திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் குடமுழுக்கைத்
தமிழிலேயே நடத்தக் கோரி மாபெரும் மக்கள் இயக்கம்!
தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழுவில் தீர்மானம்!
===========================================
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம், சேலம் ஆர்.பி. மகாலில் 29.04.2025 அன்று, ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் ஐயா சித்தர் மூங்கிலடியார், ஐயா குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சிம்மம் சத்தியபாமா அம்மையார் (நிறுவனர் – தமிழ்வேத ஆகமப் பாடசாலை, மேச்சேரி, சேலம்), திருவில்லிப்புத்தூர் - தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், ஆசீவக சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளி, செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசன், கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்பிரமணிய சிவா, தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஓசூர் கோ. மாரிமுத்து உள்ளிட்டோரும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
------------------
திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கைத்
தமிழில் நடத்தக் கோரி மாபெரும் பரப்புரை இயக்கம்!
==========================================
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு திருச்செந்தூரில் அமையப் பெற்றுள்ள திருக்கோயிலுக்கு வரும் சூலை மாதம் (7.7.2025) நடைபெறவுள்ள நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழிலேயே நடத்த வேண்டுமெனக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் திருச்செந்தூரில் தொடர் பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது என தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம், ஒருமனமாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் – 2
------------------
தமிழ்க் குடமுழுக்குத் தீர்ப்புகளைப் புறக்கணித்து
ஆரியத்திற்குத் துணை போகும் திராவிட மாடல் அரசுக்குக் கண்டனம்!
=======================================
தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின் போது (05.02.2020), தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மற்றும் பிற அன்பர்களும் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணை (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), அதன்பிறகு அதே ஆண்டு (2020) திசம்பரில், கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கிய தீர்ப்பு (WP(MD)/0017750/2020), கடந்த செப்டம்பர் (2024) மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள் சேலம் மாவட்டம், கஞ்சமலை - அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக் கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No: 27340 / 2024) வழங்கிய தீர்ப்பு (நாள் : 12.09.2024) ஆகிய தீர்ப்புகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களில், சமற்கிருதத்திற்கு இணையாக கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய மூன்று நிலைகளிலும் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன.
சமூகநீதி என்றும், ஆரிய எதிர்ப்பு என்றும் போலி நாடகம் போட்டு, 2021இல் ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான “திராவிட” மாடல் அரசு, இன்றைக்கு வரை இத்தீர்ப்புகளை ஒரு கோயிலில்கூட முழுமையாகக் கடைபிடிக்காமல் கருவறைத் தீண்டாமையைக் கடைபிடித்து வருகிறது. சென்னை வடபழனி திருக்கோயில் குடமுழுக்கு தொடங்கி, பழனி முருகன் கோயில், பேரூர் பட்டீசுவரம் கோயில், வயலூர் முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மருதமலை முருகர் கோயில், திருவெறும்பூர் எறும்பீசுவர் கோயில் எனப் பழமை வாய்ந்த அனைத்துத் திருக்கோயில் குடமுழுக்குகளிலும் இதுதான் நிலைமை!
இவ்வாறு, நீதிமன்றத் தீர்ப்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, மக்களை ஏமாற்றி, ஆரியத்துக்குத் துணை போய்க் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் இக்கொடுஞ்செயலை தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழுக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழ்நாட்டு ஆன்மிகச் சான்றோர்களும், மெய்யன்பர்களும் உலகின் மூத்த செம்மொழியாகவும், ஆனமிக மெய்யியல் களஞ்சியங்களைக் கொண்ட மொழியாகவும், திருமந்திர மொழியாகவும் விளங்கக்கூடிய தமிழ், “திராவிட” ஆட்சிகளில் புறக்கணித்து, இழிவுபடுத்தப்படுவதை வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும். தமிழ் மொழியில் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய இடங்களில் எப்பொழுதும் அர்ச்சனை வழிபாடு நடத்துமாறு கோர வேண்டும். அத்துடன், தமிழ் மொழிப் புறக்கணிப்பு மட்டுமல்ல, தகுதியுள்ள தமிழ் இன அர்ச்சகர் களையும் புறக்கணித்து, “திராவிட” ஆட்சிகள் அவமானப்படுத்துவதையும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டுமென்று இச்செயற்குழு உரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 3
------------------
தமிழ்க் குடமுழுக்கை ஏற்காத நன்கொடையாளர்களிடம்
நன்கொடை வசூலித்தல் கூடாது!
அரசே நிதி தந்து தமிழில் நடப்பதை
ஊக்குவிக்க வேண்டும்!
============================
திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாக்களைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரிக்கை வைக்கும் போதெல்லாம், குடமுழுக்குப் பணிகளுக்காக நன்கொடை தரும் கொடையாளர்கள் சமற்கிருதத்தில் தான் நடத்த வேண்டுமென்றும், பிராமண அர்ச்சகர்களைக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் நிபந்தனைகள் வைப்பதாகவும், அதனை ஏற்றே முழுக்க முழுக்க சமற்கிருதத்தில் பிராமணர்களைக் கொண்டு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றும் பல்வேறு திருக்கோயில்களில் பதில்கள் கிடைத்தன. இதனை ஏற்க முடியாது!
இச்சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்க் குடமுழுக்கை ஏற்பவர்களிடம் மட்டுமே திருக்கோயில் குடமுழுக்கு விழாக்களுக்கு நன்கொடை வசூலிக்கும் நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டும். போதிய தொகை நன்கொடையாகக் கிடைக்கப் பெறாவிடின், இந்து சமய அறநிலையத்துறை அதற்காக தொகை செலவிட்டு, தமிழில் குடமுழுக்கு நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, சமற்கிருத சடங்கு – பிராமண புரோகித ஆதிக்கம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவையின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறோம்!
அதேபோல், சமற்கிருத பூசை மேற்கொள்வோருக்கு அதிகளவு தொகை வழங்கப்படுவதும், தமிழில் பூசை மேற்கொள்வோருக்கு மிகமிகக் குறைவான ஊதியம் வழங்கும் நடைமுறையும் ஒழிக்கப்பட வேண்டும். மொழியை வைத்துப் பாகுபாடு காட்டாமல், சம ஊதியத்தையே சமற்கிருதம் மற்றும் தமிழ் மந்திர பூசை செய்வோருக்கு வழங்கிட வேண்டும் என்றும் தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 4
------------------
தமிழ் வழிபாட்டுப் பயிற்சி பெற்றோரை
தமிழ்க் குடமுழுக்குகளில் பயன்படுத்துக!
================================
நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்க் குடமுழுக்குகளை நடத்த வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, தமிழில் கிரியைகள் செய்வதற்கு தகுதியானவர்கள் இன்றித் தவிப்பதும் நடக்கிறது. தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இன்னும் பணி அமர்த்தல் ஆணை வழங்கப்படாத அர்ச்சக மாணவர்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது பயிற்சி பெற்றுவரும் மாணவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தெய்வத் தமிழ்ப் பேரவையில் உறுப்பு வகிக்கும் தமிழ்ச் சிவநெறி, திருமால் நெறி, சித்தர் நெறி வழிபாட்டாளர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு தனியார் திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி வருகின்றனர்.
பேரூர் ஐயா சாந்தலிங்க அடிகளார், ஐயா சத்தியவேல் முருகனார் போன்றோர்களும், பதிணென் சித்தர் பீடம் ஐயா சித்தர் மூங்கிலடியார், தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீடம் வடகுரு மடாதிபதி ஐயா குச்சனூர் கிழார், சேலம் மேச்சேரி - தமிழ்வேத ஆகமப் பாடசாலை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், திருவில்லிப்புத்தூர் - தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் ஐயா சிவ.வெ. மோகனசுந்தரம், ஆசீவக சமய நடுவத் தலைவர் முனைவர் ஆசீவக சுடரொளி, செந்தமிழ் ஆகம அந்தணர் ஐயா சிவ. வடிவேலன், வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தரராசன் போன்றோர், அவரவர் ஆன்மிக நெறிப்படி சாதி வேறுபாடின்றி அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த அன்பர்களுக்கும் தமிழ் வழிபாடு மற்றும் கிரியைகள் நடத்துவதற்குரியப் பயிற்சிகள் கொடுத்து, தீட்சை வழங்கி பல்லாயிரக்கணக்கான தமிழ் பூசகர்களை உருவாக்கி வருகின்றனர். தமிழ்நாடெங்கும் பல்வேறு தனியார் திருக்கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாடுகளை தமிழில் முறைப்படி நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு, இவர்களைக் கொண்டும், தமிழ்க் குடமுழுக்குகளை நடத்திட நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும், அதற்கு தெய்வத் தமிழ்ப் பேரவை எல்லா வகையிலும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தீர்மானம் – 5
------------------
வள்ளலார் பன்னாட்டு மையத்தை
பெருவெளியில் கட்டாதே!
===========================
வடலூரில் வள்ளலார் உருவாக்கியுள்ள சத்திய ஞானப் பெருவெளியில், தமிழ்நாடு அரசு பன்னாட்டு மையக் கட்டடங்களை எழுப்பக் கூடாது என தெய்வத் தமிழ்ப் பேரவை தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இம்முடிவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவையின் வள்ளலார் பணியக ஒருங்கிணைப்பாளர் ஐயா மு. சுந்தர்ராசன் அவர்களும் மற்றவர்களும் இதற்காக வழக்குத் தொடுத்துள்ளனர்.
அடுத்த விசாரணைகளுக்குப் பிறகு, தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற ஆணைக்குக் காத்திராமல், தமிழ்நாடு அரசு தானே முன்வந்து, பெருவெளியில் கட்டடங்களைக் கட்டக் கூடாது எனப் போராடி வரும் வள்ளலார் அன்பர்களின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டத்தைக் கைவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவையின் இச்செயற்குழு தீர்மானிக்கிறது!
தீர்மானம் – 6
------------------
தமிழ் வழிபாட்டுரிமைக்காக
பெருவேள்வி பூசை மாநாடு
=======================
தமிழ் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கை நடப்பதைத் தடுக்கும் தமிழினப் பகைவர்கள் அழிந்து போக இறை ஆற்றலை வேண்டியும், மக்கள் நலனுக்காக வேண்டுதல் செய்யவும் பெருந்திரள் மக்களைக் கொண்டு, மாபெரும் பெருவேள்வி மற்றும் பூசைகளோடு தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் பெருவேள்விகள் நடத்தவும், இந்நிகழ்வின்போது பலவகைக் கருத்தரங்குகள் நடத்தவும் இச்செயற்குழுக் கூட்டம் ஒருமனமாகத் தீர்மானிக்கிறது. மாநாடு நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 98419 49462, 94439 18095
================================