உடனடிச்செய்திகள்

Wednesday, August 26, 2026

மேட்டூர் அணையை முதல்வரே திறக்கும் தன் விளம்பர மோகத்தைக் கைவிட்டு, வல்லுநர் குழு பரிந்துரை பெற்று திறக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்!

மேட்டூர் அணையை முதல்வரே திறக்கும்

தன் விளம்பர மோகத்தைக் கைவிட்டு,

வல்லுநர் குழு பரிந்துரை பெற்று திறக்க வேண்டும்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் இன்று (26.08.2026) த            ஞ்சையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், பி. தென்னவன், க. விடுதலைச்சுடர், மா. மணிமாறன், க. செம்மலர், வெற்றித்தமிழன், இரா. வேல்சாமி, வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், க. தீந்தமிழன், கதிர்நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

தீர்மானம் - 1

வல்லுநர் பரிந்துரை பெற்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும்!

 

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய காவிரி நீரை, கர்நாடக அணைகள் நிரம்பிய பின்னும் திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடக அரசைக் கண்டித்து, இந்திய அரசை வலியுறுத்தியும் காவிரி நீர் பெற துரும்பும் கூட அசைக்காத தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், நாளை மறுநாள் (28..08.2026) மேட்டூர் அணையை திறக்க செல்வதாக அறிவித்துள்ளார்.

 

இன்றைய நிலையில் 88 அடிதான் மேட்டூர் அணையில் தண்ணீர் இருக்கிறது. நீண்ட அனுபவம் உள்ள மூத்த பாசனப் பொறியாளர்கள் வேளாண் துறை வல்லுநர்கள் அறிவுரை பெறாமல் தன் விளம்பர மோகத்தோடு, மேட்டூர் அணையை 28.08.2026 அன்று திறக்க முடிவு செய்தது சரியான செயல்பாடு அல்ல!

 

தன் விளம்பர மோகத்தில் மூழ்கித் திளைத்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகை வெள்ளத்தால் நிரம்பிய மேட்டூர் அணையை ஆண்டுதோறும் தான் போய் திறந்து வைத்து தன் விளம்பரம் செய்து கொண்ட நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் இப்போது உள்ள முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மேட்டூர் அணைத் திறப்பு உள்ளது.

 

முதலமைச்சர் அவர்கள் 28.08.2026 மேட்டூர் அணை திறக்கும் திட்டத்தைக் கைவிட்டு, வல்லுநர்கள் அறிவுரை பெற்று அதன்படி செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

 

 

தீர்மானம் - 2

கர்நாடக எல்லையில் மூன்று தமிழர்கள் படுகொலை :

தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நீதி பெற்றுத்தர வலியுறுத்தல்!

 

கடந்த 2026 ஆகத்து 15 அன்று, கர்நாடக வனப்பகுதியில் எல்லையோரத் தமிழர்களான அந்தோணி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (43), செபஸ்டின் டேவிட் குமார் (35) ஆகிய மூவர் அம்மாநில வனத்துறையினரால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

 

இக்கொலை தொடர்பாகக் குற்றவாளிகளான வனத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) முறையாகப் பதியப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். பதியப்படும் வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமின்றி, தமிழர்கள் மீதான இனரீதியான வன்முறை மற்றும் சித்திரவதைக்கான கடுமையான சட்டப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

 

1991இல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற காவிரி கலவரத்தின்போது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உடமைகளை இழந்து, இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி விரட்டியடிக்கப்பட்டனர். அத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட கன்னட வெறியர்கள் மீது கூட அம்மாநில அரசு முறையாக விசாரணை நடத்தி தண்டிக்கவில்லை. அண்மையில் 2016இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். பேருந்துகளை பட்டப்பகலில் கொளுத்திய கன்னட இனவெறியர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

எனவே, தமிழ்நாடு அரசு இப்போதாவது மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வில் உடனடியாகத் தலையிட்டு, மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை கர்நாடகாவிற்கு அனுப்பி களநிலவரத்தை ஆய்வு செய்ய வேண்டும்; அவ்வழக்கை நேரடிக் கண்காணிப்பில் நடத்தி, குற்றமிழைத்த கன்னட அதிகாரிகளுக்கு உச்சபட்சத் தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய்  இழப்பீடும் அரசுப் பணியும் பெற்றுத்தர வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் - 3

வடலூர் வள்ளலார் பெருவெளி சிதைப்புத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கிறோம்! பெருவெளியைப் பழைய நிலைக்குச் சீரமைக்க வேண்டும்!

 

வடலூரில் தமிழர் மறுமலர்ச்சி மூலவர் அருட்பிரகாச வள்ளலார் அமைத்த “வள்ளலார் பெருவெளி”  நிலத்தைச் சிதைக்கும் நோக்கில், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சற்றொப்ப 100 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் ‘பன்னாட்டு மையம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தை பெருவெளிக்குள் நடத்தாமல் வெளியே நடத்த வேண்டுமெனக் கோரியும், பெருவெளியைப் பாதுகாப்பதற்காகவும் பார்வதிபுரம் கிராம மக்களுடன் இணைந்து நமது வள்ளலார் பணியகமும், தெய்வத் தமிழ்ப் பேரவையும் தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தன.  

 

இந்நிலையில், மக்களின் இடைவிடாத போராட்டங்களின் தொடர்ச்சியாகவும், கடந்த தி.மு.க.  ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும், தற்போது அமையப்பெற்றுள்ள த.வெ.க. அரசு வடலூர் பன்னாட்டு மையக் கட்டுமானத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளதை இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் முழுமனதாக வரவேற்கிறது.

·       ஆயினும், வள்ளலார் பெருவெளியின் எந்தப் பகுதியிலும் எவ்வித அரசு மற்றும் தனியார் கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதைச் சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.

 

·       பெருவெளியைப் பாதுகாக்க அறவழியில் போராடிய பார்வதிபுரம் மக்கள், வள்ளலார் பணியக  அன்பர்கள் மீது முந்தைய அரசால் போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் நிபந்தனையின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

 

·       கட்டுமானப் பணிகளுக்காகப் பெருவெளியில் தோண்டப்பட்ட ஆழமான குழிகள் அனைத்தையும் உடனடியாக மூடி, வள்ளலார் பெருவெளியை அதன் முழுமையான இயற்கை மற்றும் ஆன்மிகப் புனிதப் பழைய நிலைக்குச் சீரமைத்துத் தர வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இத்தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் – 4

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில்

திருக்குடமுழக்கை தமிழிலேயே நடத்த வேண்டும்!

 

சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா வரும் 2026 செப்டம்பரில் (17.09.2026) நடைபெறுவது வரவேற்கத் தக்கது. அக்குடமுழுக்கு விழாவை, முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், அதனைப் புறக்கணித்துவிட்டு கடந்த தி.மு.க. அரசின் வழியில், சமற்கிருத வழியிலேயே குடமுழக்கை நடத்திட த.வெ.க. அரசு முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

 

ஏற்கெனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழில் பாதி – சமற்கிருதம் மறுபாதி என குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டுமென பலமுறை தீர்ப்பளித்துள்ளது. அண்மையில், 21.04.2026 அன்று, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கைத் தமிழில் நடத்த வேண்டுமெனக் கோரி கரூர் வழக்கறிஞர் இரா. இராசேந்திரன் தொடுத்த வழக்கில் (வழக்கு எண்:  W.P. (MD) No: 11386 of 2026) தீர்ப்பளித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி அவர்கள், கருவறை – வேள்விச் சாலை – கோபுரக் கலசம் ஆகிய முகாமையான மூன்று நிலைகளிலும் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கை நடத்த வேண்டுமெனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

எனவே, தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, இத்தீர்ப்பை ஏற்று, சங்கம் வளர்த்துத் தமிழ் வளர்த்த மதுரையில், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்திட முன் வர வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வலியுறுத்திக் கோருகிறது!


