உடனடிச்செய்திகள்

Tuesday, January 20, 2026

கோழிக்கறி குழுமங்களின் கொள்ளைக்காக உழவர் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோர் சிறையில்! முதலமைச்சர் தலையிட்டு உடனே விடுதலை செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

கோழிக்கறி குழுமங்களின் கொள்ளைக்காக

உழவர் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோர் சிறையில்!

முதலமைச்சர் தலையிட்டு உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்க் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. ஈசன் முருகேசன் அவர்களின் கைது அநீதியானதும், கண்டனத்திற்குரியதுமாகும்!

 

தமிழ்நாட்டு உழவர்கள் உழவுத்தொழிலில் போதிய வருமானம் இல்லாத நிலையில், கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கிலோவுக்கு உற்பத்தி தொகையாக 6.50 ரூபாய் நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இது தற்போது தேங்காய் மஞ்சி, மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வால் விவசாயிகள் கறிக்கோழி பண்ணைத் தொழிலில் தொடர்ந்து பேரிழப்பு அடைந்து வருகின்றனர்.

 

நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர், கால்நடைத்துறை அமைச்சர், கால்நடைத்துறை இயக்குநர், கால்நடைத்துறை செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து நிறுவனங்களுடன், கறிக்கோழி விவசாயிகள், அரசு இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரிக்கை வைத்தனர்.

 

பல மாதங்கள் ஆகியும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கறிக்கோழி பண்ணை விவசாயிகளோடு ஆலோசித்து னவரி 1 முதல் பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு, அதனை தொடர்ந்து கடந்த னவரி 7ஆம் தேதி அன்று சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடைத்துறை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தலையிட்டு வருகின்ற னவரி 21ஆம் தேதியன்று முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது.

 

இந்நிலையில் நிறுவனங்கள் விவசாயிகளை மிரட்டி கோழி குஞ்சுகளை கட்டாயத்தின் பேரில் இறக்கி வந்தன. இதனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளும் கண்டித்து, கட்டாயத்தின் பேரில் நிறுவனம் குஞ்சு இறக்குவதை தடுத்து நிறுத்தினர்.

 

அநீதி இழைக்கும் நிறுவனங்களின் அழுத்தத்தின் பேரில் காவல்துறையானது 13.01.2026 இரவு சுமார் 10 மணி அளவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் தலைவர் சண்முகசுந்தரம் இருவரும் கள்ளிமந்தயம் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் வழியில், அவிநாசிபாளையம் என்ற இடத்தில் குடிமங்கலம் காவல்துறை குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரையும் கைது செய்துள்ளது. இரவு 10 மணிக்கு கைது செய்து காலை 7 மணி வரை வாகனத்திலேயே அலைக்கழித்து அதன் பிறகு குடும்பத்திற்கு தகவல் சொல்லி உள்ளனர். தலைவர் சண்முகசுந்தரம் அவர்களை காலை 9 மணி வரை வாகனத்திலேயே அடைத்து மனித உரிமை மீறலில் குடிமங்கலம் காவல்துறை ஈடுபட்டுள்ளது. மேலும் நிர்வாகிகள் 8 பேரை இரவோடு இரவாக கைது செய்து, அவர்களின் குடும்பத்திற்கு எந்தவித தகவலும் அளிக்காமல் நயவஞ்சகமாக செயல்பட்டுள்ளது. நிறுவனர் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்த உடன் நிர்வாகிகள் இரவு முழுவதும் தேடி காலை குடிமங்கலம் காவல்துறை கைது செய்ததை உறுதி செய்தனர்.

 

தாராபுரம் சாந்தி ஃபீட்ஸ் நிறுவனம் குஞ்சுகளை வாகனத்தில் ஏற்றி வரும்போது அவர்களை மறித்து ஆபாசமாக பேசி, மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் BNS 189(2), 126(2), 296(b), 351(2), பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் பிரிவு 1992 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

ஈசன் முருகசாமி உள்ளிட்ட போராடுகிற உழவர்கள் மீது அடக்குமுறை ஏவுவது கடும் கண்டனத்துக்குரியது.

 

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT