உடனடிச்செய்திகள்

Thursday, August 5, 2010

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம் - தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!

தமிழகத்தை நெருங்குகிறது உணவுப்பஞ்சம்
தமிழக உழவர் முன்னணி எச்சரிக்கை!
சிதம்பரம், 05.08.2010.

தமிழகத்தை உணவுப்பஞ்சம் நெருங்குவதற்குள் நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி.வெங்கட்ராமன் பேசினார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று (05.08.2010) காலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

தமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இவ்வாப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள் தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணை நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசினார். இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு செயலில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.

இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT