பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்கள் கடந்த நள்ளிரவில் (06.03.2020) காலமானச் செய்தி துயரமளிக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் அன்பழகனார் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; தமிழ்ப்பற்றின் காரணமாகத் தமது பெயரைத் தூய தனித் தமிழில் அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
ஆரிய-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பில் ஊற்றம் பெற்றவர். ஆரிய ஆன்மிக நூலான பகவத் கீதையைத் தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகள் பரப்பிய போது அதற்கு மாற்றாகத் திருக்குறளை முன்னிறுத்தினார். தமிழறிஞர்கள் வழிநின்று கடைசிவரை திருக்குறள் மேன்மையைப் பேசியவர் அன்பழகனார்.
தமிழை அழிக்கும் நோக்கத்தோடு தமிழில் சமற்கிருதத்தைத் கலந்து மணிப்பிரவாள நடை என்று ஆரியத்துவவாதிகளும் அவர்களின் அடிவருடித் தமிழர்களும் தமிழைச் சிதைத்த போது தனித்தமிழியக்கத்தை மறைமலை அடிகளார் 1916-இல் தொடங்கினார். சமற்கிருதத்தையும் பிறமொழிச் சொற்களையும் நீக்கி தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும், பிராமணப் புரோகிதர்களையும் சமற்கிருதத்தையும் நீக்கி தமிழர்கள் தங்கள் குடும்பச் சடங்குகளையும் கோயில் சடங்குகளையும் நடத்த வேண்டும் என்பது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கம்.
1921- ஆம் ஆண்டு பேராசிரியர் க.நமச்சிவாயர் அழைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர்கள் – தமிழுணர்வாளர்கள் கூட்டத்திற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கினார். ஆரியவாதிகள் தொகுத்த 60 ஆண்டுகளைக் கைவிட்டு, திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழர் திருநாளாகப் பொங்கலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும்- தை-1 ஆம் நாள் தமிழராண்டுத் தொடக்க நாள் என்றும் அக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் முடிவு செய்தார்கள்.
இப்பின்னணியில் தான் தமிழ் நாட்டில் படித்த இளையோரிடம் – தமிழின எழுச்சி ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்தித்திணிப்பை வலியுறுத்திவந்தது காங்கிரஸ் கட்சி. 1920களில் இருந்தே காங்கிரசின் இந்தித் திணிப்பை தமிழறிஞர்கள் எதிர்த்து வந்தனர். 1930களில் இந்தித் திணிப்பும் அதனால் இந்தி எதிர்ப்பும் தீவிரமடைந்தன.
இப்பின்னணியில்தான் தமிழ்நாட்டில் படித்த இளையோர் – தமிழின எழுச்சிக் கருத்துகளுடன் அரசியல் இயக்கங்களில் பங்கேற்றனர். அந்தத் தலைமுறையில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் அன்பழகனார்.
இன்றைக்குப் பழையக் காலத்தைவிடக் கூடுதலாக இந்தித் திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும், ஆரிய ஆதிக்கமும் அதிகாரவெறிகொண்டு தாக்குகின்றன.
பேராசிரியர் அன்பழகனார்க்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில் – அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்ச்சி, தமிழுணர்ச்சி ஊட்டிய, தமிழறிஞர்களின் இலட்சியமான தமிழ்த்தேசிய இன உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுமாறு இளந்தலைமுறைத் தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment