தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய
நீதி விசாரணைக்கு ஆணையிடு!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!
“தமிழ்நாடு அரசே! உடனடியாக மதுவிலக்கை செயல்படுத்து! மதுஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!” எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னை இயக்கத் தலைமையகத்தில், இன்று (09.08.2015) காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. முருகன், ரெ. இராசு, கா. விடுதலைச்சுடர், க. அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அண்மையில் மறைவுற்ற தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், ‘சுகன்’ ஆசிரியர் திரு. சவுந்தர சுகன், இசையமைப்பாளர் திரு. எம்.எஸ். விசுவநாதன், தமிழறிஞர் மா.செ. தமிழ்மணி, முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம், மதுஒழிப்புப் போராளி ஈகி சசிபெருமாள் ஆகியோர்க்கு ஒருநிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமிழ்நாடு அரசே! முழு மதுவில்கை செயல்படுத்து! மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!
தமிழ்நாட்டு மக்களைச் சீரழிக்கும் மதுவை எதிர்த்து, தமிழ்நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. மதுஒழிப்புப் போராட்டக் களத்திலேயே உயிரீகம் செய்த, ஈகி சசிபெருமாள் அவர்களின் வீரமரணம், இப்போராட்டங்களை மேலும் வீரியப்படுத்தி, மாணவர்களை மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, இந்த சூழலிலாவது, தமிழ்நாடு அரசு உடனடியாக முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோருகிறது.
மது விற்பனையால் ஏற்படும் வருமான இழப்பை, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு கொண்டு செல்லும் ஏறத்தாழ 1 இலட்சம் கோடி வரித்தொகையிலிருந்து ஒரு பகுதியைக் கேட்டுப் பெற்று ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு முன் வர வேண்டுமென்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.
2. தமிழ்நாடு அரசே - மது ஒழிப்புப் போராளிகள் மீதான அடக்குமுறையைக் கைவிடு!
மது ஒழிப்புப் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென, மாணவர்களையும் பொது மக்களையும் தாக்கி வெறியாட்டம் போட்ட, தமிழ்நாடு அரசுக் காவல்துறையின் அடக்குமுறைகயை தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குமரி மாவட்டம் – உண்ணாமலைக் கடையில் நடைபெற்ற மதுக்கடை எதிர்ப்புப் போராட்டத்தில், காவல்துறையின் திட்டமிட்ட அலட்சியப் போக்கால் உயிரிழந்த ஈகி சசிபெருமாள் அவர்களின் மரணம் குறித்து, உடனடியாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.
மதுக்கடை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறையினரின் கொடுமையான தடியடிக்கு இலக்காகி, சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ஆகத்து 4 – முழு அடைப்பை முன்னிட்டு ‘முன்னெச்சரிக்கை’ நடவடிக்கை எனக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மீதும், பிணையில் வெளிவந்துள்ள போராளிகள் மீதும் உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
மதுவிலக்கு கோரி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய 3 மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையையும், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய “குற்ற”த்திற்காக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கையையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் மீதான நடவடிக்கைகளை, பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3. தமிழ்வழிக் கல்வியை அழிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆகத்து 17, 18, 19 நாட்களில் நடைபெறும் சென்னை தலைமைச் செயலக மறியல் போராட்டத்தில் திரளானோர் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும்
தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரை, அரசு பள்ளிகளில் அறிவியல், கணிதம், வரலாறு, வணிகம் முதலிய பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்கும் பிரிவுகளை (இங்கிலீசு மீடியம்) மிகத் தீவிரமாகத் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. அயல்மொழியான ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் நிலை மாணவர்களுக்கு உள்ளது. இதனால் சொந்தச் சிந்தனை ஆற்றலும் ஆளுமையும் வளராமல் போகின்றன.
எனவே தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் இதுவரை தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகள் அனைத்தையும் நீக்கி - தமிழ்வழிப் பிரிவுகள் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ்வழியில் படித்தோர்க்கு வேலை வாய்ப்பிலும் உயர்கல்விச் சேர்க்கையிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் 2015 ஆகத்து 17, 18, 19 ஆகிய நாட்களில் சென்னை தலைமைச் செயலகம் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.
இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கேற்பதோடு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மக்கள் இயக்கத்தினரும், தமிழ் மக்களும், திரளாகப் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறது.
4. செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் – நரிமணம் - பனங்குடியில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறும் இந்திய அரசு எரிபொருள் மற்றும் எரிவளி நிறுவன முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டும்!
காவிரியில் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை, சட்ட விரோதமாக மறுத்து வரும் கர்நாடக அரசு, வெள்ளமாக வரும் மிகை நீரையும் தடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், காவிரியிலும், தென்பெண்ணை ஆற்றிலும் கழிவு நீரைக் கொட்டும் அடாவடித்தனத்திலும் இறங்கியுள்ளது. இவை அனைத்தும் தெரிந்தும், இந்திய அரசு, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயலுக்குத் துணையாக நின்று வேடிக்கை பார்க்கிறது.
“காவிரி உரிமையைப் பெற்றுத் தராத இந்திய அரசே, தமிழ்நாட்டு நரிமணம் பெட்ரோலை எடுக்காதே!” என்ற முழக்கத்தை முன்வைத்து, வரும் செப்டம்பர் 28 அன்று, நாகை மாவட்டம் நரிமணம் - பனங்குடி ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய அரசு எரிபொருள் - எரிவளி நிறுவனங்களுக்குள் ஆட்கள் - வாகனங்கள் எதுவும் உள்ளே சென்று வரமுடியாத அளவிற்கு, அப்பகுதியை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்று திரட்டி மிக பெரிய அளவில் முழுநாள் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் எனக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம், உறுதியுடன் பங்கேற்கிறது. போராட்டத்தை விளக்கி காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறும். காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
Post a Comment