உடனடிச்செய்திகள்

Wednesday, February 5, 2025

திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்! ( பகுதி – 2 ) க.அருணபாரதி


திருமுருகன் காந்தியின் “திராவிட”த் திரிபுவாதங்கள்!
( பகுதி – 2 )
க. அருணபாரதி

துணைப் பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
=======================
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி எழுதிய முகநூல் பதிவுகளுக்கு எதிர்வினையாக “திருமுருகன் காந்தியின் ‘திராவிட’த் திரிபுவாதங்கள்” என்ற பதிவினை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகநூலில் எழுதியிருந்தோம். தோழர் திருமுருகனின் முந்தைய பதிவுகளுக்கான எமது எதிர்வினையே இன்னும் முழுமையடையாத நிலையில் “தொடரும்” என்றுதான் போட்டிருந்தோம். இப்போது, அதற்குள் திரும்பவும் அவர்கள் “திரிபுவாதங்களை” மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளனர்.
ஈழப்படுகொலையில் இந்திய அரசை அம்பலப்படுத்தாமல், தமிழ்நாட்டின் அதிகாரவர்க்க ஒட்டுண்ணிகளை மட்டுமே அடையாளப்படுத்தி, இந்திய ஆளும் வர்க்கத்தின் பக்கம் மக்கள் கவனம் சென்றுவிடாமல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தடுத்துக் கொண்டிருக்கிறதாம்! இதுதான் மே பதினேழின் “கண்டுபிடிப்பு”!
மே பதினேழு இயக்கம் சார்பில் எழுதியுள்ள தோழர் கொண்டல்சாமி, இன்னொன்றையும் கூறுகிறார். “தமிழ்நாட்டில் வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம். அப்படியான மாற்றுக் கட்சிகள், இந்தியாவின் கொள்கையை மாற்றிவிடும் அதிகாரம் கொண்டவையா என்பதை குறித்து மக்களிடம் விளக்காமல் மாநில அதிகாரத்தை வைத்து இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு கொள்கையை மாற்றிவிடலாம் எனும் மாய்மாலத்தை எப்போது நிறுத்தப் போகிறீர்கள் எனும் கேள்விக்கு பதில் இல்லை” என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.
“தமிழ்நாட்டில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு கொள்கையை மாற்றிவிடலாம்” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் எப்போது, எங்கே கூறியிருக்கிறது? ஆதாரத்துடன் இதனை எடுத்துக்காட்ட முடியுமா?
பேரியக்கத்தின் இந்தியா குறித்த நிலைப்பாடு
------------------------------------
ஆரிய இன அரசுகளான இந்தியமும் சிங்களமும் கைகோர்த்துக் கொண்டு, தங்கள் வரலாற்று இனப்பகைவர்களாகக் கருதும் தமிழர்களின் தமிழீழத்தையும், தமிழ்நாட்டையும் அழிக்கிறார்கள் என ஓராயிரம் முறை அம்பலப்படுத்திய இயக்கம் தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான் என்பது ஊருக்கேத் தெரிந்த உண்மை! 2009 போர்ச் சூழலிலிருந்தே இதனை விளக்க முடியும்.
எப்படி தமிழர்களின் சிந்துவெளி நாகரிகத்தை ஆரியர்கள் வன்மத்தோடு அழித்தார்களோ, அதே தமிழினப் பகை வன்மத்தோடுதான் - ஆரிய இனவெறி இந்திய அரசு சிங்கள அரசின் வழியே தமிழர்களின் தமிழீழத்தை அழிக்கிறது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் போரின்போதும் கூறியது; போருக்குப் பின்னும் பரப்புரை செய்து வருகிறது.
1947 ஆகத்து 15இல் தொடங்கி உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கும் ஆரிய இனவெறி இந்திய ஏகாதிபத்திய அரசு, அந்த உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகத் தான் “வெளியுறவுக் கொள்கை” என்ற பெயரில், தமிழீழத்தில் தலையிட்டு, தமிழினப் பகைவெறியுடன் இன அழிப்பில் ஈடுபடுகிறது என்பதே இப்போதும் எங்களின் உறுதியான நிலைப்பாடு!
அமெரிக்கா தான் காரணம்; பிரிட்டன் தான் காரணம்; ஐ.நா. மன்றம் தான் காரணம் என்றெல்லாம் யார் யாரையோ கைகாட்டி “புவிசார் அரசியல் நலன்“ என்றெல்லாம் சுற்றி வளைத்து ஏமாற்றி - பம்மாத்து செய்யாமல், இந்திய அரசின் ஆரிய இனவெறி – தமிழினப் பகையே தமிழினப் படுகொலைக்கு முதன்மைக் காரணம் என நேரடியாக அம்பலப்படுத்திய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை, எந்த சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் குறைகூறுகிறார்கள் என்பதைக் கூட இவர்கள் தெளிவாக முன்வைக்கவில்லை!
ஆரிய இந்தியத்தின் பங்காளியாக நின்று கொண்டு, தமிழ்த்தேசியர்களை – தமிழீழ விடுதலை ஆதரவாளர்களை நசுக்கி வேட்டையாடி அழிக்கும் திராவிடக் கட்சிகளின் துரோகத்தனத்தைப் பற்றிப் பேசினால், மே பதினேழு இயக்கத்திற்கு ஏன் வேர்க்கிறது என்பதுதான் வேடிக்கையானது!
ஈழப்போர் பின்னணியில் இந்தியா!
----------------------------
கடந்த 14.12.2008 அன்று, ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய “தமிழர் எழுச்சி உரைவீச்சு” என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில்தான், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி விட்டார்கள் எனக் குற்றம்சாட்டி ஐயா பெ. மணியரசன், தோழர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரைக் கருணாநிதி ஆட்சியின் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இக்கைது நடவடிக்கை தமிழ்நாடெங்கும் தமிழின உணர்வாளர்களைக் கொதித்தெழ வைத்தது. பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடந்தன. ஈழப்போரை நிறுத்தக் கோரும் போராட்டங்கள் விரிவடைந்தன.
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் 22.12.2008 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி) நடத்திய கண்டனப் போராட்டத்தில் காங்கிரசுத் தலைவர்கள் கே.வி. தங்கபாலு – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டதை “சன்” தொலைக்காட்சியில் முழுவதுமாகக் காட்டினார்கள். அதனையொட்டி, அப்பகுதியில் காவல்துறையினர் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று தோழர்களை அடித்துத் துவைத்துக் கைது செய்தது. கோவை சிறையிலிருந்து ஐயா மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் ஆகிய மூவரும் 2009 சனவரி 19இல் தான் விடுதலையானார்கள்.
சிறையிலிருந்து விடுதலையான உடனேயே, காங்கிரசுத் தலைமையிலான இந்திய அரசுதான் தமிழின அழிப்புப் போரை ஈழத்தில் நடத்துகிறது என உறுதியாக அறிவித்து, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அலுவலகங்களை முடக்கும் போராட்டங்களை நடத்த வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறைகூவல் விடுத்தது.
திராவிட விமர்சனங்களைக் கடந்து
----------------------------
பெரியாரின் திராவிடக் கருத்தியலின் மீதான திறனாய்வுகள் இப்போது நடைபெறுவதைப் போல் காலந்தோறும் நடந்து வந்திருக்கிறது. “ஈரோட்டுப் பாதை சரியா?” எனக் கேட்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் போன்றோரும் (1947), “ஆரிய மாயையா? திராவிட மாயையா?”, “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்”என சி.பி.எம். தலைவர் பி. இராமமூர்த்தி போன்றோரும், “பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டி புதைத்த திராவிடர் கழகம்” என ஐயா வே. ஆனைமுத்து அவர்களும், “திராவிட மாயை” என்றெழுதிய சுப்பு எனப் பல்வேறு கடுமையான திறனாய்வுகள் திராவிடத்தின் மீது அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருந்தன.
இதுபோல், 1989லேயே திராவிடம் மற்றும் பெரியார் மீதான திறனாய்வுகளை “திராவிட இயக்கத்தின் இன்றையப் பொருத்தப்பாடு” என்ற கட்டுரைத் தொடராக ஐயா பெ. மணியரசன் தொடர்ந்து “கண்ணோட்டம்” ஏட்டில் எழுதி வந்தார். அதன்பின், 2002ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை எழுதிய திராவிடம் குறித்த திறனாய்வுகளை “திராவிடம் – தமிழ்த்தேசியம்” என்ற தனி நூலாக வெளியிட்டு, திராவிடம் மற்றும் பெரியார் மீதான திறனாய்வுகளை தொடர்ந்து கூர்மைப்படுத்தி வந்தார்.
இதுபோன்ற திறனாய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்த நிலையில், அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுதான், ஈழப்போர் சூழல் கருதி, 2008 – 2009இல் தோழர் கொளத்தூர் மணி - கோவை இராமகிருட்டிணன் தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளோடு இணைந்து “தமிழர் ஒருங்கிணைப்பு” என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினோம்.
அதன் முதல் போராட்டமாக, ஈழப்போரில் சிங்களருக்கு உதவும் இந்திய அரசுக்குச் சொந்தமான தஞ்சையிலுள்ள இந்திய விமானப் படைத் தளத்தை முற்றுகையிடும் போராட்டத்தை 31.01.2009 அன்று நடத்தினோம். ஐயா மணியரசன், தோழர் கொளத்தூர் மணி (பெ.தி.க.), தோழர் சிவகாளிதாசன் (த.தே.வி.இ.) உள்ளிட்ட ஆண்கள் – பெண்கள் – குழந்தைகள் என 300 பேர்கள் வரை இப்போராட்டத்தில் கைதான நிலையில், அனைவர் மீதும் உடனே வழக்குப்பதிவு செய்ததுடன், அனைவரையும் இரவோடு இரவாக திருச்சி சிறையில் அடைக்க ஏற்பாடு செய்தது கருணாநிதியின் காவல்துறை! அப்போது, அதிகாலை 3 மணியளவில் தஞ்சை வழக்கறிஞர்களின் முயற்சியால், சொந்தப் பிணையில் அனைவரும் விடுதலையாயினர்.
இச்சூழலில், பெரியார் தி.க. சார்பில், 15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில், தோழர் கொளத்தூர் மணி – சீமான் ஆகியோரோடு மேடையேறிப் பேசிய ஐயா மணியரசன், “தமிழர்களின் உரிமைகளைக் காக்கக்கூடிய ஒரு அரசு தமிழ்நாட்டில் இல்லை! யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக சட்டமன்றம் தில்லிக்குக் கொத்தடிமை சேவை செய்யும் அதிகாரமற்ற மன்றமே! தமிழர் வரிப்பணத்தில் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசை எதிர்த்து வரிகொடா இயக்கத்தைத் தொடங்குவோம்” என்று பேசினார். இப்பேச்சு, பெ.தி.க.வினரின் “புரட்சிப் பெரியார் முழக்கம்” – 19.02.2009 இதழில் கூட பதிவாகியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, 20.02.2009 அன்று, இந்திய அரசின் வரி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களை “தமிழர் ஒருங்கிணைப்பு” தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கைதாகினர்.
இதனையடுத்து, சென்னை தியாகராயர் நகரில் 09.03.2009 அன்று, “தமிழர் ஒருங்கிணைப்பு” சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஐயா பெ. மணியரசன், “தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்திருந்தால், நமக்கென்று ஒரு குடியரசுத் தலைவர், ஒரு பிரதமர் என நாம் ஐ.நா. மன்றத்தில் நம் துயரை வெளிப்படுத்தி போர் நிறுத்தம் கோரியிருப்போம். ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுங்கூட இங்கே நமக்கென்று ஒரு அரசு வேண்டும். நமக்கும் இறையாண்மை வேண்டும்” என்று பகிரங்கமாகப் பேசினார். அப்பேச்சை, “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஏட்டில் (02.04.2009, பக்கம் 3) முழுவதுமாக வெளியிட்டார்கள்.
இளந்தமிழர் இயக்கம்
------------------
இதே காலகட்டத்தில், தழல் ஈகி முத்துக்குமாரின் மாற்று அரசியலுக்கான அறைகூவலை ஏற்று, தோ்தல் புறக்கணிப்பு - தமிழீழ விடுதலை - தமிழகத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்கிற மூன்று அடிப்படை கொள்கைகளில் உடன்பாடுள்ள இளையோரின் அமைப்பாக “இளந்தமிழர் இயக்கம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கினோம். அதன் ஒருங்கிணைப்பாளராக நான் (அருணபாரதி) செயல்பட்டேன். செயற்குழு உறுப்பினர்களாக தோழர் ம. செந்தமிழன், திருமுருகன் காந்தி, வழக்கறிஞர்கள் சேசுபாலன்ராசா, செபா கௌதம், அங்கயற்கண்ணி, கோ. இராசாராம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். திரைப்பட இயக்குநர் ராம் வீட்டில்தான் இதற்கான முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வமைப்பின் வழியே, “தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்” என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுத்து, தமிழ்நாடு முழுவதும் தமிழீழ இன அழிப்புப் போரை விளக்கியும், அப்போரை இந்தியாவே முன்னின்று நடத்துகிறது எனக் குற்றம்சாட்டியும் இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் கோர வேண்டுமென்று வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான கூட்டங்களை நடத்தினோம். 2009 பிப்ரவரி 25 அன்று காலை தஞ்சை கமலா திரையரங்கு அருகில் தொடங்கிய இப்பரப்புரைப் பயணத் தொடக்க நிகழ்வில், திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி, ஓவியர் புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். “Taking Tamil’s issue to Villages” என்று தலைப்பிட்டு, ஆங்கில இந்து ஏட்டில் 26.02.2009 அன்று இப்பரப்புரைப் பயணம் குறித்து செய்தி வெளியானது.
வட தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும், தென் தமிழ்நாடு நோக்கி ஒரு அணியும் பயணப்பட்டது. இவ்விரு அணியினரின் பரப்புரைகளும் 2009 மார்ச் 6 அன்று சேலத்தில் நடைபெற்ற இன எழுச்சி மாநாட்டில் நிறைவடைந்தது. இளந்தமிழர் இயக்கத்தின் தொடக்க நிகழ்விலும் சரி, தமிழ்நாடு முழுவதும் நடந்த அப்பரப்புரைப் பயணத் திட்டத்திலும் சரி, தோழர் திருமுருகன் காந்தி பங்கெடுத்துக் கொள்ளவில்லை!
பரப்புரைப் பயணத்தின் நிறைவாக 06.03.2009 அன்று, சேலத்தில் நடைபெற்ற இன எழுச்சி மாநாட்டில், “காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்” என தமிழ்நாட்டு மக்களிடையே பரப்புரைப் பயணத்தின்போது திரட்டப்பட்ட ஒரு இலட்சம் கையெழுத்துகளை மேடையில் வைத்தோம். ஐயா மணியரசன், கோவை இராமகிருட்டிணன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், தோழர் தியாகு எனப் பலரும் பங்கேற்ற அம்மாநாட்டில், ஐந்து தீர்மானங்களை இயற்றினோம். (இளந்தமிழர் இயக்கத்தின் அப்போதைய அனைத்துச் செயல்பாடுகளும் அதன் இணையதளத்தில் இப்போதும் அப்படியே உள்ளது. விரிவிற்குக் காணக் : https://elanthamizhar.blogspot.com ).
தமிழர்களுக்கு விரோதமான இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு எதிராகப் போராடுவோம் என உறுதியளிக்கிறோம் என்பதுதான் மாநாட்டின் முதல் தீர்மானம்! தேர்தல் கட்சிகளை நம்பிப் பயனில்லை, மாற்று அரசியலை முன்னெடுப்போம் என்பது இரண்டாவது தீர்மானம்! புலிகள் மீதான தடையை நீக்கி, சிங்கள அரசுக்கான உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டுமென்பது மூன்றாவது தீர்மானம்! காங்கிரசுக் கட்சி ஆரிய இனவெறிக் கட்சி எனப் பிரகடனப்படுத்தியது நான்காவது தீர்மானம்! இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை விடுதலை செய்யக் கோரியது ஐந்தாவது தீர்மானம்! இந்த நான்காவது தீர்மானத்தை – இளந்தமிழர் இயக்கத்தின் தோழராக மேடையேறிச் சென்று படித்தவர் வேறு யாரோ அல்ல – திருமுருகன் காந்திதான்!
இவ்வாறு, இந்தியாவை ஏகாதிபத்தியம் என்றும், இந்தியாதான் இப்போரை முன்னெடுக்கிறது என்றும் போரின்போதே தெளிவாக தமிழ்நாடெங்கும் வீதிகள் தோறும் கொண்டு சென்று இயங்கியவர்கள் நாங்கள்!
2009 நாடாளுமன்றத் தேர்தல்
-----------------------
போர் நடந்து கொண்டிருக்கும்போது, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. இந்நிலையில், 29.03.2009 அன்று கூடிய பெ.தி.க.வின் மாநிலச் செயற்குழுவில், தி.மு.க. – காங்கிரசுக் கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள அ.தி.மு.க.வை ஆதரிப்பது என அவசரமாக முடிவெடுத்து அறிவித்தார்கள். அதன்பிறகு, பெ.தி.க.வினர் போர் நிறுத்தம் கோரியப் போராட்டங்களைத் தனியே நடத்தத் தொடங்கினர்.
ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையிலான இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 08.04.09 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஐயா பெ. மணியரசன், “இந்திய அரசை தமிழகத்தில் செயல்பட விடாமல் முடக்குங்கள்" என்றே அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தார்.
தேர்தல் அரசியல் பங்கேற்பில் நம்பிக்கையில்லாத தமிழ்த்தேசிய அமைப்புகளான தமிழ்த்தேசியப் பேரியக்கமும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கமும் இணைந்து, தமிழின அழிப்புப் போரை நடத்தும் இந்திய – சிங்களக் கொடிகளை எரிக்கும் வீரமிகுப் போராட்டத்தை 25.04.2009 அன்று, கோவை, சென்னை, தஞ்சை, ஈரோடு, ஓசூர் ஆகிய இடங்களில் நடத்தியது. பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை தோழர்கள் ஏழு மாதங்கள் சிறையில் வாடினர். உச்ச நீதிமன்றம் வரை சென்றுதான் அவர்களை பிணையில் எடுக்க முடிந்தது. 2009ஆம் ஆண்டின் இறுதியில் “ஆனந்த விகடன்” ஏடு, அந்த ஆண்டின் முகாமையான 50 நிகழ்வுகளைப் பட்டியலிட்டபோது, இந்தியக் கொடி எரிப்புப் போராட்டத்தையும், உச்ச நீதிமன்றம் வரை சென்று பிணை பெற்றதையும் குறிப்பிட்டு எழுதியது.
காங்கிரசுக் கட்சியைத் தோற்கடிக்கும்படி தான் மக்களிடையே பரப்புரை செய்ய முடியுமே தவிர, அ.தி.மு.க.வுக்கு எக்காரணம் கொண்டும் வாக்குக் கேட்க முடியாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுதியாக முடிவெடுத்தது. எனவே, “காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்!” என்ற அளவில்தான், பரப்புரைகளை த.தே.பே. முன்னெடுத்தது. ஈழப்போர்க் காட்சிகள் கொண்ட குறுந்தகடுகளை பொது மக்களிடையே வீடு வீடாகச் சென்று கொடுத்து, தி.மு.க. – காங்கிரசுக் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என மக்களிடம் வேண்டுகோள் வைத்தோம். இந்தக் குறுந்தகடுகளைத் தேடி ஐயா மணியரசன் வீட்டில் காவல்துறை சோதனை, நானும் செந்தமிழனும் தங்கியிருந்த ஓட்டலில் காவல்துறை சோதனை, காவல்துறையினரின் துரத்தல் என அனைத்தையும் எதிர் கொண்டுதான், அப்போது கடும் அடக்குமுறைகளுக்கிடையே இப்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.
நான் பெரியாரின் பேரன் என இயக்குநர் சீமான் அப்போது பேசியிருந்ததைக் குறிப்பிட்டுவிட்டு, சிறு வயதில் பெரியார் செய்த “தவறின்” காரணமாக வேண்டுமானால் சீமான் கள்ளத்தனமாகப் பிறந்திருக்கலாம் என்றார் அப்போதைய காங்கிரசு நடுவண் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்! பெரியாரைக் கொச்சையாகப் பேசிய அவரைக் கண்டித்து, அவருக்கெதிராக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த இளந்தமிழர் இயக்கத் தோழர்கள் 28 பேர், அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராடிக் கைதாகி, அதன் காரணமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டோம். பெரியாரிஸ்ட்டுகள் அப்போது அ.தி.மு.க.வுக்கு வாக்குக் கேட்பதில் தீவிரமாக இருந்தனர்.
2009 மே மாதம் - இன அழிப்புப் போர் இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் நடந்து முடிந்த நிலையில், சூன் மாதமே - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார் :
“தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோரி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.
மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆரியர் பகையின் தொடர்ச்சியே.
நாம் “இந்தியர்” அல்லர்; தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!
தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புரியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது.
ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். தமிழகத்தின் தமிழ்த்தேசத் தாயகப் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிரிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.
தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த்தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.
தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த்தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுரிவோர், ஒதுங்கி நின்று உதவி புரிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை”. (“கண்ணீரைத் துடையுங்கள், களத்திற்கு வாருங்கள்” கட்டுரை, தமிழர் கண்ணோட்டம் 2009 சூன் இதழ்).
மேற்கண்ட எமது நிலைப்பாட்டில் இன்றளவில்கூட எந்த மாற்றமும் இல்லை!
ஈழப்போர் முடிந்து, ஒட்டுமொத்த தமிழ்நாடும் செய்வதறியாமல் கனத்த மவுனத்தோடு இருந்த சூழலில், அந்த அமைதியை உடைத்தெறியும் வகையில் 2009 சூலை 12 அன்று, திருச்சியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைத் திரட்டி "தமிழ்த்தேசியம்" என்ற தலைப்பிலேயே சிறப்பு மாநாட்டை நடத்தியது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! அதில் தோழர் கொளத்தூர் மணியும்கூட பங்கேற்றார்.
“தமிழ்நாடு தனது இறையாண்மையை மீட்காமல், தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளை மீட்க முடியாது. இந்த இலட்சியத்தோடு மக்கள் திரள் எழுச்சி தமிழ்நாட்டில் பீறிட்டுக் கிளம்பாமல் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும் நம்மால் உறுதியான முறையில் உதவ முடியாது. இதர நாடுகளில் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்காது.
இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு தமிழர்களுக்கு இருந்திருந்தால், தமிழ்நாட்டு உரிமைகள் பறிபோயிருக்காது; ஈழத் தமிழினமும் அழிந்திருக்காது. நமது முதன்மை வேலைத்திட்டம் தமிழ்நாட்டில் தேசிய இறையாண்மை மீட்பே!” என்பதே அம்மாநாட்டின் முதன்மைத் தீர்மானம்! அதை “தமிழ்த்தேசியத்தின் திசைவழி” என தனி நூலாகவும் வெளியிட்டோம்.
1990 தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாட்டிலிருந்து, இன்றுவரை தமிழ்த்தேசியத்தின் சாரமாக இறையாண்மை மீட்பு என்பதையே தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுதியாக முன்வைத்துக் கொண்டிருப்பதை, இதை உற்று நோக்கும் அனைவரும் எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.
2009 ஆகத்து 26 அன்று, இத்தீர்மானத்தை விளக்கும் வகையில் தமிழ்த்தேசிய எழுச்சி நாள் கடைபிடித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
இதுவரை தலைவர்களுக்கு சிலை எழுப்பியதையே கண்டிருந்த தமிழ்நாடு, இந்திய ஏகாதிபத்தியம் எனக் கடிதம் எழுதிக் கண்டித்துவிட்டு – தமிழிழீழ விடுதலைக்காகத் தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமாருக்கு சிலை எழுப்பியதைக் கண்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அப்பணிக்கு பலரும் உடன்நின்று பாராட்டினர். ஆனால், அச்சிலையைத் திறப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை கருணாநிதியின் காவல்துறை! சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஆணை பெற்ற பிறகே அச்சிலையைத் திறக்க முடிந்தது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தமிழர்கள் இந்திய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாகத் தான் இருக்க முடியும், தமிழ்த்தேச இறையாண்மை மீட்பே இன்றைய தேவை என 1990களிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு முறையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்துச் செயல்பட்டு வரும் நிலையில், “தமிழ்நாட்டில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் வெளியுறவு, பாதுகாப்பு கொள்கையை மாற்றிவிடலாம்” என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் எப்போதும் கூறாத ஒன்றை, எதற்காக பொய்யாகக் கூறியதாக மே பதினேழு இயக்கத்தினர் கட்டமைக்கிறார்கள்?
ஆரிய இந்தியத்தை அம்பலப்படுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒன்றுமே செய்யவில்லை என்ற மே பதினேழின் குற்றச்சாட்டு குறித்தும், 2014இல் மே பதினேழு இயக்கம் செய்த தகிடுதத்தங்கள் குறித்தும் அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்!
(தொடரும்)
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
All reactions:

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT