உடனடிச்செய்திகள்

Sunday, July 12, 2009

திருச்சி தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு தொடங்கியது...தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் இன்று(12.7.09) நடக்கும் ”தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு” தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, தமிழக உழவர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தோழர்களும், பல்வேறு இயக்கத்தினரும் இன உணர்வாளர்களும் மாநாட்டுத் திடலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மாநாடு அரங்கம் நிரம்பியதால் அரங்கத்திற்கு வெளியே இருக்கைகள் போடும் பணி நடைபெற்று வருகின்றது.

சமர்ப்பா குழுவினர் இசை நிகழ்ச்சி
பாவலர் சமர்ப்பா இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது.

ஓவியக்காட்சி தொடக்கம்
ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில், ஈழம் குறித்தும் தமிழ்த் தேசியம் குறித்தும் பல்வேறு ஓவியங்கள், த.தே.பொ.க. நடத்தியப் போராட்டங்களின் புகைப்படங்கள் என பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாநகரக் கிளை அமைப்பாளர் தோழர் இராசாரகுநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த் தேசிய அரங்கு - கருத்தரங்கம்
தங்பொழுது தமிழ்த் தேசிய அரங்கு - கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கைத் தலைமை தாங்கி தொடக்கி வைத்துப் பேசினார். இந்திய அரசின் தமிழினப் பகை குறித்து அவர் ஆற்றிய உரை மாநாட்டுத் திடலில் கூடியிருந்த அனைவரையும் கவர்ந்தது.

அதன் பின்னர், உலகமயமும் தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் அவர்கள் உரையாற்றினார். உலகமய நாடுகள் ஈழத்திற்கு எதிராக செய்த சதிகள் பற்றியும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசாக ஈழத்தை புலிகள் கட்டியமைத்த விதத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

அதன் பின்னர், மொழிக் கொள்கை பற்றி மொழியியல் அறிஞர் முனைவர் அரசேந்திரன் அவர்கள் உரையாற்றினார். தமிழர்களுக்குத் தேவை ஒரு மொழி்க் கொள்கையே என்று அவர் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

அதன் பின்னர், இழந்த உரிமைகள் மீட்பது குறித்து முனைவர் த.செயராமன் அவர்கள் உரை நிகழ்த்தி வருகின்றார்.

இன்னும் சில நேரங்களில் அடுத்த செய்தி....

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT