அயல்இனத்தாருக்கு வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு! ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கம் நேரில் சென்று ஆதரவு
சென்னை அயனாவரம் இந்தியத் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை(ICF – ஐ.சி.எப்.)யில், 1998ஆம் ஆண்டிலிருந்து வேலைப் பழகுநர் (Apprentice) முடித்த மாணவர்கள், சற்றொப்ப 5000 பேருக்கு இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மண்டலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு, சென்னை ஐ.சி.எப்.இல், புதிய பணிவாய்ப்புகள், வழங்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்லாண்டுகளாக வேலை இல்லாததால், விரக்திக்குக் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களில் சற்றொப்ப 25க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துனர். இதனைக் கண்டித்தும், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் பழகுநர் மாணவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது, கடந்த 01.10.2015 முதல், அம்மாணவர்கள் தொடர் உண்ணாப் போராட்டத்தை அறிவித்து, வெயில் – மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இம்மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களது உண்ணாப் போராட்டத்தை இந்தியத் தொடர்வண்டித்துறை முடித்து வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, 04.10.2015) அன்று தீர்மானம் நிறைவேற்றியது.
இதனைத் தொடர்ந்து, நேற்று(07.10.2015) ஏழாம் நாளாகப் போராட்டத்தை நடத்தி வரும் மாணவர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் நேரில் சென்று ஆதரவு வழங்கினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் போராட்ட மாணவர்களிடையே உரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு, போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், ஐ.சி.எப். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி, பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், தோழர்கள் இரமேசு, கவியரசன், உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் உடன் வந்தனர்.
மண்ணின் மக்களுக்கே வேலை நடக்கும் ஐ.சி.எப். பயிற்சிப்பணி மாணவர்களின் போராட்டம் வெல்க!
Post a Comment