உடனடிச்செய்திகள்

அமைப்பு வரலாறு
தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்நாட்டு விடுதலை – தமிழீழ விடுதலை ஆகிய இலட்சியங்களை முதன்மை இலக்காகக் கொண்டு தமிழகத்திலிருந்து செயல்பட்டு வரும் தமிழ்த் தேசிய அமைப்பாகும்.

ஆரியப் பார்ப்பனிய இந்தி ஆதிக்க முதலாளிய சக்திகள் கோலோச்சும் இந்திய அரசின் அதிகாரப்பிடியிலிருந்து, தமிழர்களின் தேசிய இனத் தாயகமாக தமிழ்நாட்டை மீட்டெடுத்து இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதும், அதன் பின்னர் நிகரமை (சோசலிசம்) நோக்கிப் பயணிப்பதும் கட்சியின முதன்மைக் கடமைகள்.


இந்தியா முழுமையிலும் உள்ள மாநிலங்களுக்கு விருப்ப அடிப்படையில் ஒன்றித்திருக்கக் கூடிய மக்கன் சனநாயகப் புரட்சியே இலக்கு என அறிவித்துக் கொண்ட செயல்பட்ட சி.பி.எம். கட்சி (Communist Party of India - Marxist), நடைமுறையில் தேர்தல் சீர்திருத்தப் பாதையில் முழுமையாக ஈடுபட்டு, இந்தியத் தேசிய வெறிக் கட்சியாக சீரழிந்தது.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட, சீக்கிய தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஆப்பரேசன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் இறந்து போன இந்திய வீரர்களுக்கு சி.பி.எம். மத்தியக் கமிட்டி வீரவணக்கம் செலுத்தி இந்திய அரசின் பக்கம் நின்றது.

1983 - சூலையில், சிங்கள இனவெறியர்கள் தமிழீழத் தமிழர்கள் மீது பெரும் இனப்படுகொலையை தொடுத்துக் கொண்டிருந்த போது, தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் கட்சிகள் கடந்து தமிழர்கள் கிளர்ந்தெழுந்த போது, சி.பி.எம். கட்சியிடமிருந்து சிறு அசையும் ஏற்படவில்லை.

இதற்கு ஓரிரு  ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் சீக்கியர்கள் மீதும், அமிர்தசரசு பொற்கோயில் மீதும் இந்திய அரசு நடத்திய, ஆக்கிரமிப்புப் போரை சி.பி.எம். ஆதரித்தது. அப்போரில் இறந்த இந்திய ஆக்கிரமிப்புப் படை வீரர்களுக்கு அக்கட்சியின் நடுவண் குழு வீரவணக்கத் தீர்மானம் இயற்றியது.

இவ்வாறு, தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்தும் சி.பி.எம். கட்சியிலிருந்து விலக முடிவெடுத்த தோழர்கள் ஒன்றுகூடி, 1985 சூன் 11, 12 ஆகிய இருநாட்கள் கல்லணையில் விவாதித்தனர். தோழர்கள் பெ.மணியரசன், கி.வெங்கட்ராமன் ஆகியோர் ஒருங்கிணைத்த இக்கூட்டத்தில், தோழர்கள் தணிகைச்செல்வன், இராசேந்திரச்சோழன், தஞ்சை க. பழனிமாணிக்கம், த.கா. பரமசிவம், மா.கோ.தேவராசன் (சிதம்பரம்), புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தோழர் பெ.மணியரசன் எழுதிய இந்தியாவில் தேசிய இனங்கள்என்ற தலைப்பிலான கட்டுரையை ஆவணமாக வைத்து 11.06.1985 அன்று விவாதம் நடைபெற்றது. சி.பி.எம்.லிருந்து விலகி தனிக்கட்சி நடத்திக் கொண்டிருந்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஓம்கார் மறுநாள், 12.6.1985 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை தந்தார்.

இவ்விருநாட்களும் விவாதிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அப்பொழுது சேலத்தில் நடக்கவிருந்த சி.பி.எம். கட்சியின் மாநில மாநாட்டில் விவாதிப்பது என்றும் சி.பி.எம். கட்சி தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அம்மாநாட்டிலிருந்தே வெளியேறி தனிக்கட்சி தொடங்குவது என்றும் தோழர்கள் முடிவு செய்தனர். இச்செய்திமுன் கூட்டியே கட்சித் தலைமைக்குத் தெரிய நேர்ந்தால், எல்ரும் வெளியேறி விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், கல்லணையில் நடைபெற்ற இரகசியக் கூட்டம் கட்சித் தலைமைக்குத் தெரிந்து தோழர்கள் விசாரிக்கப்பட்டனர். கூட்டம் நடத்தப்பட்டதை ஒத்துக் கொண்டு அதற்கான காரணத்தை விளக்கித் தோழர்கள் வாதிட்டனர். கட்சி தோழர்கள் அனைவரையும் சி.பி.எம். வெளியேற்றியது.

1985 சூன் 29,30 ஆகிய நாட்களில் சிதம்பரத்தில் கூடிய தோழர்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(Marxist Communist Party -எம்.சி.பி.) என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். அதன் அமைப்பாளராக தோழர் பெ.மணியரசன் தேர்வு செய்யப்பட்டார்.

சி.பி.எம். தலைமையிலிருந்து வெளியேறி எம்.சி.பி.ஐ. என்ற பெயரில் பீகாரைச் சேர்ந்த தோழர் சிறீவஸ்த்தவா தலைமையில் ஓர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அவர்களோடு தமிழகத் தோழர்கள் இணைந்தனர். அதன்பிறகு, இக்கட்சி இந்திய மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (எம்.சி.பி.ஐ) ஆனது. ஆனால், அவர்களும் இந்தி ஆதிக்கத் தலைமை, ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், சி.பி.எம். கட்சியின் மறு பதிப்பாகவே செயல்படத் தொடங்கியது தமிழகத் தோழர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலையும் அவர்கள் முற்றாக ஏற்க மறுத்தனர்.

எம்.சி.பி.ஐ.லிருந்து தோழர் பெ.மணியரசன் தலைமையிலான தமிழகத் தோழர்கள் அனைவரும் வெளியேற முடிவு செய்தனர். இதன் தொடக்கமாக 1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில் பெரியார் திடலில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடுஎன்ற தலைப்பில் மாநாடு ஒன்று தோழர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கட்சியின் மாநாடாக இல்லாமல் பொதுநிலையில் நடத்தப்பட்ட அம்மாநாடு அது. பேரா. சுப.வீரபாண்டியன் அம்மாநாட்டில் சிறப்பாகப் பங்காற்றினார். அம்மாநாடு தமிழக வரலாற்றில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்திய தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்தது. இதில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும் தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த் தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மாநாட்டுத் தீர்மானத்தை தோழர் பெ.மணியரசன் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுடன் ஒரு மனதாக அது ஏற்கப்பட்டது.

மாநாட்டில் பாவலரேறு பெருஞ்சித்திரனார், சாலை இளந்திரையனார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, கவிஞர் இன்குலாப் உள்ளிட்ட தமிழறிஞர்களும், உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டிருந்தனர். அப்போதைய தமிழகச் சட்டப்பேரவைத் தலைவரான தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிழ்க்குடிமகன் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

மாநாட்டில், தமிழ்நாட்டின் தன்னுரிமையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்தியத் தேசியப் பார்ப்பனியப் பாதந்தாங்கிகள் துடிதுடித்துப் போனார்கள். துக்ளக் சோ”, மாநாடு குறித்து வன்மத்துடன் மூன்று பக்க கட்டுரை எழுதி துக்ளக்கில் வெளியிட்டார். இலக்கு பிரிவினை, வழி வன்முறைஎன்ற தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரை, தி.மு.க. ஆட்சி இம்மாநாட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டியுள்ளது என்று குறிப்பிட்டது. தி.மு.க. அரசு மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய பா.ச.க. அனைத்திந்தியத் தலைவராக இருந்த முரளிமனோகர் ஜோசி செய்தியாளர்களிடம் கூறினார். சி.பி.எம். கட்சி, பிரிவினைவாத மாநாட்டிற்கு சபாநாயகரே வாழ்த்துச்செய்தி அனுப்பியது கண்டித்தக்கது எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றிக் கண்டனப் பரப்புரை செய்தது.

இந்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் இம்மாநாடு குறித்து விளக்கம் தருமாறு, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கருணாநிதி அரசின் காவல்துறை 1990 திசம்பர் 25ஆம் நாள் சிதம்பரத்தில் வைத்துத் தோழர் பெ.மணியரசன் அவாகளை தளைப்படுத்திச் சிறையில் அடைத்தது. 8 ஆண்டுகள் நடந்த வழக்கில், “பிரிவினை கேட்டு நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியதை மறுக்கவில்லை; இது எங்கள் சனநாயக உரிமைஎன்று தோழர் பெ.மணியரசன் வாதிட்டார். இறுதியில் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

மாநாட்டில் கவிதை வாசித்த காரணத்திற்காக, தூர்தர்சன் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தியக் கொடியை கோவணம் என்பதாகக் கவிதை படித்த கவிஞர் அறிவுமதி மீது அரசுக் கொடி அவமதிப்பு வழக்குப் போடப்பட்டு 8 ஆண்டுகள் எழும்பூர் நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் வழக்கிலிருந்து விடுதலையானார்.

இம்மாநாட்டுக்குப் பின், தமிழ்த் தேச விடுதலை நோக்கில் தமிழகத் தோழர்களின் பயணம் வீறுகொண்டது. எம்.சி.பி.ஐ. யின் தமிழ்நாடு கிளை அக்கட்சியிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி என்ற புதிய பெயரோடு, புதிய உள்ளடகத்தாடு மறுவார்ப்பு செய்து கொண்டது.

கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம் – அய்யம்பேட்டையில் 1991 பிப்ரவரி 1,2,3 நாட்களில் நடைபெற்றது. கட்சியின் கொள்கை அறிக்கை முடிவு செய்யப்பட்டது. தோழர் பெ.மணியரசன் அவர்களைப் பொதுச் செயலாளராக் கொண்டு த.தே.பொ.க. இயங்கத் தொடங்கியது. 

2014ஆம் ஆண்டு ஆகத்து 15-16 நாட்களில், திருச்சியில் நடைபெற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில், அமைப்பின் பெயர் 'தமிழ்த் தேசியப் பேரியக்கம்" என மாற்றப்பட்டது.போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT