உடனடிச்செய்திகள்

Friday, June 29, 2012


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர
தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இணைப்பு மொழி என்ற கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை, இந்தியாவைத் தவிர”  என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

மணிவாசகர் பதிப்பகத்தின் நிறுவனர் பேராசிரியர் ச.மெய்யப்பன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சென்னை வண்டலூரில்  நேற்று(28.06.2012) மாலை நடத்தியது.

சென்னை வண்டலூர் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 10ஆம் வகுப்பு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நடைபெற்றது. தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் முகிலை இராச பாண்டியன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான புலவர் த.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார். தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளைச்  செயலாளர் பாவலர் ம.கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைநகர்த் தமிழ் சங்கத் துணைத் தலைவர் புலவர் வெற்றியழகன், தலைமை நிலையச் செயலாளர் புலவர் புஞ்சைத் தமிழரசன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் கு.ப.இளங்கண்ணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கவிதை உறவு இதழாசிரியர் கவிஞர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மாணவர்களுக்குப் பரிசளித்து, சிறப்புரையாற்றினார்.

நிறைவில் உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், பேசியதாவது:

பதிப்புச் செம்மல் பேராசிரியர் மெய்யப்பன் அவர்கள், மெய்யான தமிழ்ப் பற்றாளர். தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளிலும் துணை நின்றவர். நாங்கள் நடத்தி வரும் தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் எஸ்.வி.இராசதுரை, இந்து-இந்தி-இந்தியா என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வந்தார். அதனை நூலாக வெளியிடவேண்டுமென்று நாங்கள் மெய்யப்பனாரை அணுகிய போது அதை வெளியிட்டுத் தந்தார்.

கடற்கரையிலிருந்த கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது அச்சிலையின் மாதிரி வடிவத்தை செய்து வந்து நாங்கள் தோழமை அமைப்புகளோடு சேர்ந்து அதே இடத்தில் அச்சிலையை வைக்கப் போனோம். அப்போது கைது செய்யப்பட்டோம். அதன்பிறகு, பூம்புகாரிலிருந்து மதுரை வரை ஊர்திப் பரப்புரை நடத்தி கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வலியுறுத்தினோம். அப்பொழுது, மக்களிடம் வழங்குவதற்காக நான் எழுதிய கண்ணகி சிலையும் கலை இலக்கியப் பார்வையும் என்ற நூலை அச்சிட்டுத் தருமாறு மெய்யப்பனாரை வேண்டினோம். அவர் 2000 படிகள் அச்சிட்டு அன்பளிப்பாக எங்களிடம் வழங்கினார். சிதம்பரத்தில், அவரை நிறுவனத் தலைவராகக் கொண்டு இயங்கிய “தமிழ்க்காப்பணி“யில் அவருடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் சேர்ந்து செயல்பட்டனர். அவருடைய சாவு இவ்வளவு விரைவில் நடைபெறுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

தமிழ் இனத்தில் பிறந்ததற்காக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மகிழ்ச்சி அடைய வேண்டும். பெருமிதம் கொள்ள வேண்டும். உலகின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் செம்மொழியும் தமிழே. நம்முடைய தமிழ்ச் சமூகம் அறிவியல் சமூகமாக இருந்திருக்கிறது. உலகத்தைக் கடவுள் படைத்தார் எனக் கூறினால் தொல்காப்பியத்தின்படி அது இலக்கணப் பிழையாகும். உலகம் இருக்கிறது என்பதே தொல்காப்பியர் கருத்து.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன வகை சாமிகளை கும்பிட்டார்கள், என்ற நடப்புகளை தொல்காப்பியர் கூறினாரே  தவிர இந்த உலகத்தைக் கடவுள் படைத்தார் என்று கூறவில்லை. அதே போல், மொழியைக் கடவுள் படைத்தார் என்ற கருத்தும் தமிழர்களுக்குக் கிடையாது. தமிழ் மொழியைக் கடவுளாக்கி, தமிழ் வாழ்த்துப் பாடுவது பண்டைக் காலத்தில் நமது மரபில்லை. தமிழ் எழுத்தின் ஓசை ஒவ்வொன்றும் உடல் உறுப்பில் எங்கிருந்து பிறக்கிறது, எப்படி உடல் உறுப்புகள் செயல்படுகின்றன என்பவற்றை மட்டுமே தொல்காப்பியர் கூறினார்.

ஐரோப்பாவில் 13ஆம் நூற்றாண்டில் பிலாலஜி(Philology) என்ற மொழியியல் தோன்றும் வரை, மொழியைக் கடவுள் படைத்தார் என்றே மேலை நாடுகளில் கூறிவந்தனர். சுந்தரம் பிள்ளை அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் புதிதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஒரு போராட்டம் என்ற அளவில் தான்.

இப்படிப்பட்ட, அறிவு மரபுக்கு சொந்தமானவர்கள் நாம் என்பதில் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இந்த மொழியைப் புறக்கணித்து விட்டு, ஆங்கிலத்தை வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும், ஆங்கிலத்திலேயே மனைவியிடம் பேச வேண்டும், வேலைக்காரியிடம் பேச வேண்டும் என்றும், தமிழ் ஒரு மூடநம்பிக்கை மொழி என்றும் முற்போக்குக் கருத்துகள் சிலவற்றை வலியுறுத்திய தலைவர்கள் தமிழ்நாட்டில் கூறிவந்தார்கள்.

இதனால், பாதிக்கப்பட்டத் தமிழர்களில் ஒரு சாரார் தமிழர்களின் இலக்கியச் செழுமையையும், அறிவியல் மரபையும் புறக்கணித்தனர். நம் தாய் மொழியை இழிவாகக் கருதும் மனநோய்க்கு ஆளானார்கள். இந்த மனப்போக்கு இன்று எங்கே கொண்டு வந்து  விட்டுள்ளது? அம்மாவை மம்மி என்றும், அப்பாவை டாடி என்றும் அழைக்கும் அவலத்திற்கு கொண்டு வந்துள்ளது. அம்மாவை மம்மி என்று அழைப்பதை அருவருக்க வேண்டும். அசிங்கமாகக் கருத வேண்டும்.

அன்னை தந்த பாலொழுகும், குழந்தை வாய் தேனொழுக, அம்மா என்று சொன்னதுவும் தமிழன்றோஎன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கூறினார். நம்முடைய வேரிலிருந்து நாம் வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தான் நாம் செழிக்க முடியும். வளர முடியும். அடுத்த மரத்தின் நிழலில் வளரும் செடி, வளர்ச்சியடையாது. நாம் யாராக இருக்கிறோமோ அதிலிருந்தே நாம் வளர வேண்டும். நம் வேரை நறுக்கிவிட்டல்ல. பிடுங்கி எறிந்துவிட்டல்ல.

ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும், இந்தி படித்தால் தான் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் தான் அதிகமானோர் பொறியியல் பட்டம் பெறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வேலையில்லாமல் துன்புறுகிறார்கள். பலர், மாதம் 4000, 5000த்துக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இந்தி மாநிலங்களைச் சேர்ந்த வடவர்கள் அங்கே வேலையில்லாமல், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டில் புகுந்து உயர்சம்பள வேலையிலிருந்து, அத்துக்கூலி வேலை வரை கைப்பற்றி விடுகிறார்கள். தன் சொந்த மக்களுக்கு வேலை தராத இந்தி, தமிழ் மக்களுக்கு வேலை தந்து விடுமா?

எந்த மொழியாக இருந்தாலும், ஒரு மொழி வேலை தந்து விடாது. சமூக அமைப்பு தான் வேலை தரும். தமிழர்கள் மீது ஆங்கில ஆதிக்கத்தை நீடிக்கச் செய்வதற்கும், இந்தித் திணிப்பை ஞாயப்படுத்துவதற்கும் இந்த மொழிகளைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று  கவர்ச்சி வலை வீசுகிறார்கள்.

இந்தியாவுக்கு ஒரு இணைப்பு மொழி வேண்டும் என்கிறார்கள். காங்கிரசுக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ச.க. போன்றவை இந்தி மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். அதற்காக அவர்கள் மும்மொழிக் கொள்கையை முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைக்க வேண்டும் என்று கோரி இருமொழிக் கொள்கை என்று பேசுகிறார்கள்.

மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை, இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை, ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்ற முழக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தலைநகர்த் தமிழ்ச் சங்கமும் நீண்டகாலமாக முழங்கி வருகின்றன. மும்மொழிக் கொள்கையானாலும், இருமொழிக் கொள்கையானாலும், அயல்மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தமிழை அடிமை நிலைக்குத் தள்ளுவதாகும்.

இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாடு உலகத்தில் எங்குமில்லை. சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் இருக்கின்றன. அங்கு இணைப்பு மொழி எதுவும் கிடையாது. 4 மொழிகளும் ஆட்சி மொழிகளே. 4 மொழிகளும் கல்வி மொழிகளே.  வளர்ச்சி அடைந்த 15 மொழிகளைக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று இரசியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு சாரார் கோரினர். இரசிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இலெனின் அக்கருத்தை எதிர்த்தார். ஒரு மொழியை இணைப்பு மொழியாக்கிவிட்டால், அது மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும் என்று இலெனின் கூறி இரசிய மொழியை இணைப்பு மொழியாக்க மறுத்துவிட்டார். அது மட்டுமின்றி, இணைப்பு மொழி என்ற ஒரு கோட்பாட்டையே எதிர்த்தார் இலெனின்.

இன்றைக்கும் கூட, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளில், பள்ளிப் படிப்பில் ஆங்கிலமும், ஒரு மொழிப் பாடமாக இருக்கிறது. ஆனால், அந்நாடுகளில் ஆங்கிலத்தில் கடைத்தெருவிலோ, அலுவலகங்களிலோ பேசுவதை கவுரவக் குறைவாக கருதுகிறார்கள்.

எனவே, மெய்யப்பனார் நினைவைப் போற்றும் இந்நாளில், அதுவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் இவ்விழாவில் ஒருமொழிக் கொள்கையை ஏற்று, நம் தமிழ் மொழியே கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் விரிவடையச் செய்ய நாம் உறுதியேற்போம். இணைப்பு மொழி என்ற மாயக் கோட்பாட்டைப் புறந்தள்ளுவோம்.

இணைப்பு மொழி இல்லையென்றால் பல மொழிகள் பேசும் நாட்டில் மக்களிடையே இணைப்பு ஏற்படாது என்று இரசியாவில் கம்யூனிஸ்டுகளில் ஒரு சாரார் கூறிவந்தனர். அக்கருத்தை மறுத்த இலெனின், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒருமொழி பேசும் ஓரின மக்கள், வேறு மொழி பேசும் தேசங்களோடும் மக்களோடும் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்றார்.

எனவே, நாமும் ஒருமொழிக் கொள்கைக்கு உறுதியாகக் குரல் கொடுப்போம். போராடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.



நிறைவில், தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பொருளாளர் வழக்கறிஞர் ஞா.சிறீதரன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ் உணர்வாளர்களும், அறிஞர் பெருமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். 

(செய்தி – த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: மா.பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT