உடனடிச்செய்திகள்

Monday, July 20, 2009

“தமிழீழம் மலரும்; தமிழகமும் மலரும்!” - திருச்சியில் வெடித்த திடீர் புரட்சி


“தமிழீழம் மலரும்; தமிழகமும் மலரும்!”
-திருச்சியில் வெடித்த திடீர் புரட்சி

(தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு குறித்து “தமிழக அரசியல்” வார இதழ் எழுதிய செய்தி)


அமெரிக்க ஏகாதிபத்தியம்’----என்ற வார்த்-தையை கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன இந்திய ஏகாதிபத்தியம்? அதற்கு விளக்கமளிக்க திருச்சியில், ‘தமிழ்த்தேசியம் சிறப்பு மாநாடு’ ஜூலை 12-ம் தேதியன்று நடந்தது.

‘தியாகி முத்துக்குமார் அரங்கம்’ என்று பெயரிடப்-பட்டிருந்த அரங்கத்தில் ‘சமர்ப்பா’ குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. ஓவியம் மற்றும் புகைப்படக் கண்காட்சியும் நடந்தது. இதில், இங்குள்ள தமிழர்களின் பிரச்னையைவிட, ஈழம் குறித்து வைக்கப்பட்டிருந்த படங்களே அதிகமாக இடம்பெற்றிருந்தன. காலையில் தமிழ்த் தேசிய அரங்கில், ‘தமிழர் இழந்த நில -நீர் உரிமைகள்’, ‘மொழிக்கொள்கை’, ‘தமிழ்த் தேசியமும் உலக-மயமும்’ ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தப்-பட்டது. பேசியவர்கள் அனைவரும், இந்திய அரசு தமிழர்களுக்குச் செய்த துரோகங்களையும் அதற்குத் துணைபோன திராவிட கட்சிகளின் செயல்பாடு களையும் கிழித்துத் தோரணம் கட்டினர். இதற்கு பெயர் தான், இந்திய ஏகாதிபத்தியம் என்று சொல்லாமலே வந்திருந்தவர்களுக்கு விளங்கியது.

தொடர்ந்து தமிழீழ ஆதரவு திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பில், ‘கருப்புக்குரல்’ என்ற நாடகம் நடத்தப்பட்டது. மாலையில் தமிழீழ அரங்கில் ‘ஈழமும் உலக நாடுகளும்’, ‘இந்தியமும் ஈழமும்’, ‘ஈழத்தின் எதிர்காலம்’ ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர்.

தேசியக் கொடி எரிப்பில் சிறை சென்றவர்களுக்குப் பாராட்டு விழா, வரும் ஆகஸ்டு 20-ம் தேதி தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கடைப்பிடித்தல், தமிழ்நாட்டில் மூன்று வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க-வேண்டும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் ஆதரித்துப் பேசியவர்கள் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறை-வேற்றப்பட்டன.

பாவணர் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பரணர், “தமிழில் நாற்றம் என்றால் மணம் என்றுதான் பொருள். ஆனால் நாம் அதைப் பொருள் மாற்றி கெட்ட வாடை (துர்நாற்றம்) என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தி வருகிறோம். அதுபோல், ‘கலைஞர்’ என்ற வார்த்தையும் தவறானவர்கள் பெயரில் இருப்பதால் இனிமேல் திரைப்படத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் நம்மவர்களை ‘திறனாளர்கள்’ என்று அழைப்போம். ‘கலைஞர்’ என்ற வார்த்தைகூட தமிழுக்கும், தமிழர்களுக்கும் வேண்டாம்” என்று அவர் கூறியபோது, அரங்கமே அதிர்ந்தது. உளவுத்துறை கவனமாகக் குறித்துக்-கொண்டது.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு பேசுகையில்தான் இன்னும் விறு-விறுப்பாக இருந்தது. “குருவி என்றால்கூட அதற்-கென்று கூடு இருக்க வேண்டும். குடும்பம் என்றால் வீடு இருக்க வேண்டும். இனம் என்றால் நாடு இருக்க வேண்டும். இது சாத்தியமா? என்று கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தால் சாத்தியம் ஆகாது. சாத்தியம் ஆகும் என்று நம்பி களத்தில் இறங்கினால் சாத்தியமாகாமல் போகாது. தேவை என்று தீர்மானித்து அதற்கான தேடுதலை நடத்தினால் கிடைத்தே தீரும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உணர்வு இழக்காதவர்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ராஜபக்ஷே மனம் குளிரும்படி, இங்கிருப்பவர்கள் பேச வேண்டியதில்லை. இலங்கை-யில் தமிழ் இனத்தின் போரை அடுத்த தலைமுறையும் முன்னெடுக்கும். அந்தப் போர், சிங்களவன் களைத்துப் போகும் வரையும், அவனுக்கு உதவி செய்யும் இந்தியன் களைத்துப் போகும் வரையும் தொடரும்.

தமிழ்த் தேசியம் என்றால் வெறும் தமிழ் ஈழம் மட்டுமோ, தமிழ்நாடு மட்டுமோ கிடையாது. ஓர் அரபு மொழிக்கு 21 நாடுகள் இருக்கும் போது, தமிழ் மொழிக்கு இரண்டு நாடுகள் இருக்கக் கூடாதா? இந்தியா முப்பது நாடுகளாகச் சிதறும்போது, தமிழீழம், தமிழகம் என இரண்டு நாடுகளும் உருவாகும். இந்தியக் கொடியை எரித்தது அவமரியாதை-யாம். இதில் என்ன அவமரியாதை இருக்கிறது?

அந்தக் கொடிக்கு உரிய தத்துவங்கள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் வெறும் சடங்காகக் கருதப்-படும் கொடியை எரித்தது எப்படி அவமரியாதை-யாகும்? பிணங்களை எரிக்கிறோம் என்றால் அது இறந்தவர்களுக்குச் செய்யப்படும் அவமரியாதையா? இந்திய தேசியம் பிணம் ஆகிவிட்டது. அதைத் தகனம் செய்தோம். அதற்கு வழக்கு போடுவதா?” என்று பேசி சூட்டை அதிகப்படுத்தினார் தியாகு.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “இந்திய தேசியம் தமிழகத்தை ஒவ்வொரு துறைகளிலும் எவ்வளவு வஞ்சகம் செய்கிறது என்பதை அறிஞர்கள் திறனாய்வு நூல் எழுதி விளக்க வேண்டும். உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்னைபோல் இந்தியாவில் உள்ள மற்ற இனத்தவருக்குப் பிரச்னை என்றால் இந்திய அரசு இப்படி அலட்சியமாக இருக்குமா? தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா என எந்த மாநிலத்தோடு பிரச்னை என்றாலும், தமிழகத்தின் எதிரிகளோடு அல்லவா இந்தியா கைகோத்துக் கொள்கிறது.

இதற்கு எதிராக வீரியமான போராட்டம் நடத்த மக்களைப் பழக்க வேண்டும். இலங்கைப் போரை நிறுத்த நாம் எவ்வளவோ முயன்றும் மத்திய அரசு அசையவில்லை என்றால் நமது போராட்டத்தில் தீவிரம் இல்லை. நமது இளைஞர்கள் மனத்தில் அமைதி வருவதற்காகத் தியானம் கற்க வேண்டியதில்லை. ஆவேசம் வருவதற்கான தியானம் இருந்தால் அதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். முதலிலாவது தமிழ்த் தேசியம் குறித்துப் பேசினால் விடுதலைப்-புலிகள் ஆதரவு என்று வழக்கு போடு-வார்கள் என்ற பயம் பலருக்கு இருந்தது. இப்போதுதான் புலிகளே இல்லையே. இனிமேல் அந்தப் பயமும் தேவை இல்லை” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்த் தேச பொது-வுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன் இறுதியாகப் பேச வந்தார். “தமிழர்களில் பலரும் இனி ஈழம் அவ்வளவுதான் என்று நினைத் துக்கொண்டிருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லை. சர்வதேச சதியின் காரணமாகச் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. காலம் சுழலும், ஆனாலும் ஈழம் வெல்லும். ஈழப்-போருக்கு ஆதரவாக நாம் இங்கு மக்களைத் திரட்ட வேண்டுமானால் இந்த மண்ணுக்கு உரிய சிக்கலை மக்கள் முன் வைக்க வேண்டும். நாம் இழந்த உரிமை-கள் குறித்த தெளிவை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் ஹொய்சால நகரில் உள்ள திபெத்திய அகதிகள் முகாமில் உள்ள வசதிகளைப்-போல் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஏன் இல்லை? என்ற சிந்தனையை மக்களிடையே விதைக்க வேண்டும். இந்த அடிப்படையிலான வேறுபாடுகள் ஏன்? என்ற சிந்தனை மக்களுக்கு வந்துவிட்டால், நமது போராட்டம் எளிதாகிவிடும். பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படாத இரண்டாயிரம் இளைஞர்கள் வந்தால் போதும் நமது இலக்கை அடைய முடியும். இவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் ஊக்கம் அளித்தால் போதும், தமிழ்த் தேசியம் சாத்தியம்” என்றார்.

இவ்வாறு “தமிழக அரசியல்” வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அக்கட்டுரையில், இம்மாநாட்டில் இறையாண்மைக்கு எதிராக பலரும் பேசியதால் அதனை யாரும் விரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு.

ஈழத்தமிழர் படுகொலைக்கு முழு முதற் காரணம் இந்தியாவே என்பதால் அதன் இறையாண்மை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் யாரும் கவலைப்படவில்லை.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT