பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா? ப.திருமாவேலனுக்கு மறுப்பு! தோழர் கதிர்நிலவன், பொதுக்குழு உறுப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மேரிலாந்தில் பன்னாட்டு பெரியார் மனிதநேயர் சங்க மாநாடு 22,22.9.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் "பெரியாரும் தமிழ்த்தேசியமும்" என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, "தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒருபொருள் தரக்கூடிய இருவேறு சொற்கள் தான் " என்று தேவநேயப் பாவாணர் கூறியதாகப் பேசியுள்ளார்.
திருமாவேலன் பேச்சிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறோம்.
"பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருடைய ‘திராவிடத்தாய்' என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்' என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.
பாவாணர் சொல்வது என்னவென்றால், ‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.” இதை ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15ம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.
‘தமிழ் என்பதுதான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும்- திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம்’ என்றும் உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர். "
பெரியார் பயன்படுத்திய திராவிடம் , திராவிட இனம், திராவிடர் ஆகிய சொற்கள் தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை மறைப்பதால் இனிமேல் தமிழரை திராவிடர் என்று அழைக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கீழடி தமிழர் நாகரிகத்தை திராவிடர் நாகரிகம் என்று அழைப்பதையும் தக்க சான்றுகளோடு மறுத்து வருகின்றனர்.
இந்நிலையிலே , பெரியார் போற்றிய திராவிடத்தைப் பாதுகாக்க பாவாணரை துணைக்கு அழைத்துள்ளார் திருமாவேலன்.
ப.திருமாவேலன் அவர்கள் திராவிடம் குறித்து பாவாணரின் எழுத்துகளை முழுமையாக படிக்கவில்லை போலும்.
பாவாணர் தமிழ் மொழி திரிந்து திராவிட மொழிகள் உருவானதாக கூறுகிறாரே அன்றி, திராவிடமொழி திரிந்து தமிழ் உருவானதாக எப்போதும் குறிப்பிட வில்லை. தமிழே ஆரியத்திற்கு மூலமும் , திராவிடத்திற்கு தாயும் என்பதே பாவாணரின் இறுதியான முடிவாகும்.
பாவாணர் எழுதிய ""ஒப்பியன் மொழி நூல்" 1940 ஆம் ஆண்டிலும்,, "திராவிடத்தாய்" நூல் 1944ஆம் ஆண்டிலும் வெளி வந்த நூலாகும். பிற்காலத்தில் திராவிடம் குறித்த அவரின் பார்வை என்பது வேறுதன்மை கொண்டது. திராவிடத்திலிருந்து தமிழையும், தமிழரையும் விலக்க வேண்டும் என்பதே அவரது உறுதியான நிலைப்பாடாகும்.
பாவாணர் எழுதிய "தமிழியற் கட்டுரைகள்" நூலில் அவர் கொடுத்த தலைப்பு "திராவிடம் என்பதே தீது" .
(பக்.27-28)
அந்நூலில் பாவாணர் கூறுகிறார்;
"கால்டுவெல் கண்காணியார் முதன்முறையாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும்,
தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக்காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச்சி மிகுந்துவிட்டதனாலும், வடமொழியும் இந்தியும்பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழியாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிறஇனமொழிகளையே திரவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்."
பாவாணர் தமிழ்மொழியை ஆரியத்திடமிருந்து மட்டுமல்ல; திராவிடத்திடமிருந்தும் மீட்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் என்பதையே பாவாணரின் மேற்கண்ட வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
மேலும், அந்நூலில் கூறியவற்றை சுருக்கமாகத் தருகிறோம்:
தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்.
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.
* தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.
* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.
* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.
* தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.
* தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.
* திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.
* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.
* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.
* தமிழ் வேறு திரவிடம் வேறு
* வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.
இந்நூல் தவிர, பாவாணர் அவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும், புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரிலும் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இவற்றையெல்லாம் படிக்காமலே திருமாவேலன் "ஒப்பியன் மொழி" நூலை மட்டும் திராலிடத்தின் கைக்சரக்காக காட்டுவது முறைதானோ?
உள்ளூரில் தாங்கள் கடை விரித்த திராவிடம் விலை போகாததால், அமெரிக்காவிற்குச் சென்று கூவி விற்க கிளம்பியுள்ளீர்கள்.
பெரியாரின் சொத்துகளை அனுபவிக்க, வாரிசுக்கு கைமாற்ற ஆசிரியர் வீரமணிக்கு பெரியாரின் திராவிடப் போர் வாள் தேவைப்படுகிறது.
திருமாவேலனுக்கு அப்படியொரு நெருக்கடி இல்லை என்ற போதிலும், தான் பணிபுரியும் திராவிடம் காக்கும் நிறுவனத்திற்கு செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வேண்டும் அல்லவா?
திருமாவேலனுக்கு பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் உரிமை உண்டே தவிர, திராவிடத்தை தமிழர் மீது திணிக்கும் உரிமை ஒருபோதும் கிடையாது.
பாவாணர் பெரியாரின் ஆரிய எதிர்ப்பை பாராட்டியவர் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக பாவாணர் தூக்க மறுத்த - துருப்பிடித்த - பெரியாரின் திராவிடப் போர்வாளை தயவு செய்து தமிழ்த் தேசியர்களிடம் காட்டி பயமுறுத்த வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்.
பாவாணர் எழுதிய திராவிட மறுப்பு கட்டுரைகள் படிக்க:
திராவிடம் என்பதே தீது
https://tamilthesiyan.wordpress.com/…/%E0%AE%A4%E0%AE%BF%E…/
தமிழ் வேறு! திராவிடம் வேறு
https://tamilthesiyan.wordpress.com/…/பாவாணர்-நினைவு-நாள்-1…
திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
https://tamilthesiyan.wordpress.com/…/திராவிடம்-திராவிடன்-த…
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment