உடனடிச்செய்திகள்

Friday, August 27, 2010

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு - த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு!

த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

ஈரோடு, 27.08.2010.

கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.

அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர்.

அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த மகிழுந்துகளை அடித்து நொறுக்கினர்.

இப்பிரச்சினை தொடர்பாக த.தே.பொ.க. ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர் தோழர் மோகன்ராசு, சாதி ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த புலிப்பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ஈரோடு நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் இன்று(27.08.2010), தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நம் தோழர்கள் மீது குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பிக்கப் படாததால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் மற்றும் அவரது இளம் வழக்கறிஞர்கள் கட்டணம் ஏதுமின்றி முன்னிலையாகி வலுவாக வழக்காடினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT