உடனடிச்செய்திகள்

Thursday, August 31, 2017

ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழி காட்டுகிறதா? ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழி காட்டுகிறதா? ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி! 
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர ராவ் “தினகரன் குழுவினர் உட்பட அனைத்து அ.இ.அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும், அ.இ.அ.தி.மு.க.வை விட்டு விலகவில்லை, அதிலேயே இருக்கிறார்கள்; எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டிய தேவை இல்லை” என்று கூறி இருப்பது, ஆளுநர் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
அ.இ.அ.தி.மு.க.வின் தன்னலக் குழுக்கள் நடத்திக் கொண்டிருக்கும் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க.வின் தில்லித் தலைமை தமிழ்நாட்டில் தனது நாட்டாண்மை அரசியலை வலுப்படுத்திக் கொள்ளும் வேலைகளைத் தொடர்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அரசியல் அறத்தையும் பலியிட்டு, தமிழ்நாட்டில் பா.ச.க.வை ஊதிப் பெருக்கச் செய்ய நடுவண் அரசு முயல்கிறது.
தினகரன் குழுவினர் ஆளுநர் வித்தியாசாகர ராவைக் கடந்த 22.08.2017 அன்று சந்தித்து, தங்கள் அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டார்கள் என்று கூறும் மனுவைத் தனித்தனியே அளித்தனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதையொட்டி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் ஆணையிட வேண்டும் என்று கோருகின்றனர். இக்கோரிக்கை மனுவை நேற்று (30.08.2017) எதிர்க்கட்சிகள் அளித்த போது மேற்கண்டவாறு ஆளுநர் கூறியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வின் தன்னலக் குழுக்களின் பதவிச் சண்டையினால் கடந்த எட்டு மாதங்களாகத் தமிழ்நாட்டில் மாநில அரசின் செயல்பாடுகள் குழம்பிக் கிடக்கின்றன; பல துறைகளில் வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. இன்னொரு பக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களை அவ்வப்போது அதிக விலையில் குத்தகைக்கு எடுத்து கூடாரங்களில் அடைத்து வைத்துக் கொள்ளும் அ.தி.மு.க. தன்னலக் குழுக்களின் “சந்தைச் சனநாயகம்” அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அணிகளின் இந்தச் செயல்கள் தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்தத் தலைகுனிவையும், ஆட்சி மற்றும் அரசியல் குழப்பங்களையும் பா.ச.க.வின் நடுவண் அரசு கொண்டாடுகிறது. கொல்லைப்புற வழியில் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது.
தமிழ்நாட்டு ஆட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண அரசமைப்புச் சட்டத்திலும், ஏற்கெனவே எஸ்.ஆர். பொம்மை உள்ளிட்ட பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளிலும் வழி சொல்லப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை ஐயத்திற்கு இடமின்றி அறிய வேண்டுமே தவிர ஆளுநரின் விருப்பு வெறுப்புக்கேற்ப முடிவு செய்ய முடியாது. இவ்வாறான சட்டவழியைப் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளைப் பின்பற்றுவது, பா.ச.க. ஆட்சியாளர்களே அரசமைப்புச் சட்டத்தை முறிக்கும் செயலாகும்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தந்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதாக ஆளுநரிடம் மனுக் கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 19 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்வதற்கு பேரவைத் தலைவர் தனபால் மூலம் காரணம் கேட்கும் கடிதம் கொடுத்திருக்கும் எடப்பாடி அணியின் செயல், கட்சித்தாவல் தடைச் சட்டத்திற்குப் பொருந்தாது என்பது மட்டுமல்ல, அருவருக்கத்தக்க தன்னல வெறியாட்டம் ஆகும்!
அதேபோல் சட்டப் பேரவையில் தடை செய்யப்படட குட்காவைக் காட்டி, இந்த சட்ட விரோத வணிகத்திற்கு அமைச்சர்களே காரணம் என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்ய எடப்பாடி அரசு முயல்வது, செயலலிதா ஆட்சியில் சசிகலா அதிகாரத்தைத் தன்னல நோக்கங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தி ஆடிய ஆட்டத்தை ஒத்தது ஆகும்!
இந்நிலையில் ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறதா அல்லது ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுகிறதா என்ற வினா எழுந்துள்ளது.
எனவே தமிழ்நாடு ஆளுநர், உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலக்கெடு விதித்து ஆணை இட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT