உடனடிச்செய்திகள்

Friday, April 24, 2020

செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!


செயல் மறவர் ந. மதியழகனுக்கு வீரவணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!


திருச்சி துவாகுடி ஜி.பி. இன்ஜினியரிங் தொழிற்சாலையின் தொழிற்சங்கச் செயலாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணிச் செயல் வீரருமான தோழர் ந. மதியழகன் நேற்று (23.04.2020) இரவு ஈரோடு மருத்துவமனையில் காலமான செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
அஞ்சா நெஞ்சன், அறிவார்ந்த செயல்வீரன், பழகுதற்கு இனிய பண்பாளன் என்று தோழர் மதியின் குணநலன்களை அடுக்கலாம்.
இளம் அகவைதான்! இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் நலம் குன்றிட தஞ்சைத் தனியார் மருத்துவமனையில் அவர் அண்ணன் வழக்கறிஞர் ந. துரைராசு கவனிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
உடல் நலம் ஓரளவு குணமாகி திருச்சி பெல் நகரிலுள்ள தமது இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். மறுபடியும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோட்டில் மாமனார் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தோழர் மதி, ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு காலமாகிவிட்டார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு ஒரு செயல் வீரர் இழப்பு; சக தொழிலாளிகளுக்கு, வேலை இழந்த சோதனையான காலத்தில் வழிகாட்டிச் செயல்பட்ட தலைமைத் தோழர் இழப்பு; எல்லாவற்றிற்கும் மேலாகத் தோழர் ந. மதியழகனின் இளம் மனைவிக்கும் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
இரண்டாண்டுகளுக்கு மேலாக, நிர்வாகக் கோளாறால் ஜி.பி. ஆலை மூடப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் சம்பள பாக்கி, மாற்று வேலை மற்றும் சட்டப்போராட்டம் என எல்லாவற்றிலும் முன்னணிப் பொறுப்பேற்று செயல்பட்டதுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய தமிழர் இன உரிமைப் போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டங்களிலும் - தான் ஈடுபட்டதுடன் தன் குடும்பத்தினரையும் ஈடுபட செய்த தோழர் மதிக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மதியின் குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT