பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===================================
மே நாள் என்பது தொழிலாளர் நாள் மட்டுமல்ல - சாரத்தில் மனிதத்தின் நாள்! உழைக்கும் விலங்குகளுக்குக் கூட ஓய்வு கொடுத்த - பணவேட்டையாடிகள் - உழைக்கும் மனிதர்களுக்கு ஓய்வு கொடுக்க மறுத்தார்கள்!
ஓய்வு கோராத எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் - உழைப்பாளர்களுக்குக் கூடுதலாக ஓய்வு கிடைத்திருக்க வேண்டும்! மனித மனத்தில் தெய்வமும் உண்டு சாத்தானும் உண்டு என்பர்! அதாவது, மனித உள்ளத்தில் அறமும் உண்டு, அறக்கேடும் உண்டு. களைத்துப் போகாத எந்திரங்களைப் போலவே மனிதர்களும் உழைக்க வேண்டும் என்று கட்டளை இட்டார்கள். ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம்கூட வேலை வாங்கினார்கள்!
தீங்குகள் தொடரும்போது தீர்வுகள் வெடித்தெழும்! உழைப்புக்கு மனித நேயமுள்ள நேரவரம்பு கோரினார்கள் தொழிலாளர்கள்! பலநாடுகளில் இக்கோரிக்கை தன்னெழுச்சியாய்ப் பற்றிப் படர்ந்தது.
பன்னாட்டு தொழிலாளர் பேராயம் (The International Workers’ Congress) மாநாடு 1889-இல் பாரீசில் நடந்தபோது, தொழிலாளர்கள், நிகரமையர்கள் (Socialists) மார்சியக் கட்சியினர் முதலியோரைக் கொண்ட இரண்டாவது பன்னாட்டு மையத்தை (அகிலத்தை) அமைத்தனர். அது தொழிலாளர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வடித்து. அதற்காக பன்னாட்டளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தது. அப்போது, மே மாதம் முதல் நாளில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று முடிவு செய்தார்கள். மே 1 ஐத் தேர்ந்தடுத்த காரணம் இதுதான்:
அமெரிக்கக் கூட்டரசுத் தொழிலாளர்கள் (American Federation of Labour) என்ற யு.ஏஸ்.ஏ நாட்டுத் தொழிலாளர் அமைப்பு ஏற்கெனவே 1886 மே 1-ஆம் நாளில் தொடங்கி, தொடர்ந்து வட அமெரிக்க சிகாகோவில் ஹே மார்க்கெட் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்தது.
4.5.1886 அன்று அமெரிக்க அரசின் காவல் துறையினர் ஆர்பாட்டக்கார்கள் பலரை அடித்து படுகாயப்படுத்தி கலைத்தனர். அப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக விளங்கிய 3 தொழிலாளர் தலைவர்கள் உட்பட 8 பேரை சிறையிலடைத்து தூக்கில் போட்டார்கள். அந்த 3 தலைவர்களின் பெயர்களும் இன்றும் ஒளிவீசி உலகெங்கும் பரவுகின்றது. அவர்கள், ஆகஸ்ட் ஸபைஸ், ஆல்பர்ட் பார்சன், சாமுவேல் ஃபீல்டென்! அதன்பிறகு உலகெங்கும் 8 மணி நேர வேலை கோரும் போராட்டம் மேலும் வீச்சுப் பெற்றது.
எனவே, அந்த 1886 மே 1-ஆம் நாளைத் தொழிலாளர் உரிமைப் போராட்ட நாளாக 1889-இல் பாரிசில் கூடிய பன்னாட்டுப் பேராயம் அறிவித்தது.
இந்த மே 1 உழைப்பாளர் நாளை இந்தியாவில் முதல் முதலாகக் கொண்டாடிய இடம் சென்னை கடற்கரை! முன்னெடுத்தவர் தென்னாட்டின் முதல் பொதுவுடைமையாளர் - சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்! சென்னையில் மெரினா கடற்கரையில் காலையிலும் திருவான்மியூர் கடற்கரையில் மாலையிலும் கொண்டாடினர். எம்.பி.எஸ். வேலாயுதம், சுப்பிரமணிய சிவா போன்ற துடிப்பு மிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்த மே நாள் கூட்டங்களில் உரையாற்றினர்.
இந்த இடத்தில் இன்னொரு முதன்மை நிகழ்வையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே, வெற்றிகரமான தொழிலாளர் வேலை நிறுத்தம் நடத்தி, சம்பள உயர்வும், வேலை நேரக் குறைப்பும் முதல்முதலாக சாதித்த இடம் தூத்துக்குடி! முன்னெடுத்துத் தலைமை தாங்கியவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்! ஆண்டு 1906! தொழிற்சாலை கோரல் மில்ஸ் நூற்பாலை.
அடுத்து முதல் முதலாக முறைப்படி ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கம் நிறுவப்பட்ட மண்ணும் இ்நதியாவிலேயே தமிழ் மண்ணே! சென்னை பின்னி ஆலைத் தொழிலாளர்களை மையப்படுத்தி இச்சங்கம் தொடங்கப்பட்டது. “சென்னை தொழிலாளர் சங்கம் (Madras Labour Union)! ஆண்டு 1918. இதன் முகாமையான நிறுவனர்கள் நடேச முதலியார் (நீதிக்கட்சி மூலவர்களில் ஒருவர்), திரு.வி. கலியாண சுந்தரனார்! சர்க்கரைச் செட்டியார் ஆகியோர்!
உழைக்கும் மக்களுக்கான முதல் புரட்சி - நிகரமைப் புரட்சி 1917 இரசியப் புரட்சி! அதை வரவேற்று, பூரித்து மனித சமத்துவம் - சனநாயகம் இரண்டையும் முதன்மைப்படுத்தி கவிதை யாத்தவர் பெரும் பாவலர் பாரதியார்!
“ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!
கொடுங்கோலன் அலறி வீழந்தான்!”
“குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி”
என்று இரசியப் புரட்சியை பாடிப் பரவசப்பாட்டார் பாரதியார்!
பாவேந்தர் பாரதிதாசன் பிற்காலத்தில்
“ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பினில்
உதித்ததும் மெய்யல்லவோ?”
“கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புலி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?” என்று கேட்டார்.
“எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்பதான
இடம் நோக்கி நகர்கின்றது இந்த வையம்” என்றார்!
இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன?
‘மே நாளுக்கு விடுமுறை அறிவித்தது கலைஞர் ஆட்சி, மே நாள் பூங்கா அமைத்தது எங்கள் ஆட்சியில்தான்‘ என்று பெருமை பேசிக் கொண்டுள்ள தி.மு.க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி என்பதை 12 மணி என்று, - 50 % உயர்த்தி, சட்டம் செய்தார். அரிவாள் - சுத்தியல் கொடி போட்டுக் கொண்டு, உதய சூரியனுக்கு விசுவாசம் காட்டி, சில தொகுதிகள் பெறும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் உட்பட பல்வேறு தொழிலாளர் அமைப்புகளும் மனித உரிமையாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அச்சட்டத்தைக் கைவிட்டதாக அறிவித்தார்.
ஆனால், நடைமுறையில் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களிடம் 12 மணி நேரம் வேலை வாங்குவதைத் தி.மு.க. ஆட்சி உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு சென்னை - காஞ்சிக் கிடையே செயல்படும் தென்கொரிய சாம்சங் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தாங்கள் 11 மணி முதல் 12 மணிநேரம் வரை வேலை வாங்கப்படுவதாகவும், தங்களுக்கு தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாகவும் கூறி, 8 மணிநேரம் வேலை; தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை கோரி சனநாயக வடிவில் போராடினர். அதை சி.பி.எம். தொழிற்சங்கம் வெளியிலிருந்து வழிநடத்தியது. தி.மு.க. ஸ்டாலின் ஆட்சி முழுக்கமுழுக்க சாம்சங் முதலாளிகளையே ஆதரித்து 8 மணி நேர வேலைக்கு ஆதரவு கொடுக்கவில்லை.
“தொழிலாளர்களுக்கு உற்ற தோழன் தி.மு.க.வே” என்று தி.மு.க. ஒரு காலத்தில் முழங்கியது. அப்போது அண்ணா சொன்னார், “மாஸ்கோவிற்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன், நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன். இரசியா எங்களை ஆதரிக்கும்” என்றார். காங்கிரசு பேசுது சனநாயக சோசலிசம். அது முதலாளிகளின் சோசலிசம். கழகம் பேசுவது விஞ்ஞான சோசலிசம், காரல் மார்க்சின் சோசலிசம். என்று பேசினார் எழுதினார். எந்த முழக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு சந்தை அதிகமாக இருக்கிறதோ அதைக் களவாடிமக்களிடம் முழங்குவது தி.மு.க.வின் பரம்பரை உத்தி! கருணாநிதியும் இதையேதான் செய்தார்.
கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வின் வாக்குச் சந்தை உத்திக்கு 50 விழுக்காடு வந்துவிட்டார்கள். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்ட மன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை உதயசூரியனுக்குக் கீழ் இணைந்து சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் சி.பி.எம். கட்சி, சாம்சங் தொழிலாளர்களுக்கு இரண்டகம் செய்து, ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்து, மு.க. ஸ்டாலினுக்குச் “சலாம்” போட்டது!
தமிழ்நாட்டில் வெளிநாடுகளுக்குச் சென்று விருந்து வைத்து முதலாளிகளை அழைத்து வருவதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் (அ.தி.மு.க.) மு.க. ஸ்டாலினுக்கும் (தி.மு.க.) இடையே “ஆரோக்கியமான” போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் அடிமாட்டுக் கூலிக்கு தற்காலிக, ஒப்பந்த தொழிலாளிகளையே - ஊழியர்களையே இந்திய - தமிழ்நாடு ஆட்சியாளர்களும் முதலாளிகளும் அமர்த்துகிறார்கள். தொழிற்சங்கங்கள் அந்த வரம்புக்குள் செயல்பட்டுக்கொண்டுள்ளன.
இந்த ஆண்டு (2025 மே 1) மே நாளுக்குத் தமிழ்நாட்டு நாளேடுகள் சிறப்புக் கட்டுரைகள் எதுவும் வெளியிடவில்லை.
நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் - எண்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்சியாகச் செயல்பட்டுவரும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், வேறெந்த அமைப்பையும் விட அதிகமாக ஈகம் செய்துள்ளன; மக்களுக்ககாகப் போராடியுள்ளன. ஆனால், அக்கட்சிகளுக்கு உரிய வளர்ச்சி இல்லை. எனவே, இந்திய ஏகாதிபத்தியவாத கட்சியான காங்கிரசு, பதவி - பணம் - விளம்பர வேட்டைக் கட்சிகளாக உள்ள தி.மு.க.- அ.தி.மு.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து சிறுத்துப் போகின்றன!
காரல்மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் மாமேதைகள்தாம்; ஆனால் அகநிலை விருப்பத்திற்கு அதிகமாக உள்ளாகிக் கற்பனை முடிவுகளையும் தங்கள் ஆய்வில் கலந்தார்கள். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.
தொழிலாளிகள் வர்க்கம் - இயல்பிலேயே புரட்சிகரமானது. அதுவே தலைமை தாங்கி நிகரமை (சோசலிச) புரட்சியை நடத்தும் என்று வரையறுத்துக் கூறினார்கள். (இதில் லெனினுக்கு சிறு வேறுபாடு உண்டு). ஆனால், உலகில் எங்காவது தொழிலாளி வர்க்கம் நிகரமைப் புரட்சியையோ, நாட்டு விடுதலைப் புரட்சியையோ, சனநாயகப் பாதுகாப்பு அல்லது சனநாயக மீட்புப் புரட்சியையோ முன்னெடுத்தது உண்டா? இல்லை! பல வர்க்கங்களில் உள்ள சனநாயக ஆற்றல்கள், புரட்சியாளர்கள் முன்னெடுத்துத் தலைமை தாங்கித்தான் - உழவர்கள் தொழிலாளர்கள், மற்றுமுள்ள மக்கள் பிரிவினர் ஆதரவைப் பெற்று நிகரமைப் புரட்சியோ, அல்லது மக்கள் சனநாயகப் புரட்சியோ, நாட்டு விடுதலைப் புரட்சியோ நடந்துள்ளன. எடுத்துக் காட்டு இரசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் புரட்சிகள்).
தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழினச் சிக்கலை முன்னெடுத்த தி.க., தி.மு.க. போன்ற கட்சிகள்தாம் கிடுகிடுவென வளர்ந்தன. (ஈ.வெ.ரா - சூதாகத் திராவிடத்தை திணித்தாலும், தமிழிர்கள் அதைத் “தமிழர் ஆரியர்”, “தமிழ்நாடு எதிர் இந்திய ஏகாதிபத்தியவாதம்” என்றே புரிந்து கொண்டனர்.)
இந்தியா என்பது ஒரு தேசமல்ல; பல தேசங்களைக் கொண்ட ஒரு நிர்வாகம் என்ற சமூக - அரசியல் உண்மையைக் கூட மறுத்து, ஆரிய-இந்தி ஏகாதிபத்தியவாதிகளான காங்கிரசுத் தலைவர்கள் திணித்த “இந்திய தேசியத்தை” இன்றுவரை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள்! பல தேசிய இன நாடுகள் கூட்டரசுகள் ஒரே நாட்டில் வாழ லெனின் வழிகாட்டினார். அதை ஏற்க மறுத்தவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்!
அரசியல் சீரழிவு அனைத்துச் சீரழிவுகளையும் மக்களிடம் விதைக்கும். அதனால்தான், “அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி“ என்றனர் நம் முன்னோர். தி.மு.க.-அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு மக்களுக்கான இலட்சியம் எதுவும் இல்லை! பதவி-பணம்-விளம்பரம் இம் மூன்றுமே இவற்றின் இலட்சியம்! சீரழிந்த ஊழல் தலைவர்கள் மக்களிடமும் சீரழிவை - ஊழலை விதைத்து வளர்ப்பர். அப்போதுதான் அவர்கள் தலைமையும், அவர்கள் குடும்பத்தார் தலைமையும் நீடிக்க முடியும், தொடர முடியும்!
தமிழ்த்தேசியர்கள், மே நாளைப் போற்ற வேண்டும். உழைப்பாளர் உரிமைகளை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு ஏற்கெனவே உள்ள கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளைப் பின்பற்றக் கூடாது. மனித சமநிலைக்கு முன்னுரிமை கொடுப்போம். உழைக்கும் மக்கள் உரிமைக்கு முதலிடம் கொடுப்போம்.
அனைவர்க்கும் மே நாள் வாழ்த்துகள்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Post a Comment