திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் மீது, தம் இஷ்டம்போல சில “குற்றச்சாட்டு”களை அடுக்கி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, அண்மைக் காலமாக தனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகள் பலவும் இட்டுக்கட்டிய கற்பனை வாதங்கள்தாம்!
தமிழீழ விடுதலையை நசுக்கிய தில்லி அரசை மட்டும்தான் அம்பலப்படுத்த வேண்டுமாம், தமிழ்நாட்டில் ஆரியத்துக்கு கருத்தியல் வழியிலும், ஆட்சி வழியிலும் துணையாக நிற்கும் திராவிடத்தை அப்படியே விட்டுவிட வேண்டுமாம்! இதுதான் தோழர் திருமுருகன் காந்தியின் புலம்பலின் சாரம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கம், இந்திய அரசின் ஆரிய இனவெறியை மட்டுமின்றி, தமிழர்களை உறவாடிக் கெடுக்கும் திராவிட துரோகத்தையும் சேர்த்தே அம்பலப்படுத்தி வருவதும், போராடி வருவதும் தமிழ்நாட்டு அரசியல் களத்தைக் கூர்ந்து நோக்கும் அனைவருக்கும் எளிதாகவே புரியும். ஆனால், திராவிடக் கருத்தியலால் கண்களை மூடிக் கொண்டிருப்போர், அவையெல்லாம் தெரிந்தாலும், தெரியாது போன்றே நடிப்பர்!
தமிழீழத் தாயகத்தில் சிங்களர்களைக் குடியமர்த்தி, அத்தாயகத்தை ஆக்கிரமித்து அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசைப் போல, பாலத்தீனத் தாயகத்தில் யூதர்களைக் குடியமர்த்தி, அத்தாயகத்தை ஆக்கிரமிக்கும் யூத இனவெறி இசுரேலிய அரசைப் போலவே, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைக் குடியமர்த்தி வருகிறது ஆரிய இனவெறி இந்திய அரசு! வடகிழக்கு மாநிலங்களில், இந்தியத்தேசியக் கட்சிகள் காலூன்றியதின் உண்மையான பின்னணி இதுதான்! இதற்காகத்தான், காசுமீரில் 370-ஐ வலிந்து நீக்கி, அயலாரை அங்கு குடியேற்ற கதவைத் திறந்துவிட்டது, ஆர்.எஸ்.எஸ். - மோடி ஆட்சி!
இதே ஆக்கிரமிப்பு நோக்கில்தான், தமிழ்நாட்டுத் தமிழர் தாயகத்தை அழித்தொழித்து – காசுமீரைப் போலத் பல துண்டுகளாக்கிட ஆர்.எஸ்.எஸ்.- மோடி அரசு தொடர்ந்து திட்டமிடுகிறது. ஆட்சியில் 2014 வரை இருந்தபோது, இராகுலின் காங்கிரசுக் கட்சி இதே வடவர் திணிப்பு வேலையைத்தான் செய்தது! தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுப் பணிகளிலும், தனியார் பணிகளிலும் இந்திக்காரர்கள் புகுத்தப்படுவதை காங்கிரசு ஆட்சியிலும் சரி, பா.ச.க. ஆட்சியிலும் சரி - தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான் தொடர்ந்து, அம்பலப்படுத்தி களப்போராட்டங்கள் நடத்தியது. அதற்காக வழக்குகளை இன்றைக்கும் சந்தித்து வருவோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரே தவிர, திராவிடக் கட்சிகளோ, இயக்கத்தினரோ அல்ல!
இந்தியாவின் பிற மாநிலங்களில் எப்படியெல்லாம் மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் சட்டங்களை இயற்றி வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை” என்ற கள ஆய்வு அறிக்கை நூல், பலருக்கும் இச்சிக்கல் குறித்து வழிகாட்டக்கூடியதாக விளங்கி வருகின்றது.
தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் இச்செயல்பாட்டில், மே பதினேழின் பங்களிப்பு என்ன? திராவிட இயக்கத்தவர்கள் எனக் கூறிக் கொள்வோரின் செயல்பாடுகள் என்ன? ஒன்றுமில்லை! இந்திய அரசுப் பணிகளில் வடவர் திணிப்பை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, தனியார் துறையில் வடவர்களை வரவேற்று, தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்குத் துணை போகும் இரட்டை வேடம்தான் மே பதினேழு தொடங்கி, திராவிடக் கூட்டத்தினரின் நிலைப்பாடு!
தமிழீழத்திற்குள் சிங்கள உழைக்கும் மக்கள் குடியேற்றப்பட்டால்எதிர்ப்பார்களாம்! பாலத்தீனத்தில் யூதர்கள் குடியேற்றப்பட்டால் எதிர்ப்பார்களாம்! காசுமீரில் வெளியார் குடியேறுவதற்காக 370 நீக்கப்பட்டால் எதிர்ப்பார்களாம்! ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், இந்திக்காரர்கள் வந்தால், அவர்கள் பாட்டாளிகள் என வரவேற்று, தமிழ்நாட்டிற்குள் இந்தியத்தேசியக் கட்சிகளின் வாக்குவங்கியை செயற்கையாக உருவாக்கும் காங்கிரசு - ஆர்.எஸ்.எஸ். திட்டம் கண்டு மகிழ்வார்களாம்! இந்த இனத் துரோகத்தை நியாயப்படுத்திட, பாட்டாளி வர்க்க சர்வதேசியம் - மார்க்சிய சாயம் பூசிக் கொள்வார்கள்!
தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க முற்படும் ஆரிய இனவெறி இந்திய அரசின் தீய ஆக்கிரமிப்பு நோக்கத்திற்கு - கருத்தியல் துணை செய்யும் வகையில்தான், தமிழர்களின் வரலாற்று இனப் பெயர் “திராவிடன்” எனத் திரிக்கப்படுகிறது! “தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல– இது பல இனத்தவரும் வாழும் கலப்பின மண்டலம்” என்ற உளவியல் உருவாக்கமும் திராவிடவாதிகளால் இங்கு நிகழ்த்தப்படுகிறது!
ஆரியத்துவவாதிகள், தோழர் திருமுருகன் காந்தியை “டேனியல் காந்தி” என போலிப் பெயரைச் சூட்டி இழிவுசெய்தபோது நாம் கண்டித்தோம்! அதற்கு, தோழர் திருமுருகன் காந்தி மிகக் கடுமையாக கோபப்பட்டார்! அது சரியே! தன் சொந்தப் பெயரை, வேறொன்றாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரித்தபோது தோழர் திருமுருகன் காந்தி கோபப்பட்டால் அது ஞாயமாம்! ஆனால், “தமிழர்” என்ற இயற்கையான வரலாறு வழிவந்த இனப்பெயரை “திராவிடன்” என்றும், கீழடி தொடங்கி சிந்துசமவெளி வரை விரிந்துள்ள தமிழர் நாகரிகத்தை “திராவிட நாகரிகம்” என்றும் திராவிடவாதிகள் போலியாகத் திரிக்கும்போது மட்டும், நாம் கோபம் கொண்டு கேள்விகேட்கக் கூடாதாம்! உங்களுக்கொரு ஞாயம்; ஊருக்கொரு ஞாயமா?
திராவிடக் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டில் இந்திக்காரர்களுக்குக் குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதும், வெளியில் “பா.ச.க. எதிர்ப்பு” எனப் பேசி நடித்துக் கொண்டே, நடைமுறையில் “ஒரே நாடு – ஒரே ரேசன்” என்ற மோடி திட்டத்தில் இந்திக்காரர்களை இணைத்து – தமிழ்நாட்டிற்குள் இந்திக்காரர்களை நிரந்தரப்படுத்த முனைவதும், பன்னாட்டு – வடநாட்டு பெருமுதலாளிகளை நேரில் சென்று கூவிக்கூவி அழைத்து, தமிழர் நிலங்களையும், வளங்களையும் அளிப்பதும், இந்திய அரசின் ஆரிய இனவெறி ஆக்கிரமிப்புச் செயல்திட்டத்தில், இவர்கள் நீக்கமற நீடித்து இயங்கும் “திராவிட” அடியாட்கள் என்பதையே அம்பலப்படுத்துகிறது.
இப்போதும்கூட, ஈரோடு இடைத்தேர்தலில் இந்தியில் பரப்புரைத் துண்டறிக்கைகள் வெளியிட்டுள்ளது தி.மு.க.! “இந்தி தெரியாது போடா” என பாசாங்குக்காக வெளியில் கூறிவிட்டு, இந்திக்காரர்களுக்காக இந்தியில் வெட்கமில்லாமல் துண்டறிக்கை அச்சிடும் தி.மு.க.வின் துரோகத்திற்கு திராவிடக் கட்சிகள் – இயக்கங்களின் எதிர்வினைதான் என்ன?
தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், 1956 நவம்பர் 1க்குப் பிறகு, தமிழ்நாட்டில் குடியேறிய இந்திக்காரர்கள், மார்வாடிகள், குசராத்திகள், ஆந்திரத் தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரையும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1991லிருந்து இன்றுவரை பகிரங்கமாக அறிவிக்கிறது; பல்வேறு போராட்டங்களையும் இதற்காக நடத்துகிறது. நாகாலாந்து – மிசோரம் – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் போன்ற மாநிலங்களில், பிற மாநிலத்தவர் உள்நுழைவதற்கே “உள் அனுமதிச் சீட்டு” (Inner Line Permit) வாங்கும் முறை இருப்பதைப்போல, தமிழ்நாட்டிற்கும், புதுச்சேரிக்கும் இந்த அதிகாரம் வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குரலெழுப்பிப் போராடி வருகிறது. இவற்றையெல்லாம் “திராவிடம்” பேசுவோர் கண்டுகொள்வதே இல்லையே ஏன்?
திருச்சி, சென்னை, கோவை வெளியார் எதிர்ப்புப் போராட்டங்கள், ஓசூர் டாட்டா ஆலை போராட்டம், தமிழில் அர்ச்சனை – குடமுழுக்குக்காகப் போராட்டம் என ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளை எங்கள் முகநூல் பக்கத்தைப் பார்த்தாலே எவரும் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்! தூங்குபவர்களைக் கூட எழுப்பிவிடலாம் – ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்பிவிட முடியாதல்லவா?
வடவர் எதிர்ப்புப் பேசிய பெரியாரை முன்னால் வைத்துக் கொண்டு, பின்னணியில் இந்திக்காரர்களையும், மார்வாடி - குசராத்தி - வடநாட்டு பிராமண பனியா கும்பலையும் அரவணைத்து ஆதரவாக நிற்கும் இனத் துரோகத்திற்குப் பெயர்தான் – “திராவிடம்”! தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தைப் பாதுகாப்பதில், ஒரு சிறிதும் முனைப்போ, அக்கறையோ இல்லாதவர்களே “திராவிடம்” என, பெரியார் பின்னணியில் ஒளிந்து நிற்கின்றனர்.
அதுமட்டுமின்றி, மார்வாடிக் கடை மறியல், ஆலூக்காஸ் நகைக்கடை மறியல், வடநாட்டு டாடா ஆலை முற்றுகை என தமிழ்த்தேசியப் பேரியக்கம் அயல் இன பெருநிறுவனங்களுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்தியபோதும்கூட, “முதலாளிகளை இவர்கள் எதிர்ப்பதில்லை” என வெட்கமில்லாமல் பொய்பேசிக் கொண்டிருப்பதோடு மட்டுமின்றி, வடநாட்டு பெருமுதலாளிகளுக்கு எதிராகவோ, மார்வாடி – குசராத்திகளுக்கு எதிராகவோ தானோ, தங்கள் திராவிடக் கூட்டாளிகளோ ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாமல், வேடிக்கைப் பார்த்து நின்று கொண்டிருப்பது குறித்து என்றைக்காவது தோழர் திருமுருகன் சிந்தித்ததுண்டா?ஏன் இத்திசையில் திராவிடக்கூட்டம் சிந்திக்கவில்லை? ஏனெனில், தமிழ்நாடு அயல் இனத்தாரின் வேட்டைக்காக மாறுவதில், ஆரியத்திற்கு மட்டுமின்றி, திராவிடத்திற்கும் உடன்பாடு இருக்கிறது!
அடுத்து, “பெரியாரின் இயக்கத் தொண்டர்கள் எவரும் தமிழ்நாடு விடுதலை கோரிக்கையை முழங்குகிறவர்களே” எனக் கூறும் திருமுருகன் காந்தி, “திராவிடம் ஏற்காத, திராவிடம் காலாவதியாகி விட்டதென சொல்பவர்களோ தமிழ்நாடு விடுதலை முழக்கத்தை பகிரங்கமாக வைப்பதில்லையே ஏன்?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.
முதலில், அவரது மே பதினேழு இயக்கமோ, அவரது “திராவிட”க் கூட்டாளிகளான ஆசிரியர் கி.வீரமணி (தி.க.), பேரா.சுப.வீ.(திராவிட இயக்கத் தமிழர் பேரவை), கொளத்தூர் மணி (தி.வி.க.), கோவை இராமகிருட்டிணன் (த.பெ.தி.க.), வாலாசா வல்லவன் (ம.பெ.பொ.க.), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள்), கே.எம். செரீப் (தமிழக மக்கள் சனநாயகக் கட்சி) போன்ற அமைப்புகளோகூட, இதுவரை “தமிழ்நாடு விடுதலை” என்பதை தங்கள் கட்சித்திட்டத்தில் அல்லது கொள்கை அறிக்கையில் வெளிப்படையாக பகிரங்கமாக அறிவிக்கவில்லையே, ஏன் என விளக்குவாரா?
பெரியாரின் தனித்தமிழ்நாடு கொள்கையை, அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் - “உண்மைத் தமிழ்த்தேசியவாதிகள்” எனத் தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் “திராவிட”க் கூட்டமே பகிரங்கமாக முன்வைக்காத நிலையில், தோழர் திருமுருகனுக்கு இந்தக் கேள்வியை எழுப்பத் தகுதியிருக்கிறதா?
தமிழ்நாடு விடுதலையை அறிவிக்காதோர் எல்லாம் போலித் தமிழ்த்தேசியவாதிகள் என்று கூறும் தோழர் திருமுருகன் காந்தி, 2014இல் தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. கூட புறக்கணித்த ஆரியத்துவ பா.ச.க.வை தமிழ்நாட்டில் தூக்கிச் சுமந்த ம.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகளுக்குத் தேர்தல் வேலை பார்ப்பதும், இப்போதுகூட ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டுப் பரப்புரை செய்து கொண்டிருப்பதும்தான் “உண்மையான தமிழ்த்தேசியம்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? ஐயகோ!
தமிழர்களை ஏமாற்றுவதற்காக பெரியார் திடலில் விடுதலை இதழின் பெயர்ப்பலகையில் எழுதி வைப்பட்டிருந்த “தமிழ்நாடு தமிழர்க்கே!” என்ற சொற்றொடரைக்கூட, தானே தார்பூசி அழித்துக் கொண்டதுதான் இவர்களின் “திராவிட” துரோக வரலாறு! இந்த இலட்சணத்தில், “உண்மைத் தமிழ்த்தேசியவாதிகள்” என இவர்களே தங்களைத் தாங்களே கூறிக் கொள்ள வெட்கப்பட வேண்டாமா?
அண்மையில் சைதாப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பேரா. சுப.வீ, “தனித்தமிழ்நாடு கேட்டுப் பாருங்களேன்! வருண் ஐ.பி.எஸ். உங்களையெல்லாம் சிறையில் தள்ள காத்துக் கொண்டிருக்கிறார்” என திராவிட அதிகார வர்க்கத் திமிரோடு வெளிப்படையாகவே ஆள்காட்டி வேலை பார்த்தார். திராவிட அதிகார வர்க்கத்தின் நிழலில் நின்று கொண்டு, ஆரிய இந்தியத்திற்குக் ஆள்காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் போல, “தனித்தமிழ்நாடு எனப் பேசிப் பாருங்கள்” என எங்களை நோக்கி மட்டும் திராவிடவாதிகள் கேட்கும்போது, காக்கிச்சட்டை வாடைதான் அடிக்கிறதே ஒழிய, அதில் இலட்சிய நேர்மை இல்லை!
தமிழ்த்தேசியப் பேரியக்கம், 1990 பிப்ரவரி 25இல் நடந்த தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டிலேயே இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசே எங்கள் இலக்கு என வெளிப்படையாக தீர்மானம் இயற்றியதுடன், அதுவே இன்றைக்கு வரை பேரியக்கத்தின் கொள்கை அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறையாண்மையுள்ள தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக வேண்டுமானால் இந்தியா நீடிக்கலாமே தவிர, ஒற்றையாட்சி இந்தியா என்பது ”பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளிய ஆரியப் பார்ப்பனிய இந்தித் தேசிய இன ஆதிக்கக் கட்டமைப்பு” என மிகத் தெளிவாகவரையறுத்து எங்கள் கொள்கை அறிக்கையிலேயே அறிவித்திருக்கிறோம். மே பதினேழு இயக்கம், இவ்வாறு தமிழ்த்தேசியம் குறித்த தெளிவான வரையறுப்பையோ, இலக்கையோ வெளியிட்டு இருக்கிறதா?
தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டில், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு எனத் தீர்மானம் இயற்றப்பட்டது குறித்து, புதுதில்லியில் அப்போதைய பா.ச.க. முரளி மனோகர் ஜோஷி வெளிப்படையாக கேள்வி எழுப்பிய பிறகு, தில்லி எசமானர்களின் ஆணைக்கு இணங்க ஐயா பெ. மணியரசன் அவர்களை, இப்போது மோடி அரசால் பயன்படுத்தப்படும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தவர்தான் “திராவிட” கருணாநிதி! இந்தியாவைப் பிரிப்பதாக - உபா சட்டம் தமிழ்நாட்டில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டதே ஐயா மணியரசன் அவர்கள் மீதுதான்!
சென்னை நீதிமன்றத்தில் நடந்த அவ்வழக்கில், அத்தீர்மானத்தின் நகல் முழுமையாக தங்களுக்குக் கிடைக்கவில்லை எனக் காவல்துறை கைவிரித்தபோது, “இதோ நாங்களே தருகிறோம்” என முழுத் தீர்மானத்தையும் அச்சடித்த நூலாக நீதிமன்றத்தில் வழங்கியதும் ஐயா மணியரசன் அவர்கள்தான்! பின்னர் அவ்வழக்கில் 8 ஆண்டுகள் கழித்துதான் ஐயா மணியரசன் அவர்கள் விடுதலையானார்! அதன்பிறகும், இன்றைக்கும் கூட, இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பதே எங்கள் இலக்கு என்பதில் உறுதியாக இருக்கிறோம்!
2015இல், வலிமைமிக்க இராணுவத்துடன் படை நடத்திய நாகா விடுதலை இயக்கத்தை வீழ்த்த முடியாமல் திணறிய இந்திய அரசு, அவ்வியக்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாகா விடுதலை இயக்கத்துடன் “இந்திய இறையாண்மையைப்” பகிர்ந்து கொள்கிறோம் எனக் கூறி ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவரே இன்றைய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி!
நாகா இனத்தவரோடு இறையாண்மையைப் பகிர்ந்து கொள்ள முன்வரும் இந்திய அரசு, தமிழர்களின் இறையாண்மையை மறுப்பது ஏன் என பகிரங்கமாகக் கேள்வி எழுப்பி, “தமிழர்களின் இறையாண்மையை மீட்போம்” என தொடர்ந்து பேசியும், எழுதியும் பரப்புரை மேற்கொள்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! “தமிழர் இறையாண்மை” என்றெழுதியதற்காக சென்னை குற்றப்பிரிவுக் காவல்துறை ஐயா பெ.மணியரசன் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதன் பிறகும், இன்றைக்கும்கூட தமிழினத்தின் இறையாண்மையை மீட்டு தமிழ்த்தேசக் குடியரசு அமைப்போம் என பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றோம். இதுபோல், திராவிடக் கூட்டத்தினர் எங்காவது பேசியிருக்கிறார்களா?எழுதியிருக்கிறார்களா?அறிவித்திருக்கிறார்களா?ஏன் செய்யவில்லை?
தமிழ் மொழியை ஒன்றுக்கும் உதவாதது என இழிவுபடுத்துவதும், தமிழ் இலக்கியங்களைக் குப்பை என இகழ்வதும், தமிழர்களின் இயற்கையான இனப்பெயரை திரிப்பதும் ஆரியத்திற்கு மட்டுமல்ல திராவிடத்திற்குமான குணநலனாகவே இருக்கிறது. அவர்கள் இந்தியன் என்றும் பாரதீயன் என்றும் திரித்தால், இவர்கள் “திராவிடன்” எனத் திரிக்கிறார்கள். தமிழை “நீசபாஷை” என ஆரியர்கள் ஒதுக்கிவைத்து, சமற்கிருதத்தையும் இந்தியையும் தூக்கிப்பிடிக்கிறார்கள். அதே தமிழை, காட்டுமிராண்டிகளின் மொழி எனக் கூறி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கிறது திராவிடம்! இந்தி – சமற்கிருதத் திணிப்புகளையெல்லாம் எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கூட்டத்தினர், தமிழ்நாட்டில் ஆங்கிலத் திணிப்பை மட்டும் கேள்வியின்றி ஏற்றுக் கொள்கிறார்களே, அதற்கான கருத்தியல் துணிவை வழங்குவது யார்? பெரியார் தானே? அதனால்தான், ஆரிய இந்தியத்தோடு, திராவிடமும் தமிழ் – தமிழர் அழிப்பில் ஈடுபடுகிறது எனக் குற்றம் சாட்டுகிறோம்.
எனவேதான், தமிழ்த்தேசியம் என்ற தமிழின விடுதலைக்கான கருத்தியலை மக்களிடம் விதைக்க முற்படும்போது, ஆரியத்திற்குத் துணை செய்யும் திராவிடக் கருத்தியலையும் கடுமையாகத் திறனாய்வு செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.
இவ்வாறு, ஆரிய இந்தியம் – திராவிடம் ஆகிய கருத்துகள் இப்போது கடுமையாகத் திறனாய்வு செய்யப்படுகின்ற பின்னணியில்தான் தோழர் திருமுருகன் காந்தி கடுமையாகக் கொந்தளிக்கிறார்.
ஆரிய இந்தியத்தின் அதிகார வர்க்கம் நடத்தும் இந்தியத் தேர்தல்களில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் எப்போதும் பங்கெடுத்ததில்லை.தேர்தல் கட்சிகளுக்கு ஆதரவாகப் பரப்புரையும் மேற்கொண்டதில்லை. 2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் இனப்படுகொலைக்குத் துணை நின்ற தி.மு.க. – காங்கிரசுக் கூட்டணிக்கு வீழ்த்த வேண்டுமெனில், அ.தி.மு.க.வுக்கு வெளிப்படையாக வாக்கு சேகரிக்க வேண்டுமென பரப்புரை மேற்கொண்டவர்கள்தான், திருமுருகனும், கொளத்தூர் மணி – கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்ட திராவிடக் கூட்டணியினரும்!
அப்போதும்கூட அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்கமாட்டோம் என உறுதியாக நின்றது தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான்! “காங்கிரசுக்குப் போடாதீர்கள்” என்று மட்டும்தான் எங்களால் பரப்புரை செய்ய முடியும் எனக் கூறியவர்கள் நாங்கள்! அந்தப் பரப்புரையின் போது, எங்களைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்தவர்தான் “திராவிடக்” கருணாநிதி! கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல பெரியாரிஸ்ட்டுகளைக் கைது செய்தது மட்டுமின்றி, சென்னை இராயப்பேட்டையில் தி.வி.க. தோழர்கள் நிறுவியிருந்த பெரியார் சிலையைக் கூட பதவி வெறியில் உடைத்தெறிந்தவர்கள் தி.மு.க.வினர்தான்! இன்றைக்கு இந்தத் தி.மு.க.வின் நிழலில் நின்று கொண்டு, உதயநிதிக்கு வாக்குக் கேட்க, “பெரியாரை” பிம்பமாகப் பயன்படுத்துகிறது அதே திராவிடக்கூட்டம் என்பது வேடிக்கையான வேதனை!
தனித்தமிழ்நாடு கேட்டுக் கொண்டே, இந்திய ஏகாதிபத்திய வெறிக் கட்சியான காங்கிரசுக்குத் தேர்தல் வேலை பார்த்தவர்தான் பெரியார்! ஆரிய எதிர்ப்பு எனப் பேசிக் கொண்டே, பிராமண வேட்பாளர்களுக்கு கூச்சமில்லாமல் வாக்குச் சேகரித்தவர்தான் பெரியார்! ஆரிய இராசாசியை அந்தரங்க ஆலோசகராக வைத்துக் கொண்டிருந்த பெரியாரின் அதே “பிராமண நட்புப் பாரம்பரியத்தை”த்தான், தி.மு.க.வும் தி.க.வும் இன்றைக்கும் இந்து இராம் – பிரசாந்த் கிஷோர் – இராபின் சர்மா எனத் தொடர்கிறது!
பிராமணர்களைத்தான் வைத்துக் கொள்வோம் என தி.மு.க. தெளிவாக முடிவெடுத்து அடம்பிடிக்கும் நிலையில், தமிழ் நன்கு தெரிந்த - தமிழ்நாட்டு பிராமணர்களான பாண்டேவையும், எச். இராசாவையும் ஏன் நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என சீமான் கேள்வி எழுப்பினார். ஆரிய பிராமணர்களை வழிகாட்டிகளாக வைத்து, தூக்கிப் பிடிக்கும் தி.மு.க.வை கண்டிக்க முன்வராத திருமுருகன் காந்தி, அதைச் சுட்டிக்காட்டிய சீமானை சாடுவதிலிருந்தே அவரது பக்கச்சார்புதான் வெளிப்படுகிறது.
ஆரிய இனவெறி இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசையும், பா.ச.க.வையும் தமிழ்நாட்டில் நுழைத்து வளர்த்துவிட்ட “திராவிடக்” கட்சிகளின் யோக்கியதையைக் கண்டிக்க வக்கில்லாதவர்கள், “இது பெரியார் மண்” என்று புலம்புவதால் என்ன பயன் இருக்கிறது? இது பெரியார் மண் எனக் கூறிக் கொண்டு, உதயநிதிக்கு ஜால்ரா போடவும், தி.மு.க. – அ.தி.மு.க. கொள்ளைக் கூட்டணிக்குத் துணை போவதும்தான் நடக்கிறது! இது பெரியார் மண் அல்ல – தமிழ் மண்!
நாங்கள் தான் “உண்மையான தமிழ்த்தேசியவாதிகள்” எனக் கூறிக் கொண்டு, ஒவ்வொரு தேர்தலுக்கும் ம.தி.மு.க. போன்ற ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் வேலை பார்க்கிறது மே பதினேழு இயக்கம்! ஆனால், தமிழ்த்தேசியப் பேரியக்கமோ எந்தத் தேர்தலிலும் யாருக்கும் வேலை பார்க்க மாட்டோம் என இன்றுவரை உறுதியாக நிற்கிறது! நாம் தமிழர் கட்சிக்குக்கூட, தேர்தல் வேலை பார்க்கவில்லை!
ஆனால், இவற்றையலெ்லாம் வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, எங்களைப் பார்த்து “போலித் தமிழ்த்தேசியம்” என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது மே பதினேழு இயக்கம்!
“திராவிட இயக்கத்தார் சந்தித்த ஒடுக்குமுறைகளில் எத்தனை விகிதத்தை ஐயா மணியரசனாரின் இயக்கம் சந்தித்திருக்கும்?” எனக் கேட்கிறார் திருமுருகன்! ஐயா மணியரசன் அவர்கள் மீதும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மீதும் தமிழ்நாட்டில் ஆங்காங்கு பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் பட்டியலைக் கொடுத்தால், அது இப்பதிவை இன்னும் நீளமாக்கும்! தெரிந்து கொள்ள வேண்டுமெனில், பன்மைவெளி வெளியிட்டுள்ள “தடம் மாறாத் தமிழ்த்தேசியம்” என்ற 900 பக்க நூலை வாங்கிப் படித்துத் தெளிவு பெறுங்கள்!
வள்ளுவர் கோட்டத்திலும், சாத்திரி பவனிலும் போராட்டம் நடத்தி, ஒருநாளில் விடுதலை ஆவதுதான் மிகப்பெரிய போராட்டம் என எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, ஆயிரக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்து உரிமை மீட்புப் போராட்டங்களையும், அதில் வெற்றிகளையும் ஈட்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் குறித்து அறிந்து கொள்ள அந்நூல் உதவியாக இருக்கும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டங்களின் வழியே சாதித்தது என்ன? சந்தித்த ஒடுக்குமுறைகள் என்னென்ன என அடுத்தடுத்தப் பதிவுகளில் விரிவாகக் காண்போம்!
(தொடரும்)
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
Post a Comment