உடனடிச்செய்திகள்

Friday, July 31, 2020

இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்! - கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே
வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


“யாருக்கு வெற்றி என்று சேர்த்தே சொல்லிடுங்க ஜட்ஜய்யா..” என்ற கேலி வாசகம், இப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, “வெற்றி.. வெற்றி” என்று பா.ச.க.வும் கூச்சல் போடுகிறது. வழக்குத் தொடுத்த தி.மு.க. - அ.தி.மு.க.வும் முழக்கமெழுப்பு கிறார்கள்.

உண்மையில், இது தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு வெற்றியா என்று ஆய்ந்தால், உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசும் கிட்டத்தட்ட ஒரே குரலில் இந்த வழக்கில் வாதங்களை முன்வைத்தனர்.

பா.ச.க.வின் இந்திய அரசும், இந்திய மருத்துவக் கழகமும் மாநில அரசுகள் இந்திய அரசுக்கு வழங்கும் (Surrended) மருத்துவப் படிப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே வழங்க முடியாது என்றுதான் வாதிட்டன.

ஆயினும், இவ்வழக்கில் முக்கியமான வாதங்களை முன்வைத்த தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் முன்வைத்த வாதங்களும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் விஜய நாராயணன் வாதமும் தமிழ்நாடு வழங்கும் மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டிலுள்ள விழுக்காட்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்திய அரசு நடத்தும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கப்படுவது போல் தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களி லிருந்து இந்திய அரசுக்கு வழங்கப்படும் 50 விழுக்காட்டு இடங்களிலும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடே செயல்பட வேண்டும் என்றுதான் வாதங்களை முன்வைத்தனர்.

எல்லோருமே 1993ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் வழங்குகிற விழுக்காட்டு அளவை மட்டுமே வலியுறுத்தினார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 50 விழுக்காட்டு இடங்கள் வழங்க வேண்டுமென்று யாரும் வாதிட வில்லை!

பாட்டாளி மக்கள் கட்சியோ, இந்த 50 விழுக் காட்டையும் கேட்காமல், 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டையே வலியுறுத்தியது. இவர்களும் தமிழ் நாட்டுப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வாதிட வில்லை.

இந்த நிலையில், கடந்த 27.07.2020 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ் பிரதாப் சாகி மற்றும் செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு எந்த விழுக்காட்டு அளவையும் வலியுறுத்தாமல், வேறொரு முடிவைச் சொன்னது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்லூரியில் மாநிலங்கள் சார்பாக வழங்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதாரண சட்டத் தடையோ, அரசமைப்புச் சட்டத் தடையோ இல்லை என உறுதிபடக் கூறியது. ஆனால், “நீட்” தேர்வை ஆதார மாகக் கொண்டே தனது தீர்ப்புரைக்கான விளக்கங்களை முன்வைத்தது.

இறுதியில், இந்திய அரசின் நலவாழ்வுத்துறை, இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு அரசின் நலவாழ்வுத் துறை ஆகிய மூன்றிலிருந்தும் பேராளர்களைக் கொண்ட ஒரு ஆய்வுக்குழுவை அமர்த்தி, இந்திய அரசு மூன்று மாதங் களுக்குள் அதன் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதன் அடிப்படையில், எத்தனை விழுக்காட்டு இடங்கள் மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்து, தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று கூறியது.

“நீட்” தேர்வின் முடிவில் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதால், கல்வித்தரம் குறைந்தவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைந்து விடுவார்கள் என்ற வாதம் அடிபடுகிறது என்றும் கூறியது.

வாதிட்டவர்களும் சரி, நீதிமன்றத் தீர்ப்பும் சரி, எவ்வளவு விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர, அந்த விழுக்காட்டு இடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தான் வர வேண்டும் என்று கூறவே இல்லை!

தீர்ப்பில் “நீட்” தேர்வின் அடிப்படையை வலியுறுத்து வதன் விளைவாக, அனைத்திந்திய அளவில் தர வரிசை யில் வருகிறவர்கள் அவர்கள் விரும்புகிற மாநிலத்தில், விரும்புகிற கல்லூரியில் சேர்ந்து கொள்ள முடியும் என்றாகிறது. எவ்வளவு விழுக்காடு இடங்கள் வழங்க வேண்டுமென்று தனிச்சட்டம் இயற்றுமாறு கூறுவதால், 0%-க்கும், 50%-க்கும் இடையில் ஏதோவொரு விழுக் காட்டை முடிவு செய்வதற்கான வழி ஏற்படுத்தப் படுகிறது.

இந்த விழுக்காட்டினரும் தமிழ்நாட்டு மாணவர்களாக இருப்பார்கள் என்ற உறுதியில்லை! ஏனென்றால், அனைத்திந்திய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான “நீட்”டின் மூலம் அவர்கள் வருகிறார்கள். இந்திக் காரர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் “இதர பிற்படுத்தப்பட்டோர்” என்ற விழுக்காட்டு அளவுக்குள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஏற்பாட்டைத்தான் இத்தீர்ப்பு செய்கிறது.

இதைத்தான் தி.மு.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழ் நாட்டுக் கட்சிகள் “வெற்றி.. வெற்றி..” என்று கூறு கிறார்கள்.

இத்தீர்ப்பை மோடி அரசு செயல்படுத்துமா என்பது ஐயம். அப்படியே செயல்படுத்தினாலும், அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காட்டு இடங்களையும் வெல்லவில்லை. குறைவான விழுக்காடு கிடைத்தாலும் அது தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்குமா என்பதிலும் உறுதியில்லை. இந்திக்காரர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும்தான் கிடைப்பதற்கான அதிக வாய்ப்பிருக்கிறது!

ஒரு வழக்கில் தோல்வி அடைவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், அதைத் தோல்வி என்று மக்கள் உணர முடியாமல், அதையே “வெற்றி” என்று கூச்சலிடுவது, இறுதியில் இழந்ததை மீட்பதற்கு விழிப்புணர்வு பெறாதவர்களாக மக்களை மழுங்கடிக்கும் செயலாகும்!

பல சிக்கல்களில் வெளிப்பட்டதுபோல், இந்த இட ஒதுக்கீட்டுச் சிக்கலிலும் தேர்தல் கட்சிகளின் வரம்புகள் தெரிந்துவிட்டன. இனி, மக்கள்தான் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு உரிமையை மீட்கக் களம் அமைக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT