உடனடிச்செய்திகள்

Wednesday, March 4, 2020

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின் உரிமையை இந்திய அரசு பறிக்கக் கூடாது! பெ.மணியரசன் அறிக்கை!தமிழ்நாட்டு இந்துக் கோயில்களின்
உரிமையை இந்திய அரசு பறிக்கக் கூடாது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்

பெ. மணியரசன் அறிக்கை!

நாடளுமன்ற மக்களவையில் உத்தரப்பிரதேசத்தின் பா.ச.க உறுப்பினர் ஒருவர் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை, நடுவண் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் குறிப்பாக இந்திய அரசின் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவருவதற்கான சட்டத் திருத்தத்தை இயற்ற தனி உறுப்பினர் சட்டமுன்வடிவை முன் மொழிந்து பேசியுள்ளார்.
அந்தத் திருத்தத்தின் மீது பேசிய நடுவண் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், அத்திருத்தத்தை ஆதரித்து பேசியுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த 7,000 கோயில்கள் இருக்கின்றன. இவை எல்லாம் தமிழ்நாடு அரசு அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டு இந்திய அரசின் தொல்லியல் துறையில் சேர்க்கப்படவேண்டியவை என்று கோடிட்டு காட்டியிருக்கிறார்.
தமிழ்நாட்டு சிவநெறிக் கோயில்கள், திருமால்நெறிக் கோயில்கள், கிராமக் கோயில்கள், குலத்தெய்வங்கள் ஆகியவற்றிற்கும் வடநாட்டு இந்து ஆன்மிகத்திற்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. இந்து மதத்தில் பல்வேறு உட்சமய வேறுபாடுகள், பல்வேறு வழிபாடுகள், பல்வேறு தெய்வங்கள் இருக்கின்றன. இந்து மதத்திற்கு என்று ஒற்றைத் தலைமைத் தெய்வமில்லை, ஒற்றைப் புனித நூல் இல்லை.
எனவே வடநாட்டு இந்து மதத்திற்கும், தமிழ்நாட்டு இந்து மதத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. மாநிலத்திற்கு மாநிலம் வழிபாட்டுத் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன.
அடுத்து, தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழர் கலை, பண்பாடு, தமிழினம் சார்ந்தவை. பிற மாநிலங்களின் கோயில் கலைப் பண்பாட்டில் இருந்து வேறுபட்டவை.
தமிழ்நாட்டுக் கோயில்களின் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து இந்திய அரசுக்குக் கொண்டு போனால், தமிழ் இந்து ஆன்மிகம், தமிழர் கலை, பண்பாடு, வரலாறு, தொன்மை அனைத்தும் அழிக்கப்பட்டு இந்தி, சமற்கிருத, ஆரியமயமாக்கப்படும்.
தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும். இந்திய அரசின் இம்முயற்சியைக் கைவிடச் செய்திட தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனிகவனம் செலுத்தி, தமிழ்நாட்டு இந்துக் கோயில்களை இந்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT