தமிழீழ விடுதலைப் போராட்ட ஈகத்தைப் பேசும் "சல்லியர்கள்" திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படும் அநீதி!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கண்டனம்!
தமிழ்நாட்டு திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமின்றி, திரையரங்குகள் மீதும் வெளிமாநில முதலாளிகளின் மேலாதிக்கம் தமிழ்த் திரையுலகத்தையே மூச்சுமுட்ட வைக்கிறது.
இன்று (1.1.2026) வெளியாகும் இளம் இயக்குநர் தி. கிட்டுவின் "சல்லியர்கள்" திரைப்படத்திற்குத் தேவையான திரையரங்குகள் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராளிகளிடையே, போர்ச் சூழலில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களின் ஈகத்தை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படம், தமிழ்நாட்டு இளையோரிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இச்சூழலில், பி.வி.ஆர் சினிமாஸ் போன்ற திரையரங்க வளாகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வெளிமாநில ஏகபோக நிறுவனங்களால், திரையரங்கம் மறுக்கப்படுவது கொடுமையானது.
தமிழின உணர்வுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள், இத்திரைப்படத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே தயாரித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இத்திரைப்படத்தை வெளியிடப் போராடி வருகிறார்.
இவரைப் போன்ற இளம் படைப்பாளர்கள் குறைந்த பொருட்செலவில் தரமான படங்கள் எடுக்கும் முன் முயற்சியை இது முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும். தமிழில் தரமான திரைப்படைப்புகள் வருவதையே தடுத்துவிடும்.
அதைவிட, தமிழ்த் திரை உலகத்தையே அதன் உருவாக்கம், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வெளியிடுவோர் (விநியோகஸ்தர்கள்), திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லா நிலையிலும் வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தில் முடக்கிவிடும்.
எனவே, இச்சிக்கலில் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு "சல்லியர்கள்" படத்திற்கு சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மையங்களிலும் முதன்மைத் திரையரங்குகள் கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்றும், தமிழ்நாட்டுத் திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Post a Comment