உடனடிச்செய்திகள்

Tuesday, November 1, 2011

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்! - பெ.மணியரசன் வேண்டுகோள்!

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

 

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு" கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

 

2008 - 2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறி அரசு, இனப்படுகொலை செய்தது. இனப்படுகொலைக் குற்றவாளிகளாகவும், போர்க்குற்றவாளிகளாகவும் உள்ள இராசபட்சே கும்பலை தளைப்படுத்தி, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; போர் அழிவுக்குப் பிந்தைய காலத்தில், நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் சிங்கள வெறி அரசால் நடத்தப்படவில்லை. ஐ.நா. மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பின் கீ்ழ் ஈழத்தில், துயர் துடைப்புப் பணிகளை செயல்படுத்தி எஞ்சியுள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு, சாவுத் தண்டனை வழங்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடத் துடிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகை முயற்சியை முறியடித்து, அம்மூவரையும் காப்பாற்ற வேண்டும்.

 

மேற்கண்ட மூன்று முகாமையான கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாநாடு நடைபெறுகிறது. கைக்கு எட்டியத் தொலைவில் இருந்தும் நம் இனம் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையோடு இலங்கை அரசால், அழிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும், ஆறாத காயமும் தமிழர்கள் நெஞ்சில் அப்படியே உள்ளன.

 

இப்பொழுது முழுவீச்சில் நாம் செயல்பட்டு, நம் இன மக்களை ஈழத்திலும், தூக்குக் கொட்டடியில் உள்ள தமிழர்களை இங்கும் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு உள்ளது. சாவுத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து முற்றாக நீக்க வேண்டும் என்ற மனித உரிமைக் கடமையும் நம் முன் உள்ளது.

 

எனவே, தமிழின உணர்வாளர்கள், மனித உரிமையில் அக்கறையுள்ளோர் அனைவரும் கோவையில் பெருந்திரளாகக் கூட வேண்டும். நமது கோரிக்கைகளில் உள்ள ஞாயம் அக் கோரிக்கையை ஏந்தி நிற்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மதிக்கப்படும். எனவே, மாநாட்டுக்கு வாருங்கள் தமிழர்களே!


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை

நாள்: 1.11.2011

 
தமிழ்மது said...

மூவர் உயிர் காக்க ஒட்டு மொத்த தமிழகமும் மூண்டேளுவோம்!!!
நாம் போராடுவது உயிர் பிச்சை கேட்டு அல்ல;மறுக்கப்பட்ட நீதிக்கு எதிராக!!!
தமிழர் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் 6ஆம் தேதி அன்று கோவையில்..அணி திரள்வோம்!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT