித் தலைவர் செயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் ஒரு வார்த்தை பேசவில்லை. சந்திரபாபு நாயுடு, ஒரு ஆறுதல் வார்த்தைகூட சொல்லவில்லை. ஆந்திரத் தொழிலாளிகளும் செம்மரம் வெட்டுகிறார்களே, அவர்களை அப்படி சுட்டுக் கொல்ல உத்தரவிடுவார்களா?

ஆந்திராவின் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, விமான விபத்திலே பலியானதற்கு, அன்றைய முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டிலே அரசு விடுமுறை அறிவித்தார். அண்ணா இறந்ததற்கோ, பெரியார் இறந்ததற்கோ எம்.ஜி.ஆர். இறந்ததற்கோ ஆந்திராவில், கர்நாடகத்தில் விடுமுறை விட்டார்களா? இங்கே, ஓணத்திற்கு விடுமுறை விடுகிறார்கள்.

கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பதாக கர்நாடகப் பொதுப்பணித்துறை இணையதளம் சொல்கிறது. ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா தண்ணீர் இல்லை, திறந்துவிட முடியாது என்கிறார். நடுவண் அமைச்சர் பா.ச.க.வைச் சேர்ந்த சதானந்த கவுடா தண்ணீர் விட முடியாது என்கிறார். மேலும் அவர் சொல்கிறார், “இந்த விடயத்தில் நாங்கள் ஆளுங்கட்சிக்குத் துணையாக இருப்போம்” என்கிறார். தமிழ்நாட்டில் இப்படியொரு வாய்ப்பு உண்டா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி, சட்டமன்றம் செல்வதற்கே பயப்படுகிறார். சந்திக்க வேண்டியது தானே! கேட்டால், அவர் கட்சியில் 1 கோடியே 15 இலட்சம் உறுப்பினர் வைத்திருப்பதாக சொல்லுகின்றார். எங்கள் அமைப்பில், ஒரு இலட்சம் உறுப்பினர்கள் இருந்திருந்தால், செயலலிதாவை நாங்கள் ஆட்டோ ஆட்டென்று ஆட்டுவித்திருப்போம்.

இன்று நாம், அரசியல் அநாதைகளாக இருக்கிறோம். எனவே, நாம் தமிழ்த் தேசிய உணர்வு பெற வேண்டும். தமிழ்த் தேசிய எழுச்சி பெற வேண்டும். பல கோடி பேர் தேவையில்லை, தமிழ்த் தேசிய உணர்வுடன் சில இலட்சம் பேர் போதும்.

பதவி – பணம் – விளம்பரம் இவற்றுக்கு ஆசைப்படாத புதிய இளைஞர்கள், உணர்வுடன் திரண்டு போராடினால், தமிழ்நாட்டு உரிமைகளையும் மீட்க முடியும். தமிழீழத்தையும் வெல்ல முடியும்!

தமிழ்நாட்டுச் சிக்கல்களை மையப்படுத்தி நாம் செயல்பட்டாதல்தான், தமிழ்நாட்டில் நாம் மக்கள் சக்தியாக மாற முடியும். மக்கள் சக்தி நமக்குப் பெருகினால் தான் நாம் ஈழ விடுதலைக்கு உதவும் சக்தி பெறுவோம்.

ஈழத்தை மட்டும் முதன்மைப்படுத்தி தமிழ்நாட்டில் செயல்பட்டால் நாம் கருதத்தக்க மக்கள் சக்தியாக வளர முடியாது. எனவே, தமிழ்நாட்டை மையப்படுத்தி செயல்படுவோம். தமிழீழ விடுதலைக்குத் துணை நிற்போம்!

தமிழீழம் எப்போது அமையுமென்றால், இந்திய அரசைப் பணிய வைக்கும் ஆற்றல் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு வரும் போது, தமிழீழம் அமையும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

நிகழ்வில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.










போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT