உடனடிச்செய்திகள்

Monday, November 21, 2011

விலைஉயர்வு: இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு - பெ.மணியரசன் கண்டனம்!

விலைஉயர்வு:

இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கண்டனம்!

 

ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு தாறுமாறாகப் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.  ஒரே அடியில் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தி இருக்கிறது.  மின்சாரக் கட்டணத்தையும் 100 விழுக்காடு உயர்த்த வலியுறுத்தி இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வை மக்கள் வாழ்க்கையின் மீது தமிழக அரசு தொடுத்த கடும் தாக்குதல் என்றே கூற வேண்டும்.

 

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள  இழப்பை ஈடுகட்ட, ஒரு  இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்குள்ள கடன் சுமையைச் சமாளிக்க உங்களை விட்டால் நான் வேறு யாரிடம் போய் கேட்க முடியும்" என்று முதல்வர் செயலலிதா,  "வேறு வழியே இல்லை" என்று கூறுகிறார்.

 

புதிய பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்தால் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் சுமையில் பாதியை நீக்கிவிடலாம்.  நடுவண் அரசு சிறப்பு நிதியும் தரவில்லை. சிறப்புக் கடனும் தரவில்லை என்று முதல்வர் கூறுகிறார். இந்த நிலையில் நடுவண் அரசுக்குப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தும் கம்பெனி வருமான வரியைச் செலுத்தாமல் நிறுத்தி அத்தொகையை அத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபற்றி மக்களிடம் கூறி அவர்களின் வலிமையை தமிழக முதல்வர் இம்முயற்சிக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ளலாம்.

 

தமிழகத்தில் நரிமணம், கோயில்களப்பால், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலை இந்திய அரசின் வரி விதிப்பு இன்றி பன்னாட்டுச் சந்தையின் அசல் விலைக்கு தமிழக அரசுக்குத் தருமாறு நடுவண் அரசை வலியுறுத்தி பெற வேண்டும்.

 

இவ்வாறான முயற்சி எதிலும் இறங்காமல் அகப்பட்டுக் கொண்டவர்கள் தமிழக மக்கள்தான் என்ற எண்ணத்தில்,  உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் உடனடியாக அவர்களால் என்ன செய்யமுடியும் என்ற நினைப்புடன் செயலலிதா பேருந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளார்.

 

பால் விலையை ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ6.25ஆக உயர்த்தி இருப்பது தனியார் பால் விநியோகத்திற்கு மறைமுகமாகத் துணை செய்ய அவர் விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.

 

மின்சாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு பெரிதும் மின்தட இழப்பு (Line Loss) , மின் திருட்டு மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவற்றைச் சரி செய்ய முதல்வர் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.

 

நெய்வேலியில் இருந்து ஒரு நாளைக்கு கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், கேரளத்திற்கு 9 கோடி யூனிட்டும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் மின்சாரம் செல்கிறது. இவை அனைத்தையும் உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற அடிப்படையில் அடக்கவிலைக்குத் தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிப் பெறவேண்டும்.  இதற்கான கோரிக்கையைத் தமிழக முதல்வர் முன்வைக்கவே இல்லை.

 

 

செய்ய வேண்டிய இவற்றையெல்லாம் செய்யாமல், பெருவாரியாகத் தனக்கு வாக்களித்து அதிகாரப் பீடங்களில் அமர்த்திய மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றுவது சிறிதும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல நன்றி கொன்ற செயலும் ஆகும்.  இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசுடன் இணக்கப் போக்கை உருவாக்கிப் புதிய உறவை வளர்த்துக் கொள்வதற்காக முதல்வர் செயலலிதா இந்திய அரசிடம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைக்காமல் இருக்கிறார் என்று கருத வேண்டியுள்ளது.

 

சாராய வணிகம், மணல் வணிகம் அகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு அமோக வருமானம் வந்து கொண்டுள்ளது.  சாராயத்தில் நிகர வருமானம் ஆண்டுக்கு 10ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.  தமிழக அரசு வழங்கும் அனைத்து இலவசங்களின் மொத்தச் செலவு ரூபாய் 7500 கோடி மட்டுமே. எனவே இலவசங்களுக்காக இக்கட்டண உயர்வு என்று கருத முடியாது.

 

கொழுத்த வருமானம் தரும் அனைத்து வரிகளையும் விதித்து வசூலித்துக் கொள்ளும் இந்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுப் போராடாமல் மக்கள் மீது கொடும் பணச்சுமைகளை ஏற்றுவது அறம் அன்று.

 

எனவே தமிழக அரசு புதிதாகச் சுமத்தியுள்ள கட்டண உயர்வுகளை கைவிட்டு நிதி நெருக்கடியைச் சமாளிக்க மேலே சொல்லப்பட்ட வழிகளைக் கையாளுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். 

.                                                                                                                               (பெ.மணியரசன்)

 

இடம் : தஞ்சை

நாள்  : 21.11.2011

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT