உடனடிச்செய்திகள்

Monday, November 6, 2017

கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கந்துவட்டிக்காரர்களின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இசக்கிமுத்து தன் மனைவி, இரண்டு பிள்ளைகளோடு சேர்ந்து, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு எரிந்து மாண்டு போனார்கள். இச்செய்தி மனிதநேயமுள்ள கார்ட்டூன் பாலா நெஞ்சில், நெருப்பாய்த் தகித்தது. ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் வகையில், கருத்துப்படம் வரைந்து முகநூலில் வெளியிட்டார்.
 
இதற்காக, சென்னையில் வீட்டிலிருந்த பாலாவை நேற்று (05.11.2017), அவர் உடன் வர ஒப்புதல் தெரிவித்தும் - இழிவுபடுத்தும் நோக்கத்தில் சீருடை அணியாத காவல்துறையினர் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றிப் கொண்டு நெல்லை சென்றனர். இச்செய்தி தீ பரவியதைப் போல், மனித நேயமுள்ள சனநாயக உரிமை உணர்வுள்ள அனைவர் நெஞ்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
இன்று (06.11.2017) காலை, சென்னையிலுள்ள கார்ட்டூன் பாலாவின் இல்லத்திற்கு நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர்கள் தமிழ்ச்செல்வன், இளவழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று, பாலாவின் கைது நிகழ்வின்போது நடந்தவற்றை அவரது மனைவியிடம் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.
 
ஒருவரைக் கைது செய்யும்போது காவல்துறையினர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. என்ன ஏது என்று கேட்டறிவதற்குள், கார்ட்டூன் பாலாவை – அவரது மனைவி – குழந்தைகள் முன்பு, சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற சீருடை அணியாத காவல் துறையினரின் செயல், மிகக் கொடியதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்!
 
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (06.11.2017) முற்பகல், பாலாவை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த அழைத்து வந்தபோது, திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்த்தேசியர்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் குழுமி, சட்டப்படி வாதம் செய்து பாலா மீது போட்ட இரண்டு பிரிவுகளும் பிணையில் விடக் கூடிய பிரிவுகள்தான் என்பதை எடுத்துக் காட்டி வாதாடினர். அதன்பிறகு, இருவர் தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று பாலாவை நீதிபதி விடுவித்தார்.
 
திருநெல்வேலியில் பாலாவுக்கு ஆதரவாகவும், சட்டப்படி அவரை விடுவிக்கவும் திரண்டிருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும், உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதேவேளை, காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல், நீதித்துறையை மதிக்காமல், வன்மத்தோடு மீண்டும் ஏதோவொரு போலிக் குற்றச்சாட்டில் பாலாவைக் கைது செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு காவல்துறை முயல்வது, சட்ட விரோதம் மட்டுமல்ல, சனநாயக மாண்புகளுக்கும் எதிரானது! காவல்துறையின் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது!
 
சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து, அவர்கள் பாலாவை மீண்டும் கைது செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், பாலாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கணிப்பொறி, ஹார்டுடிஸ்க், கைப்பேசி ஆகியவற்றை எந்த வகைச் சேதமும் இல்லாமல் அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT