உடனடிச்செய்திகள்

Friday, February 26, 2021

தோழர் தா. பாண்டியன் மறைவு பாசிச எதிர்ப்புப் போரில் பேரிழப்பு! ஐயா பெ. மணியரசன் இரங்கல்!தோழர் தா. பாண்டியன் மறைவு
பாசிச எதிர்ப்புப் போரில் பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான தோழர் தா. பாண்டியன் அவர்கள் (அகவை 88) இன்று 26.02.2021 முற்பகல் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி வேதனை அளிக்கிறது.

சிறுநீரகப் பாதிப்பில் டயாலிசிஸ் என்ற சிகிச்சையில் இருந்த நிலையிலும் தா.பா. அவர்கள் மனவலிமையுடன் தமது அரசியல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு கருத்துகள் கூறிவந்தார்.

முதுகலை மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்று, கல்லூரிப் பேராசிரியர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்ற வாய்ப்புகள் இருந்தும், அவற்றில் நாட்டமின்றி மார்க்சிய – லெனினிய வழியில் புரட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான முழுநேரப் பணியைத் தேர்வு செய்தார் தா.பா! தோழர் ஜீவாவுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்து மேடைகளில் வழங்கியவர் தா.பா. பல நூல்கள் எழுதியுள்ளார்.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் பெரும் ஈகங்கள் செய்து போராடிய போதும் அனைத்திந்திய அளவில் வளர்ச்சி அடையாததேன் என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “பொதுவுடைமையரின் எதிர்காலம்” என்ற நூல் எழுதினார்.

இந்தியாவில் பல தேசிய இனங்கள், பல தேசங்கள் இருக்கின்றன. இவற்றின் தனித்தன்மைகளை ஏற்க வேண்டும். இந்தியாவிற்கான ஒற்றைத் தலைமை கொண்ட அனைத்திந்திய தேசியக்குழு, நடுவண்குழு என்பவற்றைக் கலைத்துவிட்டு, ஒரு கூட்டிணக்கக் குழு (Coordination Committee) தலைமையில் பொதுவுடைமை இயக்கம் செயல்பட வேண்டும் என்பது உட்பட பல மறுக்கட்டமைப்புப் பரிந்துரைகளை அந்நூலில் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் வீட்டிலிருந்த போது அவர் நலம் கேட்க நானும், புலவர் இரத்தினவேலவன் அவர்களும் நம் தோழர்களும் சென்றிருந்தோம். அப்போது இந்த நூல் குறித்து என்னிடம் பேசி அவசியம் படிக்க வேண்டும் என்று கூறியதுடன், தஞ்சை என்.சி.பி.எச். பொறுப்பாளர் மூலம் அந்நூல் எனக்கு கிடைக்கச் செய்தார். கடந்த ஆண்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் நானும், தோழர் கி.வெ.அவர்களும் சென்று நலம் விசாரித்தோம்.

மாறுபட்ட கருத்துகள் கொண்டோருடனும் அன்பாகப் பழகக் கூடிய பண்பாளர் தோழர் தா.பா அவர்கள்.

பா.ச.க., பாசிசத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஆரியத்துவா பாசிச எதிர்ப்பைக் கூர்மைப் படுத்த வேண்டிய காலத்தில் தோழர் தா.பா. அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.

தோழர் தா.பா அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT