சட்டமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற
தமிழ்த் தேசிய அமைப்பினர் கைது
சென்னை, 12-11-௨00௮
ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முன்பு இந்திய அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி இவ்வார்ப்பட்டம் நடைபெறும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.
இன்று(12-11-2008) காலை சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகே காவல்துறையின் தடையை மீறி சட்டமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினர் 130 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இப்பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசிய விடுலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, மறுமலர்ச்சி மக்கள் தமிழகத்தின் தலைவர் துரையரசன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்டோர் இவ்வார்ப்பட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில், "இந்திய அரசே! போரை நிறுத்து", "ராசபட்சே திரும்பிப் போ", "இந்திய அரசு சிங்களவனுக்கு அள்ளிக் கொடுத்த ஆயுதங்களை திரும்பப் பெறு" போன்ற முழக்கங்கள் எழுப்பட்டன. கைதானவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
Post a Comment