தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் |
Wednesday, 20 December 2006 | |
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத்தை உலகம் அறியச் செய்தவர் அன்ரன் பாலசிங்கம். தம்பி பிரபாகரனும், அவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு ஈருடல் ஓருயிராக வாழ்ந்தனர். பிரபாகரனுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைப்பதற்கு அவர் காரணமாக இருந்தார்.
அவரை கொலை செய்தால் பிரபாகரனின் வலது கையை முறித்தது போல் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் கொலை செய்ய முயற்சி செய்த போது எதிரிகளிடம் இருந்து அன்ரன் பாலசிங்கம் பலமுறை உயிர் தப்பிப் பிழைத்தார். பாலசிங்கம் ஒருமுறை உடல்நலன் குறைந்த போது அவரால் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்காக இலங்கையில் இருந்து செல்ல முடியவில்லை. அப்போது சந்திரிகா ஆட்சி நடைபெற்றது. அன்ரன் பாலசிங்கத்தை கடல் மார்க்கமாக பிரபாகரன் அனுப்பி வைத்தார்.
பாலசிங்கம் வெளிநாடு சென்று சேர்ந்த தகவல் கிடைக்கும் வரை அதே கடற்கரையில் ஒருநாள் முழுவதும் பிரபாகரன் காத்திருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று தெரிந்தும் பிரபாகரன் அங்கே காத்திருந்தது அவர்களுக்கு இடையேயான நட்பின் ஆழத்தை காட்டுகிறது. தமிழீழம் அமைந்ததும் முக்கிய பொறுப்புக்கு அன்ரன் பாலசிங்கம் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அருகில் இருந்தாலும் நம்மை விட்டு பிரிந்த அவருக்கு வீர வணக்கங்கள் என்றார் அவர்.
தமிழ்த் தேச பொது உடமை கட்சியைச் சேர்ந்த மணியரசன், புத்தக வெளியீட்டாளர் சச்சிதானந்தம், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், கவிஞர் காசியானந்தன் மற்றும் பலர் உரையாற்றினர். இந்நிகழ்வில் ஓவியர் சந்தானம், எழுத்தாளர் ஜெயபிரகாசம், தமிழக மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த குணசீலன், சட்டத்தரணி தமித்த லட்சுமி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பத்திரிகையாளர் பகவான்சிங், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சந்திரேசன் ஆகியோரும் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் புகழ்ந்து உரையாற்றினர். ஓவியர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தைப் பற்றி காசியானந்தன் எழுதிய பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முன்னதாக தேசத்தின் குரலின் உருவப்படத்தை பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். |
Post a Comment