"தமிழக அரசே! அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி
மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்றாதே!"
தமிழகமெங்கும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில்
17.07.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என்பதை வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்மொழி நம் தாய்மொழி
மட்டுமன்று; தமிழ்நாட்டின் ஆட்சிமொழி; தமிழகத்தின் தேசிய மொழி! தமிழ்நாட்டின் கல்விக்
கூடங்களிலிருந்து தமிழ்மொழியை அப்புறப்படுத்துவதில், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுடன்
தமிழக அரசும் போட்டி போட முனைந்துள்ளது.
2013-2014 கல்வி ஆண்டில்
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி
வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைப் புதிதாகத் தொடங்குகிறது தமிழக
அரசு. கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் ஆங்கில
வழியில் கற்பிக்க உள்ளது.
தமிழக அரசின் ஆங்கிலத்
திணிப்பானது எதிர்காலத்தில் கல்வி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தமிழைப் பயன்பாடற்ற
மொழியாக்கிவிடும்.
தமிழை இழந்த பின் தமிழ்மக்கள்
தங்கள் மண்ணிலேயே அயலார்க்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைகளாகி, ஆட்சி உரிமையை
இழந்த உதிரிக் கூட்டமாக மாறிவிடுவர்.
தாய்மொழி வழியில் கற்போர்தாம்
சொந்த சிந்தனை வளர்ச்சி பெறுவர்; புதியன படைப்பர் என்று குழந்தை உளவியல் மற்றும் கல்வி
உளவியல் அறிஞர்கள் உலகுதழுவிய அளவில் வரையறுத்துள்ளனர். அயல்மொழிவழி படிப்பது நெட்டுருப்போட்டு
மதிப்பெண் பெறும் தன்மையைத்தான் உருவாக்கும்.
வளர்ச்சியடைந்த பிரான்சு,
செர்மனி, சப்பான், ரசியா, சீனா போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகளிலும்
ஆங்கில வழிக் கல்வி இல்லை. அந்தந்த நாட்டின் தாய் மொழிக் கல்வியே இருக்கிறது.
தமிழ்வழிக்கல்வி மூலம்
தான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இனம் அறிவிலும் வணிகத்திலும் செழித்திருந்தது!
அயல்மொழித் திணிப்பைத்
தடுக்க - தாய்மொழியைக் காக்க, போராடி முந்நூறு பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டிற்குப்
பலியானதும், பத்துப் பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்ததும் தமிழ்நாட்டில்
மட்டுமே நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஈகமாகும்.
தமிழக அரசுக்கு நாம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.
1.
அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே
தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்.
பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தைப் போக்கப் பின் வரும் நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்:
அ.
முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும் (language) கட்டாயப் பயிற்று மொழியாகவும்
(Medium of Instruction) இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அரசு ஆணை(G.O.)
போடுவது கூடாது.
ஆ.
ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அல்லது பிற மொழியை மொழிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.
2.
ஒன்று
முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் எண்பது விழுக்காடும்,
உயர்கல்விச் சேர்க்கையில் எண்பது விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.
3.
அரசுப்
பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு,
இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.
4.
பத்து
மற்றும் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகமாகக் காட்டி, கல்விக் கொள்ளையைத்
தீவிரப்படுத்துவதற்காக தனியார் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தையும்
+1 இல் +2 பாடத்தையும் நடத்துகிறார்கள். அறிவு வளர்ச்சிக்கு எதிரான இந்தக் கல்விச்
சூதாட்டத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் பத்தாம்
வகுப்புப் பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்க வேண்டும். +1 வகுப்பிற்கும்
அரசு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும்.
5.
கிராமப்புற
மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 விழுக்காடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.
6.
நடுவண்
அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும்
மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி
அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.
தமிழ்ப் பெருமக்களே!
தமிழ்வழிக் கல்வி கோருவது
தமிழைப் பெருமைபடுத்துவதற்காக அல்ல; தமிழர்கள் பெருமை பெறுவதற்காக!
ஒடுக்கப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களுக்கும் பெண்களுக்கும் சமூக
நீதி வழங்குவது தமிழ்வழிக் கல்வியே!
பல்வேறு அரசியல் மற்றும்
தமிழ் அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். மேற்கண்ட
கோரிக்கைகளை முன்வைத்து 28.5.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த நடவடிக்கையாகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில்
17.6.2013 அன்று ஆர்பாட்டம் நடத்துகிறோம்.
இனம் காக்க, மொழி காக்க,
எதிர்கால வாழ்வுரிமை காக்க எழுச்சி பெறுவீர் தமிழர்களே! ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!
இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment