"காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்"
தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் திரு. கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.
காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார். பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது. தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால் காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.
இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.
Post a Comment