வெளி மாநிலத்தவர்க்கு 
வாக்காளர் அட்டை  வழங்காதீர்!
    வரும் திசம்பர் 16 அன்று சென்னை தலைமைச்  செயலகம் – இந்தியத் 
தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
    
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
      
     
    தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (12.10.2025)  காலை முதல் மாலை வரை, குடந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் ஐயா  பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன்  அவர்கள் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் க. முருகன்,  துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை,  பழ. இராசேந்திரன், ஓசூர் கோ. மாரிமுத்து, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, குடந்தை க.  விடுதலைச்சுடர், பூதலூர் பி. தென்னவன், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த.  கவித்துவன், மதுரை கதிர்நிலவன், ஈரோடு வெ. இளங்கோவன்,  சென்னை வெற்றித்தமிழன், பெண்ணாடம் மா. மணிமாறன், புதுச்சேரி இரா. வேல்சாமி, க. தீந்தமிழன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்  பட்டன. 
     
    தீர்மானம்  1 :
    வெளி மாநிலத்தவர்க்கு  வாக்காளர் அட்டை வழங்காதீர்!
    வரும் திசம்பர்  16 அன்று சென்னை தலைமைச் செயலகம் – 
    இந்தியத் தேர்தல்  அதிகாரி அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
     
    தமிழ்நாடு வெளி மாநிலத்தவரின் வேட்டைக்காடாகத் தவிக்கிறது. வெளி மாநிலங்களைச்  சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்திக்காரர்கள் பெருமளவில் தமிழ்நாட்டில் குடியேறி, தமிழர்களின்  வேலை – தொழில் – வணிகம் – கல்வி என அனைத்துத் தளங்களிலும் ஆக்கிரமித்து வருகின்றனர்.  இப்போது இதன் அடுத்தகட்டமாக தமிழ்நாட்டின் வாக்காளர்களாக அவர்கள் பெருமளவில் மாற்றப்பட்டுள்ளனர்.  
     
    பீகாரிலிருந்து மட்டும், ஏறத்தாழ 7.5 இலட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் திணிக்கப்பட  உள்ளார்கள். அடுத்தடுத்து, ஒரிசா, சார்கண்ட் உள்ளிட்ட பிற மாநில வாக்காளர்கள் அதிகரிப்பார்கள்.  இது சட்டப்படித் தமிழர் தாயகமாக உள்ள தமிழ்நாட்டின் இனச் சமநிலையை பாதிப்பதாக உள்ளது.  தமிழ்நாட்டின் மரபுவழி அரசியலுக்குத் தொடர்பில்லாத அயல் மாநிலத்தவரைத் திணிப்பது தமிழர்களின்  தாயக உரிமையைப் பறிப்பதாக உள்ளது. 
     
    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள வெளிமாநிலத்தவர்க்கு ஆங்காங்கு  வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்ற அடிப்படை ஆவணங்களை வழங்கி தி.மு.க. – அ.தி.மு.க.  ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றனர்.  
     
    தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக்கிட முயலும் ஆரியத்துவா பா.ச.க. – காங்கிரசு  கட்சிகளின் சதித் திட்டத்திற்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் துணை போகிறது. சிறப்பு தீவிர  வாக்காளர் சீராய்வுத் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக வெளி மாநிலத்தவர்கள்  சேர்க்கப்படுவது, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தைக் கூட இல்லாமல் சிதைத்து,  தமிழர்களை சொந்தத் தாயகத்திலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் ஒரு இனச் சிதைப்புச்   செயலாகும்!   
     
    எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தான நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.  1956க்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்த வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை – குடும்ப  அட்டை – ஆதார் அட்டை வழங்குவதற்கான அடிப்படைப் பணிகள் எதனையும் தமிழ்நாடு அரசு செய்யக்  கூடாது. இந்தியத் தேர்தல் ஆணையம் முன்னெடுக்கும் இந்த வாக்காளர் சீராய்வுத் திட்டத்தைக்  கைவிட வேண்டுமென்று இந்தியத் தேதுாதல் ஆணையத்தைக் வேலியுறுத்த வுண்டும். இந்திய அரசு  இந்த திசையில் அயல் மாநிலத்தவர்த் திணிப்புக்கு துணை போவதற்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கக்  கூடாது; தடுத்து நிறுத்த வேண்டும். 
     
    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் திசம்பர்  16ஆம் நாள் – செவ்வாய் அன்று சென்னை – தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகம் - இந்தியத்  தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி அலுவலகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்  முன்னெடுப்பது எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இத்தலைமைச் செயற்குழு ஒருமனமாகத்  தீர்மானிக்கிறது! 
     
    தமிழ் மக்கள், தங்களது தாயக உரிமையையும், சனநாயகத்தையும் காக்க, குடும்பம் குடும்பமாக  அணித்திரண்டு வந்து இந்த அறப்போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்றும்  அன்புரிமையுடன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அழைப்பு விடுக்கிறது! 
     
    தீர்மானம்  2 :
    காசாவில் போர் நிறுத்தத்தை வரவேற்கிறோம்! 
    பாலத்தீனத்தைத் தனி நாடாக அனைத்துலகம் ஏற்க வேண்டும்! 
     
    பாலத்தீனத்தின் மீது யூத இனவெறி இசுரேலின் இனப்படுகொலைப் போருக்குப் பின்னர்,  அண்மையில் 08.10.2025 அன்று அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமிழ்த்தேசியப்  பேரியக்கம் உளமார வரவேற்கிறது! உலகெங்கிலும் பாலத்தீனத்திற்கு ஆதரவாக, குறிப்பாக ஏப்ரல்  17 - 2024 முதல் இசுரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த மாபெரும் மக்கள்  திரள் போராட்டங்கள் மகத்தானவை. 
     
    வரலாறு காணாத வகையில், இந்த இனக்கொலைப் போரை  நிறுத்த வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான படகுகளில், கிரேட்டா துன்பர்க், நெல்சன் மண்டேலாவின்  பேரன் மாண்ட்லா மண்டேலா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான செயல்பாட்டாளர்கள், நூற்றுக்கும்  மேற்பட்ட நாடுகளிலிருந்து கடல் பயணம் மேற்கொண்டு, காசா கடல் எல்லை அடைந்தது வரலாற்றில்  குறிக்கத்தக்க போராட்டமாகும். 
     
    ஒட்டுமொத்த காசாவே தரைமட்டமான நிலையிலும்,  உறுதியாக நின்று போராடி வரும் ஹமாஸ் போராளிகளின் நெஞ்சுறுதி ஒடுக்குண்ட இன மக்கள் அனைவருக்கும்  ஊக்கமளிப்பதாகும். 
     
    இவை அனைத்தின் விளைவாக, இந்தப் போர் நிறுத்தம்  ஏற்பட்டுள்ளது. 
     
    அனைத்துலக நாடுகள் அனைத்தும் இந்த போர்நிறுத்த  ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரித்து, நிரந்தரத் தீர்வை நோக்கி நகர வேண்டும். சுதந்திரப்  பாலத்தீனத்திற்கு உடனடியாக முழுமையான அங்கீகாரம் வழங்க வேண்டும்.
     
    இசுரேலையும் பாலத்தீனத்தையும் அண்டை நாடுகளாக  ஏற்று, அமைதியான சகவாழ்வை உருவாக்க உலக நாடுகள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மறைமுகமாக  யூத இனவெறி இசுரேலுக்கு உதவும் இந்திய அரசு, தனது போக்கினைக்  கைவிட்டு, பாலத்தீனத்திற்கு ஆதரவானச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், பாலத்தீன  மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக ஹமாஸ் அமைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப்  பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது! 
     
    தீர்மானம்  3 :
    குடந்தை அருள்மிகு  ஆதிகும்பேசுரர் திருக்கோயில் 
    குடமுழுக்கைத் தமிழிலேயே  நடத்த வேண்டும்!
     
    திருக்கோயில் நகரம் என்றழைக்கப்படும் குடந்தையில்  அமையப் பெற்றுள்ள அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயிலுக்கு, வரும் 2025 திசம்பர்  1 அன்று, திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடத்தவிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவித்துள்ளதை மனமார வரவேற்கிறோம்!
     
    தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும், நாடாண்ட மன்னர்களாலும் உருவாக்கப்  பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரிகமும் திருக்கோயிலை மையமாக வைத்துத் தோன்றிய நாகரீகம்.  கோயிலைத் தழுவிய குடிகள், குடிகளைத் தழுவிய கோயில்கள் என்று குன்றக்குடி அடிகளார் உரைப்பார்கள்.  ஊரின் தலைமைச் செயலகமே திருக்கோயிலாக இருந்தது.
     
    காலங்காலமாக தமிழ்நாட்டில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. தேவாரம் பாடிய  சுந்தரர், "அர்ச்சனைப் பாட்டும் தமிழே" என்றார். "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாய்த்  தமிழ் செய்யுமாறே" என்றார் திருமந்திரத்தில்  திருமூலர்.
     
    நாளடைவில் வழிபாடுகள் யாவும் வடமொழி மயமாகிவிட்டன. இந்நிலையில், பக்தர்களின்  வழிபாடுகள் திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம்  பெற வேண்டும் என்று அடியார்களாலும், பத்திமை உள்ளம் கொண்ட பெரியோர்களாலும் கோரிக்கை  வைக்கப்பட்டது. அவ்வகையில், தமிழ் நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களில் அன்றாட  வழிபாட்டையும், குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் தமிழில் நடத்த வேண்டுமென்பது  தமிழ் மக்களின் பெரு விருப்பமாகும். அதை நீதிமன்றமும் ஏற்றுத் தீர்ப்பளித்துள்ளது.  
     
    கடந்த 2015 டிசம்பர் 16இல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த வழக்கில்  தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "சமற்கிருதத்தில்தான் கருவறை அர்ச்சனை நடைபெற வேண்டும்  என்று எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை" என்று உறுதிபடத் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு, கோயில் கருவறையில்  தமிழ் மந்திரம் ஓதி பூசை (அர்ச்சனை) செய்வதற்கு சுற்றறிக்கையும் (சுற்றறிக்கை எண் : 73848/97/கே.1, நாள்  10.09.1997), அதன்பின் தனி அரசாணையும் (அரசாணை  (நிலை) எண்: 520, 18.11.1997) வெளியிட்டது. கோயில்களின் கருவறையிலும், கலசத்திலும்,  வேள்வியிலும் ஓதுவதற்கான தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு (இந்து சமய அறநிலையத்  துறை) அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது. அதற்கென அர்ச்சகர் பயிற்சியும் அரசு கொடுக்கிறது.
     
    தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின்  போது (05.02.2020), தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் தொடுத்த  வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையின்படி (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), திருக்கோயில்  திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், சமற்கிருதத்திற்கு இணையாக கருவறை – வேள்விச்சாலை  – கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
     
    இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு திசம்பரில் (04.12.2020), கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்)  திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு  உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள்,  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP(MD)/0017750/2020), 03.12.2020 அன்று தீர்ப்பளித்த, நீதிபதிகள் சமற்கிருதத்திற்கு  இணையாகத் தமிழ் மந்திரங்கள் கூறி குடமுழுக்கை நடத்த வேண்டுமென ஆணையிட்டனர். அவ்வாறு  நடத்த முன்வராத கோயில்களுக்கு 10 இலட்ச ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
     
    கடந்த 2024 செப்டம்பர் மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும்,  தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள், சேலம் மாவட்டம்,  கஞ்சமலை - அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக்  கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No:  27340 / 2024) கடந்த 12.09.2024 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு  நீதிபதி டி. கிருஷ்ணக்குமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு,  தமிழில் குடமுழுக்கு நடத்திட ஆணையிட்டது.  
     
    இத்தீர்ப்புகளின்படி, திருக்குடமுழுக்கில் விழாக்களில், வேள்விச்சாலையிலும்,  கலச நீராட்டலிலும், கருவறை வழிபாட்டிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில்  தமிழ் அர்ச்சகர்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத  வேண்டும்.
     
    எனவே, திருஞானசம்பந்தரும் அப்பரும் வந்து பாடிச் சென்று புகழ்பெற்றுள்ள அருள்மிகு  ஆதிகும்பேசுரர் திருக்கோயிலின் குடமுழுக்கை - நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, கருவறை  – வேள்விச்சாலை – கலசம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் - அனைத்து தெய்வச் சடங்குகளிலும்  சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைக் கொண்டு, தமிழில்  மந்திரங்கள் ஓதி சடங்குகள் செய்து, சிறப்புற நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையை  தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
     
    தீர்மானம்  4 :
    22 விழுக்காடு ஈரப்பத  உள்ள நெல்லை 
    தமிழ்நாடு அரசு கொள்முதல்  செய்ய வேண்டும்!
     
    தமிழ்நாட்டின் உழவர் பெருமக்களின் துயர் துடைக்கும்  நோக்குடன், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறையில் உள்ள ஈரப்பதம் தொடர்பான விதிமுறைகளில்  மாற்றம் செய்ய வேண்டும். பருவநிலை மாற்றங்கள், எதிர்பாராத மழைகள் போன்ற காரணங்களால்,  அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அரசு நிர்ணயம் செய்துள்ள 14 முதல் 17 விழுக்காடு  வரையிலான வரம்புக்குள் கொண்டுவருவது உழவர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.  இதனால், உழவர்கள் தங்களது உழைப்பின் பலனை முழுமையாகப் பெற இயலாமல், அண்டை மாநிலங்களில்  உள்ள தனியார் வியாபாரிகளிடம் குறைவான விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
     
    எனவே, உழவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்  கொண்டும், அவர்தம் பொருளியலை வலுப் படுத்துவதற்கும், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு,  நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத வரம்பை 22 விழுக்காடு வரை தளர்த்தி, நெல்லை  கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்தத் தளர்வானது, உழவர்களின் விளைபொருட்களுக்கு  உரிய விலை கிடைப்பதையும், கொள்முதல் நடைமுறைகள் எளிமையாவதையும் உறுதி செய்யும். இதன்மூலம்,  நெல் கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு, விவசாயிகள் கூடுதல் சிரமமின்றி  அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய வழிவகை பிறக்கும்!
     
    அடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில், உழவர்  பெருமக்களிடமிருந்து ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் கட்டாய இலஞ்சமாக 40 ரூபாய் வசூலிக்கப்படுவது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இது, தங்கள் உழைப்பின் பலனை நம்பி வாழும் உழவர்களை மேலும்  சுரண்டும் செயலாகும். 
     
    டாஸ்மாக் மதுக்கடைகளில் கட்டாயமாக பாட்டிலுக்கு  10 ரூபாய் வசூலிக்கப்படுவதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? உழவர்களை சுரண்டுகின்ற  இதுபோன்ற சட்டவிரோதப் பணப் பறிப்பால், நெல்லை விற்க வரும் ஏழை எளிய உழவர்கள் பெரும்  மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த ஊழல் அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் நசுக்குகிறது.
     
    எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு,  நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படும் இந்தச் சட்டவிரோத  இலஞ்ச நடைமுறையை அறவே ஒழிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு  தீர்மானிக்கிறது! 
     
     
    தீர்மானம்  5 :
    தமிழ்வழிக் கல்வியை  ஒழிப்பதுதான்
    திராவிட மாடல் அரசின்  நோக்கமா? 
     
    தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை அறவே ஒழிக்கும்  மறைமுக நோக்குடன் தி.மு.க. தலைமையிலான "திராவிட" மாடல் அரசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.  சென்னை மாநகராட்சியில், அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு  கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கணக்கு மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட முக்கியப் பாடப்  புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படாமல் இருப்பது பெரும் அநீதியாகும். 
     
    அதே வேளையில், அதே பாட நூல்கள் தமிழ்நாடு அரசின்  சென்னை நுங்கம்பாக்கம் கல்வி இயக்குநரக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆங்கிலவழி மாணவர்களுக்கு மட்டும் அனைத்துப் பாட நூல்களும் இலவசமாக முழுமையாக வழங்கப்  பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் இந்த பாகுபாடான செயல், தமிழ்வழிக் கல்வியின் மீதும், அரசுப்  பள்ளி மாணவர்களின் கல்வியுரிமையின் மீதும் அக்கறையில்லாத தன்மையைப் பறைசாற்றுகிறது.
     
    ஆகவே, தமிழ்வழிக் கல்வி மாணவர்களைத் திட்டமிட்டு  தமிழ் பாடநூல்கள் தராமல் புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசின் இந்தச் செயலை தமிழ்த்தேசியப்  பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், சமமான  கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் கடமையாகும். எனவே, தமிழ்வழிக் கல்வி மாணவர்களுக்கு  உடனடியாக அனைத்துப் பாட நூல்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு  வழங்கப்படும் அதே முக்கியத்துவம் தமிழ்வழி மாணவர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய  வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்  கொள்கிறது!  
     
    தீர்மானம்  6 :
    குடந்தை மாநகராட்சி  வணிக வளாகத்திற்கு
    முதல் கட்ட மொழிப்போர்  ஈகி தாளமுத்துவின் பெயரை சூட்டுக!
     
    1938இல் நடைபெற்ற மாபெரும் தமிழ்த்தேசிய எழுச்சியான  இந்தி எதிர்ப்புப் போரில் உயிரீகம் செய்தவர் குடந்தையைச் சேர்ந்த மொழிப்போர் ஈகி தாளமுத்து!  அவரது நினைவைப் போற்றும் வகையில், குடந்தையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மாநகராட்சி  வணிக வளாகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும், அவரது சிலையும் வைக்க வேண்டுமென்றும்  கோரி, கடந்த 21.08.2024 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், கோரிக்கை மனு அளித்தோம்.  அதனை ஏற்று, குடந்தை மாநகராட்சியில் மேயரும், துணை மேயரும் இணைந்து, ஈகி தாளமுத்துவின்  பெயரை வணிக வளாகத்திற்கு சூட்டிட அவை உறுப்பினர்களின் ஏற்பிசைவுடன் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.  
     
    தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து  விட்ட பிறகும்கூட, இன்றுவரை குடந்தை மாநகராட்சி வணிக வளாகத்திற்கு ஈகி தாளமுத்துவின்  பெயர் சூட்டப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசும், குடந்தை மாநகராட்சியும் அக்கறை காட்டி  "மொழிப்போர் ஈகி தாளமுத்து வணிக வளாகம்" என மாநகராட்சி வணிக வளாகத்திற்கு பெயர் சூட்டுமாறும்,  குடந்தையில் அவருக்கு சிலை எழுப்ப வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இத்தலைமைச்  செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! 
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================