 ===============================

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

Uploaded Image Uploaded Image

Tuesday, August 18, 2026

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும்! சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை

மாற்றியமைக்க வேண்டும்!

சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய

எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை!

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என சென்னையில் இன்று (18.08.2026) தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியோடு நடைபெற்றது.

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும்தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப்பிரதேசம் – மிசோரம் மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும்இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும்வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும்கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்திதமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், இன்று (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்குசென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றுப் பேசினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் நா. வைகறை, கோரிக்கை முழக்கங்களை எழுப்ப. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூடிநின்ற தோழர்கள், அதனை விண்ணதிர உணர்வோடு எதிராலித்தனர்.

 

"ஆரியத்துவ ஒற்றை ஆட்சி முறையினைத் திணிக்காதே!", “மொழி இன அடையாளத்தை அழிக்காதே!”, “இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றிடு!”, “தமிழருக்குத் தன்னரசு! இனங்களின் கூட்டரசு! தமிழ்நாட்டில் தன்னரசு! இந்தியாவில் கூட்டரசு! தமிழ்நாட்டுக்கு அதுவே தேவை!”, “படைத்துறை - தகவல் தொடர்பு - வெளிநாட்டுறவு - பண அச்சடிப்பு நான்கு துறை அதிகாரம் மட்டும் இந்திய அரசுக்கு போதும்! மற்ற அதிகாரங்கள் அனைத்துமே மாநில அரசுக்கு வேண்டும்! வேண்டும்! என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.  

 

அதனைத் தொடர்ந்து, பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் தோழர் க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் செம்மலர்ச்செல்வி ஆகியோர் ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

 

தமிழர் தன்னுரிமைக் கழகத் தலைவர் பாவலர் இராமச்சந்திரன், பாவலர் கீர்த்தி, தமிழின உணர்வாளர் திரு. அ. பத்மநாபன், அம்பத்தூர் தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் திரு. சிவ. செந்தமிழ்வாணன், புதுச்சேரி மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் திரு. கோ.அ. செகநாதன், ஆறாம் திணை மக்கள் இயக்கத் தலைவர் திரு. செகதீசன், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் பாவலர் தமிழுலகன், திரு. வேலு சுபராசன் (உலகத் தமிழ் இயக்கம்) உள்ளிட்ட தோழமை அமைப்புத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உடன் நின்றனர்.

 

பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் சென்னை வெற்றித்தமிழன், தஞ்சை பழ. இராசேந்திரன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூர் பி. தென்னவன், புதுச்சேரி இரா. வேல்சாமி, குடந்தை க. விடுதலைச்சுடர், சாமிமலை க. தீந்தமிழன், மதுரை கதிர்நிலவன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, பொதுக்குழு தோழர்கள் சிதம்பரம் வேந்தன் சுரேசு, கோவை பாலகுமரன், ஈரோடு குமரேசன், உடுமலைப்பேட்டை இராசேசு, தொரவி முருகன், சீர்காழி அரவிந்தன், சென்னை பழ.நல். ஆறுமுகம், அம்பத்தூர் செயலாளர் தோழர் அன்புகிட்டு, ஆவடி செயலாளர் தோழர் சுப்பிரமணியன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், சைதாப்பேட்டை செயலாளர் தோழர் முகிலன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் அமுதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பாவலர் முழுநிலவன்   உள்ளிட்ட தமிழ்நாடு – புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத் தோழர்களும், நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் பேரெழுச்சியோடு பங்கேற்றனர்.

 

இந்திய அரசே!

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்று!


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

 


Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image Uploaded Image

Monday, August 17, 2026

ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்

ஊடகவியலாளர்கள் அழைப்புக் கடிதம்

                                               

விடுநர்

       க. அருணபாரதி,

      துணைப் பொதுச் செயலாளர், த.தே.பே.,

      எண்: 12/6, “பன்மைவெளி”, முதல் தளம்,

நியூ பங்காரு காலனி முதல் தெரு,

கலைஞர் கருணாநிதி நகர் மேற்கு,

சென்னை - 600 078.

 

பெறுநர்

      உயர்திரு. செய்தி ஆசிரியர் அவர்கள்,

      அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்,

      சென்னை, தமிழ்நாடு.

 

மதிப்பிற்குரிய ஐயா / அம்மா,

 

இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும், நாகாலாந்து - அருணாச்சலப் பிரதேசம் மிசோரம் - மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் தமிழ்நாடு அரசுக்கும் வெளி மாநிலத்தவர்களை அனுமதிக்க - மறுக்க உள்நுழைவு அனுமதி வழங்கும் அதிகாரம்” (Inner Line Permit) வேண்டும், இந்திய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவியை நீக்க வேண்டும், வரி வசூல் அதிகாரம் முழுவதும் மாநில அரசிடமே இருக்க வேண்டும், கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் முதலிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (18.08.2026) செவ்வாய் காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

இந்நிகழ்வுக்கு, தங்கள் ஊடகத்தின் சார்பில் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அனுப்பி செய்தி சேகரித்து துணை நிற்குமாறு, தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

 

தோழமையுடன்,

. அருணபாரதி

துணைப் பொதுச்செயலாளர்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச - 98419 49462, 98408 48594

Uploaded Image Uploaded Image Uploaded Image

Friday, August 7, 2026

நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்!

 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 

இன்று (7-8-2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான இந்திய அரசின் நிதிப் பகிர்வு குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் “பாலுக்கும் காவல், புனைக்கும் தோழன்” என்ற வகையில் அமைந்த “நாடகத் தீர்மானமாக” இருக்கிறது! தமிழ்நாடு அரசின் சார்பில் முன்மொழியப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

 

தமிழ்நாடு அரசின் சார்பில், நிதிஅமைச்சர் மரியவில்சன் முன்மொழிந்த தீர்மானம் எந்தக் குறிப்பான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. “மத்திய அரசின் வரிவருவாய் பகிர்வானது சமநீதி, ஞாயம், மாநிலத்தின் நிதிதிரட்டும் திறன், ஆட்சி நிர்வாகத்தின் செயல்திறன், அம்மாநிலத்தின் வளர்ச்சித் தேவைகள் ஆகியவற்றை மனதில் கொண்டும், மக்கள் தொகைப் பெருக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய, மற்றும் மனித வள மேம்பாட்டில் முன்னேறிய மாநிலங்களைப் பாதிப்பதாக இல்லாமலும் அமையவேண்டும். இதற்கு ஏற்ப மாநிலங்களுக்கு இடையிலான நிதிப்பகிர்வு ஏற்பாடுகள் அமையவேண்டும்” என்று பொதுப்படக் கூறிச்செல்கிறது.

 

இத்தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க. உறுப்பினர் – முன்னாள் நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, மொத்த வரிவருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதிப்பங்கு 16-ஆவது நிதி ஆணையம் அறிவித்துள்ள 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்படவேண்டும் என்ற திருத்தத்தை மட்டும் முன்வைத்தார். தமிழ்நாட்டிற்கு என்ன வேண்டும் என்று எதையும் கோரவில்லை.

 

இத் தீர்மானத்தின் மீது பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்வு முறைமை. தமிழ்நாடு போன்ற இயற்கை அமைப்பில் காடுகளின் பரப்பளவு குறைவாக இருக்கிற மாநிலத்தை, அதேபோல், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் திறனோடு செயல்பட்ட மாநிலத்தை வஞ்சிப்பதாக அமைந்துவிடக் கூடாது” என்றுதான் பேசினார்.

 

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “வழவழா“ தீர்மானம் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தேவையையும் நாட்டு முன்னேற்றத்தில் அதன் பங்களிப்பையும் கருத்தில் கொண்டு இந்திய அரசின் வரிவருவாய் பங்கீடு அமையவேண்டும் எனப் பொதுப்படப் புலம்பியது. வேறு எதுவும் உருப்படியாக இல்லை. குறிப்பான கோரிக்கை இல்லாத இந்தத் தீர்மானம், தமிழ்நாடு நிதிவகையில் இந்திய அரசால் புறக்கணிக்கப்படுவதைக் கவனத்தில் கொண்டு விழிப்போடு இருக்கிறோம் என மக்களுக்குப் படம் காட்டுகிறதே தவிர, பயன்தரத் தக்கதாக இல்லை. உரிமை கோருவதாகக் கொஞ்சமும் இல்லை.

 

நிதி உரிமை கோரியதாகவும் இருக்க வேண்டும், இந்திய அரசின் முகம் கொஞ்சமும் கோணக்கூடாது என்று அமைந்துள்ள வழக்கமான திராவிடபாணி தீர்மானமாக, த.வெ.க. அரசின் இத் தீர்மானம் இருக்கிறது.

 

வரிவிதித்து வசூலிக்கிற முழு அதிகாரமும் மாநிலத்திற்கே வேண்டும் என்ற அடிப்படையான கூட்டரசுக் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கை. அது ஒரு புறமிருக்கட்டும். குறைந்தது, இந்திய அரசு தமிழ்நாட்டில் திரட்டுகிற வரிவருவாயில் 50 விழுக்காடு அளவு தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டும் என்ற குறைந்தபட்சக் கோரிக்கை கூட த.வெ.க. அரசும், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளும் இதில் முன்வைக்காதது, பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக் கட்சிளே தமிழ்நாட்டை வஞ்சிப்பது போல் உள்ளது.

 

இந்திய அரசு இப்பொழுது மாநிலங்களில் வசூலிக்கும் வரியில் 41 விழுக்காடு மாநிலங்களுக்குத் திருப்பித் தருவதாகச் சொல்கிறது. ஆனால், உண்மை என்ன? தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வசூலித்த வரியில் 41 விழுக்காட்டை எடுத்து, பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற இந்தி மாநிலங்களுக்கும் மற்ற சில மாநிலங்களுக்கும் 50 லிருந்து 60 விழுக்காடு அளவுக்கு திருப்பிக் கொடுக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இந்திய அரசு வசூலித்த வரியில் 27 விழுக்காடு மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது; 41 விழுக்காடு அல்ல.

 

இந்த நிலையில், இதை ஏன் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் தெளிவாகக் குறிப்பிடவில்லை? இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்த தொகையில் 41 விழுக்காடும் வந்துவிடுவது போலவும், இதை 50 விழுக்காடாக உயர்த்தவேண்டும் என்று கேட்பது போலவும் தோற்றம் அளிக்கிறது. எனவே, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

 

தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கொரு திருத்தமாவது சொல்லுங்கள். இந்திய அரசு தமிழ்நாட்டில் வசூலித்த மொத்த வரியில் 50 விழுக்காடு நிதி தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோருவதாக ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.           

 

பிரித்தானிய ஆட்சி இந்திய துணைக் கண்டத்தைக் கொள்ளை அடித்ததை விட இந்திய அரசு தமிழ்நாட்டில் அடிக்கிற வரிக் கொள்ளையும், வளக் கொள்ளையும் மிகமிக அதிகம். உண்மையில், காலனியச் சுரண்டலுக்கு உள்ளான மண்ணாக தமிழ்நாடு அல்லல்படுகிறது.

 

இந்த அவலச் சூழலில்கூட தமிழ்நாடு அரசோ, சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகளோ தமிழ் நாட்டின் உரிமைகளை உறுதியாக வலியுறுத்த முன்வரவில்லை என்பது கவலை அளிக்கிறது.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக விழிப்புணர்வுள்ள இளையோர், தமிழ்நாட்டின் நிதிஇறையாண்மையை வலியுறுத்தி, கட்சிகள் கடந்து ஒன்றுதிரள வேண்டும். தமிழ்நாடு மீள அது ஒன்றுதான் வழி எனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்துகிறது.  


===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.X.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=============================== 

Uploaded Image

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT