முல்லைப் பெரியாறு வழக்கைக் கிடப்பில் போட கேரளத்திற்கு
துணைபோய் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
துணைபோய் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
தஞ்சை, 12.11.09
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு உரிமைச் சிக்கலை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயத்திற்கு விடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவு செய்தது ஏமாற்றமளிக்கிறது. அதற்குத் தமிழக அரசு இசைவுத் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் உரிமையைப் பலி கொடுக்கும் செயலாகும்.
2006 பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி உயரத்திற்குத் தண்ணீர்த் தேக்கிக்கொள்ளலாம. ஆணை வலுவாக உள்ளது என்று கூறியிருந்தது. அத்தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் உடனடியாகக் கேரள சட்டமன்றம் அணைகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி முல்லைப்பெரியாறு அணை தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் கேரள அரசு அறிவித்தது.
அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக உள்ள இச்சட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அத்துடன், உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்குவதைக் கேரளம் தடுக்கக்கூடாது என்றும் கோரியிருந்தது.
இவ்வழக்கு விசாரணை விரிவாக நடந்தது. 10.11.2009 அன்று தீர்ப்பு வழங்கவேண்டிய நிலையில், தீர்ப்பு வழங்காமல் ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் அமைத்து அதன் விசாரணைக்கு. இவ்வழக்கை விடுமாறு மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு ஐந்து நீதிபதிகள் ஆயத்திற்கு வழக்கை மாற்றிவிட, தமிழக அரசு வழக்கறிஞர் பராசரன் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கருத்துப்படியே அவர் ஒப்புதல் தந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு இருக்கும் 999 ஆண்டு ஒப்பந்தத்தையும் 2006 பிப்ரவரி தீர்ப்பையும் கிடப்பில் போட்டு, செயலற்றதாக்கும் கெட்ட நோக்கமுடைய கேரளாவின் நிலைபாட்டிற்குத் தமிழக அரசு உடந்தையாய்ப் போயிருப்பது ஏன்? என்ற வினா எழுகிறது. இதற்குத் தமிழக அரசு விடை சொல்லியாக வேண்டும்.
காவிரி உரிமையைப் பலிகொடுத்தது போலவே, இப்பொழுது முல்லைப்பெரியாறு உரிமையையும் பலி கொடுத்துள்ளது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தத் துரோகத்தைத் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்நிலையில் தமிழக மக்கள் கொந்தளித்து எழுந்தாலன்றி, முல்லைப்பெரியாறு அணையில் தமிழ் நாட்டிற்குள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசோ, நடுவண் அரசோ, உச்ச நீதிமன்றமோ முன் வராது. ஐந்து மாவட்ட மக்களின் வேளாண்மை பாழாவதுடன், குடிநீர் பஞ்சம் பெரிதாக ஏற்படும். எனவே தமிழக மக்கள் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Post a Comment