“சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் துன்புற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இராசீவ்காந்தி கொலை வழக்கில், தடா சட்டத்தின்கீழ் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில், பேரறிவாளன் சொல்லாத செய்தியை தான் சேர்த்துக் கொண்டதாக அன்றைய விசாரணை அதிகாரி தியாகராசன் அண்மையில் குற்றவுணர்வுடன் கூறியிருந்தார். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், தடா வழக்கின் கீழ் இராசீவ்காந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு எவ்வாறு சோடிக்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
மேலும், அவ்வழக்கின் மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இராசீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்படாத புதிர்கள் பல இருக்கின்றன, அவர்களுக்குத் தண்டனை குறைப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஏழு தமிழர்களும் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். மன உளைச்சல்களுக்கு ஆளாகித் துன்புறுகின்றனர். தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு இராபர்ட் பயாஸ் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், நாளை (22.06.2017) தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறை மானிய கோரிக்கை வருகிறது. இந்த ஏழு தமிழர்களுக்கும் முதல் கட்டமாக, உடனடி நிவாரணமாக நீண்டகால பரோல் வழங்கி வெளியே அனுப்புமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com
Post a Comment