கொரோனா பேரிடர் காலத்திற்கு
வாழ்வூதியம் வழங்குக!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
இந்திய அரசு கொரோனா பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெருமளவு மக்கள் கூடும் பெரிய வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், சுற்றுலா கூடங்கள் போன்றவற்றை மார்ச்சு 31 வரை மூட ஆணையிடப்பட்டுள்ளது. ஆயினும், இவற்றில் பணியாற்றும் பல இலட்சக்கணக்கான குறை ஊதிய தொழிலாளர்களின் நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே உள்ள பொருளியல் மந்தத்தோடு, கொரோனா வைரஸ் சிக்கல் இணைந்து ஒட்டுமொத்த பொருளியல் நடவடிக்கைகளே கிட்டத்தட்ட முடங்கும் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில், தேசியப் பேரிடர் கால வாழ்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும். இல்லையென்றால், அரைப் பட்டினிக்கும், சத்துக் குறைபாடுக்கும் ஆளாகி நோய்த் தொற்று அதிகப்பட தொடங்கி விடும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பேரிடர் கால வாழ்வூதியமாக குடும்ப அட்டை உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
2019 மார்ச்சு 15 தொடங்கி 31 வரையுள்ள 15 நாட்களுக்கு, இதற்கு ஆகும் அதிகபட்ச செலவு 13,000 கோடி ரூபாய்தான். தேசியப் பேரிடர் கால உதவியாக இது திகழ்வதால், இதன் 75 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை இந்திய அரசும், 25 விழுக்காட்டு நிதிப் பொறுப்பை தமிழ்நாடு அரசும் பகிர்ந்து கொண்டு, தமிழ்நாடு அரசின் வழியாக ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் இத்தொகை செலுத்தப்பட வேண்டும். வங்கிக் கணக்கு இல்லாத குடும்பங்களுக்கு அவரவர்களுக்குரிய ரேசன் கடைகளின் வழியாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், இந்தப் பேரிடர் காலத்தில் ரேசன் கடைகளில் வழக்கமாக வழங்கும் விலையில்லா அரிசிக்கு மேலாக, நாள் ஒன்றுக்குக் கூடுதலாக குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அரிசியை மானிய விலையில் ரூ. 3-க்கு வழங்க வேண்டும்.
அதேபோல், மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் வழங்கலை அரை மடங்குக் கூடுதலாக்கி, மானிய விலையில் வழங்க வேண்டும்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட சத்துணவு பெறும் மாணவர்களுக்கு கேரள அரசு செய்வதைப் போல், அம்மாணவர்களுக்குரிய சத்துணவை பாதுகாக்கப்பட்ட பொட்டலங்களில் வீடுகளுக்கே சென்று வழங்க வேண்டும்.
அம்மா உணவகங்களின் உணவு வழங்கல் அளவை இரட்டிப்பாக்கி, அதற்குரிய கூடுதல் ஊழியர்களையும் இக்காலத்தில் அமர்த்தி மானிய விலை அம்மா உணவகங்களைக் கூடுதலாக அமைப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட பேரிடர் காலப் பணிகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்திட தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment