உடனடிச்செய்திகள்

Tuesday, August 15, 2017

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!

"தமிழர் மீட்சி - இன முழக்கம்" தமிழ்நாடடெங்கும் பரப்புரை இயக்கம்!



 

பேரன்புடையீர், உங்களைத் தேடி வந்திருக்கிறோம்! “ஆதாயமில்லாமல் வருவீர்களா” என்று நீங்கள் நினைக்கலாம்! அரசியல் வாதிகள் உங்களுக்குத் தந்த அனுபவம் அவ்வாறு உள்ளது!
 
நாங்கள் எந்தப் பதவிக்கும் தேர்தலில் போட்டியிடு வதில்லை. எந்தத் தேர்தல் கூட்டணியிலும் சேர்வ தில்லை. வேறு வகையான எந்தப் பதவிக்கும் முயல்வ தில்லை. தன்னலப் பயன் கருதா தமிழர் பணி மற்றும் தமிழ்ப்பணி என்று செயல்படுகிறோம்!
 
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொள்ளும் தன்னலப் பதவிச்சண்டையே தமிழ்நாட்டு அரசியல் என்று ஆகிவிட்டது. ஆனால், இந்திய அரசோ இந்தச் சண்டையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு உரிமைகளையும், தமிழர்களின் வாழ்வுரி மைகளையும் ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அவ்வுரிமைகளைக் காப்பாற்றும் அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை!
 
இந்தியாவை ஆளும் பாரதிய சனதாக் கட்சியோ, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து பெருங்குழும (கார்ப்பரேட்) முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது. இட்லி, தோசைக்கு சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) போட்டு வசூலிக்கிறது! போர்டு, ஹூண்டாய், பாரத் பென்சு, மகேந்திரா, அசோக் லேலண்ட் போன்ற பெரும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் உற்பத்தி செய்யும் ஊர்திகளுக்கு இதுவரை வசூலிக்கப் பட்ட உற்பத்தி வரியை (எக்சைஸ்) நீக்கிவிட்டது. அவற்றிற்கான வரியை அவற்றை வாங்குபவர்கள் கட்டிக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டது!
 
ஏழை, நடுத்தர மக்கள் மானிய விலையில் பயன்படுத்தி வரும் சமையல் எரிவளி (கேஸ்) உருளைக்கு அளித்து வந்த மானியத்தை பா.ச.க. ஆட்சி முற்றாக நீக்கிவிட்டது. அதன்விலை கிடுகிடுவென்று உயரப் போகிறது! அத்துடன் ஞாயவிலைக் கடைகளை இழுத்து மூடும் திட்டத்தையும் இப்போது அறிவித்துள்ளது!
 
தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி படித்த தமிழ்நாட்டு மாணவர்கள், தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதபடி, தில்லிப் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மாணவர்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் பா.ச.க. ஆட்சி “நீட்” தேர்வைப் புகுத்தியுள்ளது. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழைப் புறக்கணித்து, ஆங்கில ஆதிக்கத்தை வளர்த்து வருகிறார்கள். இந்திய அரசோ இந்தியையும் சமற்கிருதத்தையும் தீவிரமாகத் திணிக்கிறது.
 
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென்பெண்ணை போன்ற தமிழ்நாட்டு ஆறுகளின் உரிமைகளை அண்டை மாநிலங்கள் பறித்துக் கொள்ள இந்திய அரசு துணை செய்கிறது. கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குக் கொடுத்ததால், ஏராளமான தமிழக மீனவர்களை சிங்களப்படை சுட்டுக் கொன்றது. இப்போதும் தமிழ் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிங்களப்படை இலங்கைக்கு அன்றாடம் கடத்திக் கொண்டு போகிறது.
 
நெல், வாழை, கரும்பு, தென்னை, மஞ்சள் போன்றவை விளையும் வளமான நிலங்களில் பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை எடுக்க ஓ.என்.ஜி.சி.யையும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது இந்திய அரசு! தமிழ்நாடு அரசோ, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைக் காக்க முன்வராமல், வாழ்விற்காகப் போராடும் மக்கள் மீது காவல்துறை முற்றுகையையும், அடக்குமுறையையும் ஏவி விடுகிறது. அறப்போராட்டம் நடத்துவோரை சிறையிலடைக்கிறது!
 
பெண்களும், ஆண்களும் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடப் போராடுகிறார்கள். தமிழ்நாடு அரசோ அவர்கள் மீது காவல்துறையை ஏவித் தாக்குகிறது! புதிது புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கிறது! தமிழ்நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் மேற்கண்ட போராட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்காமல், அப்போராட்டங்களை ஆதரிப்பதாக கூறிக்கொள்கின்றன.
 
இந்நிலையில்தான், தமிழ்நாட்டுத் தாயக உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வுரிமைகளையும் பாதுகாத்திட தமிழ்த்தேசியம் என்ற தத்துவச் சுடர் ஏந்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மக்கள் போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது! அப்போராட்டங்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கவும், ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் எழுச்சியாக அவற்றைக் கொண்டு செல்லவும் திசைகாட்டுகிறது.
 
இது குறித்து உங்களுடன் உரையாட விரும்புகிறோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT