இந்திய அரசைக் கண்டித்த மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டை விட்டு மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்
பெ.மணியரசன் பேச்சு
மதுரை, 29.09.09.
முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணையைக் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு வனப் பகுதியில் நில அளவை செய்ய கேரள அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், தற்பொழுதுள்ள முல்லைப் பெரியாற்று அணைக்கு பதிலாக புதிய அணைக்க கட்டுவதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது உறுதியானது. தமிழர்களுக்கு எதிரான இந்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், அந்த அனுமதியை இரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று 26.09.09 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (29.09.09) மாலை 5.00 மணியளவில் மதுரை மேல மாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோரை த.தே.பொ.க. மதுரை மாநகரச் செயலாளர் இர.இராசு வரவேற்றுப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
"இனிமேல் இந்திய அரசையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையோ நாம் நம்பி பயனில்லை. மாநில அரசு என்பது தமிழர்களின் உரிமைப் பறிப்புகளை மறைத்து திசைத் திருப்பும் அரசாகவே உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற தேர்தல் கட்சிகளையோ நம்பிப் முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க முடியாது. கேரளத்தைப் பொறுத்தவரை முல்லைப் பெரியாறு சிக்கலை இனச்சிக்கலாகவே பார்க்கின்றனர். தமிழர்களுக்கு தண்ணீர் தரக் கூடாது என்று காங்கிரஸ், கம்யுனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் உள்ளனர். எனவே நாமும் முல்லைப் பெரியாறு பிரச்சினையை இனப்பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்" என்று அவர் பேசினார்.
மேலும், "இரண்டு நிலைகளில் நாம் போராட வேண்டும். ஒன்று தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கேரளாவுக்கு போகாமல் மறியல் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகளை வெளியேற்ற வேண்டும்.மலையாளி நடத்தும் நிறுவனங்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்" என்று அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் தெ.காசி நாதன், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.எம்.அப்பாஸ், PD-4 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த இரா.இராமசாமி, PD-3 முல்லைப் பெரியாறு - வைகை நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தைச் சேர்ந்த ந.சி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் முல்லைப் பெரியாற்று அணையால் பாதிப்புக்குள்ளாகும் உழவர்களின் சிக்கல் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் பு.சந்திரபோஸ், முல்லைப் பெரியாற்று அணையின் முன்னாள் செயற் பொறியாளர் சி.சுதந்திர அமல்ராஜ், தமிழர் தேசிய இயக்கம் மதுரை மாநகரச் செயலாளர் வெ.ந.கணேசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் மதுரை மாநகரச் செயலாளர் கதிர் நிலவன், தமிழப் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன். மகளிர் ஆயம் மதுரை அமைப்பாளர் மேரி உள்ளிட்டோர் இந்திய அரசைக் கண்டித்து கண்டன உரையாற்றினர்.
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் அ.ஆனந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்க்கு நன்றி கூறினார்.
Post a Comment