புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் (68), வியாழக்கிழமை லண்டனில் காலமானார். சிறிது காலமாக பித்தக் குழாய்ப் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு ஜீரணநீரைக் கொண்டு செல்வது பித்தக் குழாய். அதில் ஏற்பட்ட புற்றுநோய் முற்றி, கல்லீரல், நுரையீரல், அடிவயிறு மற்றும் எலும்புக்கும் பரவியது. அதற்காக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை, நவம்பர் இறுதியில் மோசமடைந்தது. சிகிச்சை பயன் தராமல், அவர் வியாழக்கிழமை காலமானார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்தவர் பாலசிங்கம். பூட்டான் தலைநகர் திம்புவில் 1985-ல் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தொடங்கி, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்துள்ள அனைத்து சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் புலிகள் சார்பில் பங்கேற்றவர் பாலசிங்கம். புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான அவர், அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்தான் உடல்நலக் குறைவு காரணமாகப் பங்கேற்கவில்லை.
இலங்கையில் வெளியாகும் "வீரகேசரி' என்னும் தமிழ் நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் பாலசிங்கம். "விடுதலை' என்னும் நூலையும் அவர் எழுதியுள்ளார். அவரது இயற்பெயர் ஸ்தனிஸ்லாஸ். அவரது மனைவி அடேல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 35 ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் பாலசிங்கம். 1990-களின் இறுதியில் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். பல்வேறு நோய்களுடன் போராடிவந்த அவரை அவரது மனைவி அடேல்தான் அருகில் இருந்து கவனித்துவந்தார்.
""எனக்கு ஏற்பட்டுள்ள நோய், துரதிருஷ்டவசமான தனிப்பட்ட துயரம். எனது மக்கள் (தமிழர்கள்) அனுபவித்துவரும் துயரங்களுடன் ஒப்பிட்டால், எனது நோய் ஒரு சிறு துரும்பு. கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி, பெரும் துன்பங்களை அனுபவித்துவரும் மக்களைக் காக்க குறிப்பிடத் தக்க வகையில் பங்காற்ற முடியாமல், வியாதி என்னை முடக்கிவிட்டதே என நினைக்கும் பொழுதுதான் எனக்குப் பெரும் வேதனை ஏற்படுகிறது'' என்று 3 வாரங்களுக்கு முன்புதான் வருத்தப்பட்டிருந்தார் பாலசிங்கம்.
Post a Comment