இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம்: தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் இன்று (04.10.2015) சென்னையில் நடைபெற்றது. பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குழ. பால்ராசு, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம் – தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!
கடந்த (17.06.2015) அன்று, திரிபுராத் தலைநகர் அகர்தலாவில் நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இராமேசுவரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கடலில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்தார்.
மேலும், இத்திட்டத்திற்கு, ரூ. 22,000 கோடி செலவாகும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணக்கிட்டுள்ளதையும், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் இது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சாலை மட்டுமின்றி, தொடர்வண்டி பாதையும் அமைக்கவுள்ளதாகவும், இலங்கை அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாகவும், நடுவண் அரசின் சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மாநிலங்களவையில் 03.08.2015 அன்று தெரிவித்தார். (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 03.08.2015).
தெற்காசியப் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், தெற்காசிய நாடுகளில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு பல திட்டங்களை இந்நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. புதிய வணிக ஒப்பந்தங்களை இயற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இலங்கையை இந்திய செல்வாக்கின் கீழ் கொண்டு வர, இக் கடற் பாலம் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முனைகிறது.
தமிழ்நாடு ஏற்கெனவே வெளியார் மயமாகி வருகின்ற நிலையில், இந்த புதிய பாலத்திட்டத்தின் வழியே, தமிழ்நாட்டிற்குள் சிங்களர்களைக் கொண்டு வந்து குவிக்கவும், ஏற்கெனவே சிங்களமயமாக்கப்பட்டு வரும் தமிழீழத் தாயகத்தில், இந்தியாவிலிருந்து பீகாரிகள், உ.பி.காரர்கள் உள்ளிட்ட அயல் இனத்தாரைக் குவிக்கவுமான சதி ஏற்பாடு இது.
தமிழீழ மக்கள் வளம்பெற வேண்டுமென இந்திய அரசு விரும்பினால், தமிழீழத்தில் குவிக்ப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப் பெற்று, அங்குள்ள வேளாண் நிலங்களை தமிழீழ மக்களிடம் திரும்ப ஒப்படைத்தல், தமிழீழ மக்கள் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தருதல், சிங்களமயமாக்கத்தை உடனடியாக நிறுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். ஆனால், அதையெல்லாம் செய்வதை விட்டு, “பாலம் அமைக்கிறோம்” எனச் சொல்வது, தமிழர் தாயகங்களை வெளியார் மயமாக்கி அழிக்கும் சதிச் செயலையே அம்பலப்படுத்துகிறது. எனவே, இத்திட்டத்தை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம், இப் புதிய பாலத் திட்டத்தை கண்டிப்பதுடன், இத்திட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது.
-> வேலை வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும், சென்னை ஐ.சி.எப். வேலைப் பழகுநர்களுக்கு (Apprentice) உடனடியாக வேலை அறிவித்து, அவர்களது தொடர் உண்ணாப்போராட்டத்தை இந்திய அரசு முடித்து வைக்க வேண்டும்!
சென்னை அயனாவரம் இந்தியத் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை(ICF – ஐ.சி.எப்.)யில், 1998ஆம் ஆண்டிலிருந்து வேலைப் பழகுநர் (Apprentice) முடித்த மாணவர்கள், சற்றொப்ப 5000 பேருக்கு இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மண்டலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு, சென்னை ஐ.சி.எப்.இல், புதிய பணிவாய்ப்புகள், வழங்கப்பட்டு வருகின்றன.
பல்லாண்டுகளாக வேலை இல்லாததால், விரக்திக்குக் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களில் சற்றொப்ப 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துனர். இதனைக் கண்டித்தும், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் பழகுநர் மாணவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது, கடந்த 01.10.2015 முதல், அம்மாணவர்கள் தொடர் உண்ணாப் போராட்டத்தை அறிவித்து, வெயில் – மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இம்மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களது உண்ணாப் போராட்டத்தை இந்தியத் தொடர்வண்டித்துறை முடித்து வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
Post a Comment