உடனடிச்செய்திகள்

Wednesday, November 12, 2008

ராஜபட்சே திரும்பிப் போ :: தமிழகமெங்கும் த.தே.பொ.க. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

ராஜபட்சே திரும்பிப் போ
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
 
சிங்கள அரசின் அதிபர் ராசபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடந்தது.

 

மதுரை
 

மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இணைந்த இவ்வார்ப்பாட்டத்தை நடத்தின. 12-11-2008 காலை 11.00 மணிக்கு மதுரை மேலமாசிவீதிவடக்குமாசி வீதி சந்திப்பில் நடந்த இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி மதுரை நகரச் செயலாளர் இராசு தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் கருப்பையா முன்னிலை வகித்தார். "தமிழர் இரத்தம் குடிக்கும் ராஜபட்சே திரும்பிப் போ!", "இனக்கொலை புரியும் ராஜபட்சே திரும்பிப் போ!", "கொலைவெறியன் ராஜபட்சேவுடன் இந்திய அரசே கைகுலுக்காதே" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அ.ஆனந்தன்(த.தே.பொ.க.), கதிர்நிலவன்(த.தே.வி.இ.), வையவன்(தமிழக மாணவர் முன்னணி) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

 

தஞ்சை

 
தஞ்சையில் 12-11-2008 மாலை 5.00 மணிக்கு பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கருப்புக் கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான இளைஞர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

செங்கிப்பட்டி

 
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆண்களும் பெண்களுமாக பலநூறு பேர் திரண்டுவிட்டதால் தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
 

திருவாரூர்

 
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12-11-2008 அன்று மாலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் க.அரசு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மூத்த உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, வழக்குரைஞர் தமிழ்மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT