உடனடிச்செய்திகள்

Wednesday, April 29, 2020

ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


ஊரடங்கைப் பயன்படுத்தி

காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி!

புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!



கொரோனா நெருக்கடியில் அனைவரது கவனமும் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்புத் தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் ஒதுக்கீட்டு விதிகள் - 1961-க்கு, திருத்தங்கள் செய்வது என்ற பெயரில் இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகளை 27.04.2020 நாளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் (S.O. 1371(E), 24.04.2020) வழியே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிகள் வழியாக, காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது. இதற்கென 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற பதிவு 33E–இன் வழியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்றாற்போல் பிற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள பணி ஒதுக்கீட்டு விதி 1961இல் பிரிவு IV – இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்ய வேண்டிய சட்டங்களைக் குறிக்கிறது. அவற்றுள் பதிவு 32 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் 1956-ஐக் குறிக்கிறது. அதாவது, 1956ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத்துறைக்கு இருக்கிறதென்று பொருள். ஆயினும், அந்தப் பொறுப்பு அதிகாரம், 1956 சட்டத்திற்கு இசைய அமைய வேண்டும் எனக் குறிக்கிறது. தண்ணீர் தகராறு சட்டம் – 1956இன் வரம்புக்குட்பட்ட வகையில்தான், நீர்வளத்துறை அதில் செயல்பட முடியும் என்று பொருள்.

இப்போதைய திருத்த விதி, இந்தப் பதிவு 32–ஐ விதியிலிருந்தே நீக்கி விடுகிறது. (Entry 32 omitted).

பதிவு 33 – ஆற்று வாரியச் சட்டம் 1956ஐக் (River Board Act, 1956) குறிக்கிறது. 1956ஆம் ஆண்டின் ஆற்று வாரியச் சட்டம், அதற்குக் கீழ் 33A முதல் 33E வரை புதிய பதிவுகள் இணைக்கப்படுகின்றன. அதில், 33E – காவிரி மேலாண்மை ஆணையமும் நீர்வளத்துறை அதிகாரத்தின் கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றாற்போல், 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நிதி மேலாண்மை மற்றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தது.

இப்போது, 7A – இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை இந்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக் கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்ட விரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பதிவு 7A-வுடன் 33E-ஐ இணைத்துப் படித்தால்தான், இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தனமான சட்டமீறல் என்பது புரியும்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 சூன் 1ஆம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Body Corporate) எனத் தெளிவாக அறிவித்தது. (The Cauvery Water Management Authority shall be a body corporate having perpetual succession and a common seal and shall sue and be sued). இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்திற்கு அமர்த்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. இவ்வாறு ஆணையத்தை அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்து கொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என்பதையும் 2018 சூன் 1 அறிவிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

இந்த ஆணையம் செயல்படுவதற்கு முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படி 2018 சூன் ஆணையும் வரையப்பட்டது. ஆனால், இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவு 33E-இன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் குடை சாய்க்கப்படுகிறது.
இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956, வரம்பு விதிக்கும் என்பதால் அதைக் குறித்தப் பதிவு 32 (Entry 32) இப்போது நீக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முற்றதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7A சேர்க்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 77 (3)-இன்படி, இந்தப் பணி ஒதுக்கீட்டு விதித் திருத்தம் செய்யப்படுவதாக இந்த அறிவிக்கைக் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திலோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்த 77 (3) குடியரசுத் தலைவருக்கு, அதாவது இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கிவிடவில்லை.

அரசமைப்புச் சட்டம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையை நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, தலைமைத் தேர்தல் ஆணையரை உரிய சட்ட வழிமுறைப்படி இந்திய அரசுதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். பணியமர்த்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தற்சார்பு அதிகாரத்தில் அரசு குறுக்கிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அதேபோலத்தான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சார்புத்தன்மையை ஒரு நிர்வாக விதித் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியாது.

பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில், பணி எளிமைக்காக (For the more convenient transaction of the business of the Government of India) பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத்தான் 77 (3) வழங்குகிறது. இதை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறுவதற்கான இந்த ஏற்பாடு, குடியரசுத் தலைவரின் வழியாக நரேந்திர மோடி ஆட்சி நிகழ்த்துகிற சட்டக்கவிழ்ப்பாகும்.

எல்லோரின் கவனமும், கவலையும் கொரோனா நெருக்கடியில் குவிந்திருக்கும்போது, நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் இந்த சர்வாதிகார நடவடிக்கை முற்றிலும் கோழைத்தனமானது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு எஞ்சியுள்ள மிகக் குறைந்த உரிமையையும் தட்டிப் பறிக்கும் இனப்பகை செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை (S.O. 1371(E), 24.04.2020) வழியாக செய்யப்பட்டுள்ள பணி ஒதுக்கீடு விதித் திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நரேந்திர மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT