உடனடிச்செய்திகள்

Saturday, November 14, 2009

முல்லைப் பெரியாறு தீர்ப்பு: தமிழக அரசின் துரோகத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடும் கண்டனம்

முல்லைப் பெரியாற்றுத் தீர்ப்பு

கேரள அரசின் அடாவடிக்கு துணைபோன தமிழக அரசு
தமிழக உழவர் முன்னணி கண்டனம்


முல்லைப் பெரியாறு வழக்கில், கேரள அரசுக்கு துணை போய் தமிழக அரசு செய்த துரோகத்திற்கு கடும் கண்டனத்தை தமிழக உழவர் முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் 12.11.09 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு வழக்கில் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உச்சநீதிமன்ற ஆயம் (டிவிசன் பென்ச) 10.11.09 அன்று அளித்துள்ள தீர்ப்பு தமிழக உரிமையை பறிப்பதாக உள்ளது. இத்தீர்ப்புக்கு தமிழக அரசின் முன் ஒப்புதல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பிறகே இத்தீர்ப்பு உரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முல்லைப்பெரியாறு உரிமையை தமிழக அரசே கை கழுவிவிட்டது.

2006இல் உச்சநீதிமன்ற ஆயம் அளித்த தீர்ப்பு உடனடியாக 142 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு தேக்கிக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இத்தீர்ப்பை முறியடிக்கும் தீய உள்நோக்கத்தோடு கேரள அரசு அம்மாநில அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற அணையையும் கொணர்ந்தது. இதன் மூலம் தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டு்ப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை சட்டவிரோதமாக கேரள அரசு பறிக்க முயன்றது. முல்லைப் பெரியாறு அணை சட்டப்படி கேரள அரசின் அதிகார எல்லையில் இல்லை.

ஆனால், இப்போதைய தீர்ப்பின் மூலம் நிலவும் நிலைமை செயலில் இருக்கட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கேரள அரசின் அடாவடியான சட்டம் செயலில் இருக்கும் என்பதும், 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கப்பட வேண்டும் என்பதும் ஆகும்.

முப்பது ஆண்டுகால முயற்சியில் கிடைத்த நியாயத்தை இத்தீர்ப்பு பறிக்கிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காவிட்டால் இத்தீர்ப்பு வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இத்தீர்ப்பு வரைவிற்கு தமிழக அரசு முன் ஒப்புதல் தந்ததின் மூலம் தமிழகத்தின் உரிமையை கைகழுவி முப்பது ஆண்டு முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த நியாயத்தை குழு தோண்டி புதைத்து விட்டது.

ஏனெனில் இப்போதைய தீர்ப்பில் மேல் ஆய்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ள அரசமைப்பச் சட்டசிக்கல் அனைத்துமே 2006 ஆம் ஆண்டு நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான மூன்று நீதிபதிகள் ஆயம் தீர விவாதித்து முடியு கூறிய செய்திகள் தாம். அரசமைப்புச் சட்ட விதிகள் 3 மற்றும் 4, 131, 363 போன்ற அனைத்து பிரிவுகளின் கீழும் கேரள தீர்ப்பு எழுப்பிய ஆட்சேபணைகளையெல்லாம் அத்தீர்ப்பு நிராகரித்தது. மேலும் 1956 ஆம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பகிர்வு தகராறு இல்லை. மாறாக அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையே இவ்வழக்கின் மையச் சிக்கல் என்று தெளிவுபடுத்தியது.

கேரள அரசு முன்பு எழுப்பிய ஆட்சேபணைகளைத்தான் இப்போதும் எழுப்பியுள்ளது. அன்று தமிழக அரசின் சார்பில் எல்லாவற்றிற்கும் மறுப்புரை அளிக்கப்பட்டு அது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்று அதே சட்டப் பிரச்சினைகளின் மீது மறு ஆய்வுக்கு ஒப்புதல் கொடுத்ததன் மூலம் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை கைகழுவி விட்டது. இவ்வாறு தமிழக அரசு ஒப்புதல் அளிக்காமல் போனால் ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய ஆயத்திற்கு அனுப்புவது என்ற தீர்ப்பே வர வாய்ப்பில்லை. ஏனெனில் இப்போது தீர்ப்புரைத்துள்ள உச்சநீதிமன்ற ஆயமும் மூன்று நீதிபதிகள் கொண்டது தான். சம அதிகாரம் கொண்டது தான். இவ்வாறு சம அதிகாரம் கொண்ட ஒரு ஆயம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவை இந்த ஆயம் எடுப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதலே கதவை திறந்து விட்டுளளது.

முல்லைப் பெரியாற்றுப் பாசன உழவர்களின் முப்பதாண்டு கால முயற்சியில் கிடைத்த வெற்றியை கைகழுவிவிட்ட தமிழக அரசுக்கு தமிழக உழவா முன்னணி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி தமிழக அரசையோ இந்திய அரசையோ நம்பி காத்திராமல் உழவர்களும் தமிழக மக்களும் இன உணர்வு பெற்று ஒன்றுபட்டு போராடுவது மட்டுமே முல்லைப் பெரியாறு உரிமையை நிலைநாட்ட உள்ள ஒரே வழியாகும். இதற்கு அணியமாகுமாறு அனைவரையும் தமிழக உழவர் முன்னணி அழைக்கிறது.இடம் : சிதம்பரம்
நாள் : 12.11.09

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT