உடனடிச்செய்திகள்

Thursday, August 6, 2015

மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..!




மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..! 




தமிழ்நாட்டு மக்களை சீரழித்து வரும் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஆகத்து 4 அன்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாப்போராட்டம் நடந்தது.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் காலை முதல் மாலை வரை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. தீபக் தலைமையில் தடைபெற்று வந்த அந்தப் போராட்டத்தை, காவல்துறையினர் சீர்குலைத்தனர்.

போராட்டம் நடக்குமிடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையாளர் பீர்முகமது என்பவர் தலைமையிலான காவல்துறையினர், மாற்றுதிறனாளிகளை அடித்து உதைத்து இழுத்துச் சென்று அனைவரையும் கைது செய்தனர். இராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அவர்களுக்கு மாற்று மண்டபம் ஏற்படுத்தித் தருவதாக கூறி வாகனங்களில் ஏற்றி வந்த காவல்துறையினர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலுள்ள பறக்கும் தொடர்வண்டிப் பாலத்தின் கீழ் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல்துறையினரைக் கண்டித்தும், மதுவிலக்கு கோரியும், மாற்றுத் திறனாளிகள் அவ்விடத்திலேயே தங்கள் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, 2 பெண் மாற்றுத் திறனாளிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வெயில் - மழையைப் பொருட்படுத்தாது கொள்கை உறுதியுடன் களத்தில் நிற்கும் மாற்றுத் திறனாளிகளை, பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் நேரில் சந்தித்து ஆதரவு நல்கி வருகின்றனர்.

போராட்டத்தின் நான்காம் நாளான இன்று (06.08.2015) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் பாலசுப்பிரமணியம், இரமேசு உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு நல்கினர்.

தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளைத் தாக்கியக் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையாக மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ள மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT