உடனடிச்செய்திகள்

Friday, November 13, 2009

கொடி எரித்தத் தோழர்கள் விடுதலை: சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

(சிறையிலிருந்து வெளிவரும் தோழர்கள்)

(தோழர்கள் வே.பாரதி மற்றும் பா.தமிழரசன்)

சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனையொட்டி, கோவை நடுவண் சிறையிலிருந்து தோழர்கள் பா.தமிழரசன், வே.பாரதி ஆகியோர் கடந்த செவ்வாய்(10.11.09) அன்று மாலை 7.00 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாசலில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை நடுவண் சிறை வாசலில், பறையடித்து தோழர்களுக்கு வரவேற்பு மட்டும் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் தோழர்களை வரவேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், த.தே.பொ.க. பொதுக் குழு உறுப்பினர்கள் ஓசூர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து, ஈரோடு வெ.இளங்கோவன், மதுரை இராசு, ஆனந்தன், திருச்செந்தூர் தமிழ்மணி, தமிழக மாணவர் முன்னணி அரவிந்தன் உள்ளிட்ட பலரும் தோழர்களை வாழ்த்தி, பரிசளித்து கௌரவித்தனர்.


(தோழர் பா.தமிழரசனை பாராட்டுகிறார் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன்)


(தோழர் வே.பாரதியை பாராட்டுகிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு)


(தோழர் பா.தமிழரசன் கோவை மாநகர த.தே.பொ.க. தோழர்களால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்)
ஈழத்திற்கு எதிரான இந்தியத்தின் கொடியை எரித்த தோழர்கள், அக்கொடியை தம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தள்ளுபடி செய்தும், இது போன்ற நிபந்தனையை இனி எந்த வழக்கிற்கும் விதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தீர்ப்பு, இனி இது போன்ற தவறான நிபந்தனைகளை விதிப்பதற்கும் தடை விதித்துள்ளது.

(தோழர்களை பாராட்டி உரை நிகழ்த்தும் பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன்)

உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட போதிலும், ஈழத்தமிழர் இன அழிப்பிற்கு துணை போன இந்திய நாட்டின் கொடியை எங்கள் வீட்டில் ஒரு போதும் ஏற்ற மாட்டோம் என்று உறுதியுடன் தமது இளமைப் பருவத்தின் 6 மாத காலத்தை சிறையிலேயெ கழித்து, உறுதியுடன் போராடிய தோழர்கள் பா.தமிழரசன்(த.தே.பொ.க.), வே.பாரதி(த.தே.வி.இ.) ஆகியோரின் மன உறுதியையும், கொள்கைப் பற்றையும் உணர்வாளர்கள் உணர்வுடன் பாராட்டினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT